For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி மீதான உரிமை மீறல் அறிக்கையை கிழித்தெறிந்த திமுக... அமளி துமளியான சட்டசபை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்த விசாரணை அறிக்கையை, திமுக உறுப்பினர்கள் கிழித்தெறிந்து கூச்சலிட்டதால் அமளி துமளியானது. தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தது சர்வாதிகாரமானது என அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் தான் பேசாத விஷயங்களை பேசியதாக கருணாநிதி அறிக்கையில் கூறி இருப்பதாகவும் அவர் மீது அவை உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாகவும் கடந்த செப்டம்பர் 4ம்தேதி சபாநாயகர் தனபாலிடம் அமைச்சர் வைத்திலிங்கம் கடிதம் கொடுத்திருந்தார். இந்த பிரச்சனை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த விவர அறிக்கையை புத்தகமாக அச்சிட்டு சட்டசபையில் இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்தார்.

அப்போது திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமைக்குழு பேரவை உரிமைக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

அமளிதுமளியான சட்டசபை

அமளிதுமளியான சட்டசபை

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். சிலர் மீண்டும் புத்தகத்தை கிழித்து வீசினார்கள். சபாநாயகர் ஒழிக, சர்வாதிகாரம் ஒழிக என்று சபையில் முழக்கமிட்டனர். சபாநாயகர் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்களை குண்டுகட்டாக அவைக் காவலர்கள் வெளியேற்றனர்.

எதிர்கட்சிகள் வெளிநடப்பு

எதிர்கட்சிகள் வெளிநடப்பு

இதைத் தொடர்ந்து, கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் நிராகரித்தார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சர்வாதிகார நடவடிக்கை

சர்வாதிகார நடவடிக்கை

அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபையில் இன்று கேள்வி நேரம்
முடிந்ததும் சபை உரிமைக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றி துரைமுருகன் பேச
முயன்றார். அவரை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. அவருக்கு பேச அனுமதி அளிக்கும்படி
நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் சபாநாயகர் எங்களை வெளியேற்றம் செய்து விட்டார்.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

தலைவர் கலைஞர் மீது உரிமை மீறல் கொண்டு வந்திருக்கிறார்கள். அமைச்சர் வைத்திலிங்கம் பற்றி
தலைவர் கலைஞர் கட்டுரை எழுதி இருந்தார். அதன் மீது அவைக்குழு இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளது. வரம்பு மீறி முடிவு எடுத்து அந்த அறிக்கையை இந்த அவையில் வைத்துள்ளது.
ஏற்கனவே இந்த அரசு எதிர்க்கட்சிகள் மீதும், ஏடுகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்துக்
கொண்டே வருகிறது.

அவசர நடவடிக்கை

அவசர நடவடிக்கை

அவை உரிமைக் குழுவுக்கு கருணாநிதி ஏற்கனவே விளக்க கடிதம் எழுதிய பிறகும் கண்டனம்
தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த சட்டசபை கூட்டம் 3 நாட்கள் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அதில் 2
நாட்கள் விவாதமும், 1 நாள் பதிலுரையும் என்று அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்த
கூட்டத்தை 5 நாட்கள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அதை ஏற்கவில்லை. ஆனால் அவை
உரிமைக்குழு தலைவர் கருணாநிதி மீது அவசர அவசரமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

அரைக்க அரைக்க மணம் வீசும்

அரைக்க அரைக்க மணம் வீசும்

சந்தனத்தை அரைக்க அரைக்கத்தான் மணம் வீசும். அதனால் கலைஞர் மீதான இந்த நடவடிக்கை அவரை
மேலும் உயர்த்தும். இதுபற்றியெல்லாம் பேசுவதற்கு நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால்
பேசுவதற்கு அனுமதி தராமல் மறுத்து சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

பிச்சைக்காரர் திட்டம்

பிச்சைக்காரர் திட்டம்

இதே அமைச்சர் வைத்திலிங்கம்தான் சத்துணவுத் திட்டத்தை பிச்சைக்காரர் திட்டம் என்று கூறினார்.
இது தொடர்பாக அவை உரிமை மீறல் குழுவிடம் நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுத்திருந்தோம்.
ஆனால் அதற்கு பதில் இல்லை.

பழிவாங்கும் நடவடிக்கை

பழிவாங்கும் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போக்குவரத்து ஊழியர்கள் பற்றி ஒரு கருத்து
தெரிவித்திருந்தார். அதுபற்றி எ.வ.வேலு அவை உரிமைக்குழுவிடம் நடவடிக்கை எடுக்க
கடிதம் கொடுத்தார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் அரசியல் பழிவாங்கும்
நோக்கத்துடன் தலைவர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது இது
வெட்கக்கேடானது என்றார் ஸ்டாலின். அறிக்கை கிழிப்பு, கூச்சல், குழப்பம் காரணமாக இன்று
சட்டசபை அமளி, துமளியானது.

English summary
Tamil Nadu Assembly speaker P Dhanapal on Friday ordered the eviction of DMK legislators from the House, after they created ruckus protesting a report submitted against their leader M Karunanidhi. Deputy speaker Pollachi Jayaraman, who heads the Privileges Committee of the Tamil Nadu Assembly, tabled the report on a privilege motion against Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X