For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் கலெக்டர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிகள் கைது செய்யப்படுவதற்கு துணை போகும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் இந்த சட்டங்களில் உடனடியாக திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Dr. Ramadoss urges Government revise Goondas and NSA act

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

''குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்பு காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 212 பேரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடுப்புக் காவல் சட்டங்கள் ஆட்சியாளர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் நிலையிலும் பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கான ஆயுதங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மனித உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் எதிரானவை; அவற்றை வேறு வழியே இல்லாத சூழலில் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு கால கட்டங்களில் நான் வலியுறுத்தியுள்ளேன். ஆனால், மனித உரிமைகளை மதிக்காத அ.தி.மு.க. அரசு அரசியல் எதிரிகளை பழிதீர்ப்பதற்காக இந்த சட்டங்களை பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

அப்பாவிகள் சிறையில் அடைப்பு

கடந்த ஆண்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உட்பட பா.ம.க.வைச் சேர்ந்த அப்பாவிகள் 134 பேரை தடுப்புக்காவல் சட்டத்தில் ஜெயலலிதா அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், இந்த நடவடிக்கை சரியானதல்ல என்று கூறி அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

6000 பேர் மீது குண்டர் சட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதும், ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் எத்தனையோ முறை இந்தச் சட்டங்கள் ஏவப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 95 விழுக்காட்டிற்கும் கூடுதலானவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் இல்லை என்று கூறி அவர்களை உயர் நீதிமன்றமும், அறிவுரைக் கழகமும் விடுதலை செய்திருக்கின்றன.

மனித உரிமை மீறல்

கொலை உள்ளிட்ட குற்றங்களில் கைது செய்யப்பட்டோரைக் கூட 24 மணி நேரத்திற்கும் மேலாக காவல் துறையினர் அவர்களின் காவலில் வைத்திருக்க முடியாது. அதன்பிறகு அவர்களின் நிலையை நீதிமன்றம் தான் தீர்மானிக்கும். ஆனால், தடுப்புக்காவல் சட்டங்களைப் பயன்படுத்தி எவர் ஒருவரையும் கைது செய்து விசாரணையே இல்லாமல் ஓராண்டு வரை சிறையில் அடைக்க முடியும். இது எவ்வளவு கொடிய மனித உரிமை மீறல்? தடுப்புக் காவல் சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் அர்த்தமுள்ளது என்றாலும், கொலைகாரனின் கைகளில் சிக்கிய மருத்துவத் துறை கத்தி எப்படி பயன்படுத்தப்படுமோ அப்படித்தான் இந்தச் சட்டங்கள் இப்போதுள்ள ஆட்சியாளர்களால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

212 பேர் விடுதலை

கொடிய சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்டு மீட்க யாருமின்றி தவித்த 212 பேரை ஒரே நாளில் விடுதலை செய்ததன் மூலம் இருண்டு கிடந்த அவர்களின் வாழ்வில் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு ஆகும்.

மனித நேயத்துடன் இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இதேபோல், தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் மற்ற அப்பாவிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

விரைவில் தீர்வு

மேலும், தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு வரும் போதே, கைதானவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் கணிக்க முடிந்தால், அப்போதே கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மற்ற தருணங்களில் தடுப்புக் காவல் கைதுக்கு எதிரான வழக்கு விசாரணையை அதிகபட்சமாக 2 வாரங்களில் முடித்து தீர்ப்பளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆட்சியாளர்கள் விசுவாசம்

தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி எவரேனும் தவறாக கைதுசெய்யப்பட்டால் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்காகத் தான் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட அறிவுரைக் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தடுப்புக் காவல் சட்டத்தின் தவறான பயன்பாட்டைக் கண்டிப்பதும், அதற்குக் காரணமானவர்களை தண்டிப்பதும் கூட இந்த அமைப்பின் கடமையாகும். இந்த பணியை அறிவுரைக் கழகம் சரியாக செய்தாலே தவறுகள் தடுக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த அமைப்பில் இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சட்டத்திற்கு விசுவாசமாக இருப்பதைவிட தங்களை பதவியில் அமர்த்திய ஆட்சியாளர்களுக்கு தான் விசுவாசமாக இருக்கின்றனர்.

பழிவாங்கும் ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளைப் போலவே சட்டத்திற்கு எதிராகவும், நேர்மையில்லாமலும் செயல்பட்டு, அரசின் செயலுக்குத் துணை போகிறார்கள்; அதன்மூலம் அப்பாவிகள் சிறையில்வாட காரணமாகிறார்கள். உயர் நீதிமன்றம் விடுதலை செய்த 212 பேரில் 157 பேர் அறிவுரைக் கழகத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டவர்கள். ஆனால், இப்போது அவர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம் அறிவுரைக் கழகத்தின் தீர்ப்பு தவறு என்பது உறுதியாகியுள்ளது. தங்களின் கடமையை சரியாக செய்யாமல், ஆட்சியாளர்களின் பழிவாங்கலுக்கு துணை போனதற்காக அறிவுரைக் கழகத்தின் உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும்.

சட்ட திருத்தம் தேவை

பழிவாங்கும் நோக்குடன் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்யப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் சட்டவிரோத உத்தரவுக்கு பணிந்து, மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் மனதை முழுமையாக செலுத்தாமல் எந்திரத்தனமாக கைது உத்தரவை பிறப்பிப்பதால் தான் தடுப்புக் காவல் சட்டங்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிகள் கைது செய்யப்படுவதற்கு துணை போகும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் இந்த சட்டங்களில் உடனடியாக திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

English summary
PMK Founder doctor Ramadoss urged, federal and state governments to take action against district collectors and police officers immediately to revise the laws of the goondas and NSA act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X