For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு: இது தான் காவல்துறை செயல்படும் லட்சணமா?: ஸ்டாலின்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தான் ஜெயலலிதா ஆட்சியில் "காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்படும்" லட்சணமா? என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Even after bomb blasts, Jaya is relaxing in Kodandu: MK Stalin

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி போரூர் ஏரியில் வீசப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இத்தனைக்கும் கொலை செய்யப்பட்ட தன் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி அவரது பெற்றோர் காவல்துறைக்கு முன்கூட்டியே புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையின் அலட்சியத்தால் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு சாஃப்ட்வேர் என்ஜினியர் உமாமகேஸ்வரியும் இப்படி காவல்துறையின் அலட்சியத்தால் கொலை செய்யப்பட்டார்.

வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, வீட்டை விட்டு வேலைக்கு போகும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. "நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்ல முடியும்" என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறினார். ஆனால் இன்று பட்டப் பகலிலேயே பெண்கள் தனியாக நடமாட முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஒரு பெண் முதல்வர் ஆட்சியிலேயே நிலவுவது வேதனைக்குறியது. மிகுந்த கவலைக்குரியது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன், "காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் செயல்பட்டு வருகிறது" என்றும், "தீவிரவாதம் தமிழகத்தில் தலை தூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது" எனவும் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். மே மாதம் 2-ம் தேதி விடுத்த அவரது அறிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் மக்களை பதற வைக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என்ற கேள்வி தான் எழுகிறது. கொலையும், குண்டு வெடிப்பும், குண்டு வீசி கொள்ளை அடிக்க முயற்சியும் தான் ஜெயலலலிதா ஆட்சியில் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளாக மாறி விட்டது. இது தான், "காவல்துறை தனது ஆட்சியில் முன் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது" என்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையின் லட்சணமா?.

மே மாதத்தில் மட்டும்-

1.5.2014 அன்று சென்னை சென்டிரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு.. அதில் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டார். 14-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

2.5.2014 அன்று தமிழக காவல்துறை முன் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விட்டார்.

3.5.2014 அன்று சிதம்பரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருக்கும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து அந்தப் பகுதியே பீதியில் இருந்து இன்னும் மீளவில்லை. அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளிகளில் முக்கியமான ஒருவர் 13-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தேடப்படுபவர். அவரை தேடி கண்டுபிடித்து காவல்துறை கைது செய்யவில்லை. 13க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி சுதந்திரமாக ஆறு மாதம் சிதம்பரத்தில் தங்கி வெடிகுண்டு தயாரித்துள்ளார் என்றால் இதுதான் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது என்று ஜெயலலிதா கூறியதற்கு அடையாளமா?

4.5.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் "பாங்க் ஆப் மைசூர்" வங்கி கிளையின் ஏ.டி.எம். எந்திரம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டு விட்டது. வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கலாச்சாரம் அதிமுக ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. இது தான் ஜெயலலிதா ஆட்சியில் "காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்படும்" லட்சணமா?

5.5.2014 அன்று வெளிவந்துள்ள செய்தியின்படி, கொலை செய்யப்பட்ட ரேகாவின் பெற்றோர் முன்கூட்டியே காவல்துறைக்கு புகார் கொடுத்தும், அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதுதான் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் முறையா?

நான் இதற்கெல்லாம் தமிழக காவல்துறை சரியில்லை என்று சொல்ல மாட்டேன். தமிழக காவல்துறை ஸ்காட்லான்ட் யார்டுக்கு இணையான காவல்துறைதான். ஆனால் அதை வழிநடத்த வேண்டிய அத்துறையின் அமைச்சர் குண்டு வெடிப்பு நடந்த பிறகு கூட கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தால் அந்த துறைதான் என்ன செய்யும்? கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே "எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது" "காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது" என்றெல்லாம் "சாய்வு நாற்காலி முதலமைச்சர்" போல் ஜெயலலிதா அறிக்கைவிடாமல் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் பணியில் உரிய அக்கறை செலுத்த வேண்டும்.

தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க, உண்மையிலேயே சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றி மக்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்த ஜெயலலிதா தமிழக காவல்துறைக்கு உரிய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK treasurer MK Stalin wants CM Jayalalithaa to guide the police department properly by staying in Chennai and not in Kodanadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X