எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம்
சென்னை: ஒரு காலத்தில் கடும் எதிரிகளாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும்... இன்று ஒரே வாகனத்தில் உட்கார்ந்து வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.. கடந்த மாதங்களில் டிடிவி தினகரனை கண்காணிக்க எடப்பாடி தரப்பு ரகசிய குழு அமைத்ததாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தன.. அதே நேரத்தில், இருவருக்கும் இடையிலான இந்த "திரைமறைவு மோதல்" இப்போது கூட்டணியாக மாறி, அதே தலைவர்கள் பிரசார மேடையில் ஒன்றாக தோன்றியிருப்பது அரசியல் மாற்றத்தின் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது..!!!
இத்தனை காலமும், "அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன்; எடப்பாடியை முதலமைச்சராக்குவதற்கு தூக்கில் தொங்கி விடுவேன்" என்று இதே தஞ்சை மண்ணில் ஆவேசமாகப் பேசியவர் டிடிவி தினகரன்.

ஆனால், நேற்று அதே மண்ணில் எடப்பாடி பழனிசாமியுடன் தோளோடு தோள் நின்று பிரசாரம் மேற்கொண்டார். மேடையில் பேசிய தினகரன், "எங்களுக்குள் இருந்தது அண்ணன், தம்பி சண்டைதான். தற்போது தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் இணைந்துவிட்டோம். அம்மாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் உருவாக்கவே இந்த இணைவு" என உருக்கமாகப் பேசி, கடந்த கால கசப்புகளை மறைக்க முயன்றார்.
கூட்டணியின் பலமும் - நிலவும் நிழல் யுத்தமும்
வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார். "அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், சாலையோர வியாபாரிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, மற்றும் பயிர்க்கடன் ரத்து" எனப் பல திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றிய பெருமை தங்களையே சாரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருந்தாலும், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நெல் ஊக்கத்தொகையை நிறுத்தச் சொன்ன விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்தது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வராதது, டெல்டா விவசாயிகள் மத்தியில் ஒருவிதமான ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசியலின் எதார்த்தத்தை பொறுத்தவரை, அதிமுக - அமமுக இணைப்பு என்பது பாஜகவின் மேலிட அழுத்தத்தாலேயே சாத்தியமானது என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது...
டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
தென் மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகள் சிதறாமல் தடுப்பதே இந்தக் கூட்டணியின் பிரதான நோக்கம். கடந்த காலங்களில் இவர்களது தனித்தனிப் போட்டி திமுகவிற்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், தற்போது தலைவர்கள் கை கோர்த்தாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே இன்னும் முழுமையான இணக்கம் ஏற்படவில்லை என்பதுதான் கள நிலவரம்.
அதனால்தான், எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகவும், தினகரனுடன் நெருக்கம் காட்டும் நிர்வாகிகள் குறித்து விசாரிக்க ரகசிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளதாகவும் கடந்த மாதம் தகவல்கள் கசிந்தன..
இரு துருவங்களும் ஒரே வண்டியில்
அதுமட்டுமல்ல, தஞ்சை பிரச்சாரத்திற்கு அமமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததும் கூட்டணியின் பலவீனத்தையே காட்டியது.. மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் வேலை பார்ப்பது, அதிமுக வேட்பாளர்களுக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காதது என அமமுகவினர் ஒருவித மவுனப் புரட்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கசியாமல் இல்லை
ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைத்து அதிருப்திகளையும் தள்ளி வைத்துவிட்டு, 2 தலைவர்களும் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.. . அன்று எடப்பாடிக்கு எதிராக பேசிய அதே இடத்தில், இன்று அதிகாரத்திற்காகப் பக்கத்தில் அமர்ந்திருப்பது அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு துருவங்களும் உண்மையாகவே மனதார இணைந்தால், அது அந்தப் கூட்டணிக்கு இமாலய பலத்தைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வெறும் அட்ஜெஸ்ட்மெண்ட் ?
கடந்த காலங்களில் தனித்தனியே போட்டியிட்டு வாக்குகள் சிதறியதால் இழந்த வெற்றிகளை, இந்த ஒருங்கிணைப்பு மீண்டும் மீட்டெடுக்க உதவும்; குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இவர்களது கூட்டு பலம் எதிர்த்தரப்பிற்கு பெரும் சவாலாக அமையும். தலைவர்களின் கைகோர்ப்பு அடிமட்ட தொண்டர்களிடையே ஒரு புதிய உற்சாகத்தை பாய்ச்சி, தேர்தல் பணிகளில் தொய்வில்லாத வேகத்தை கண்டிப்பாக உருவாக்கும்..
எனினும், இவர்கள் வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் இணையாமல் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டால் மட்டுமே, அந்தப் பலம் நிலையான வெற்றியாக மாறும்; இல்லையெனில் இது ஒரு தற்காலிக அரசியல் அட்ஜஸ்ட்மென்ட்டாகவே பார்க்கப்படும்.... பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications