For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய் சொன்னா போஜனம்.. யார் சொன்னது.. வாயை மூடு மாமே.. பெரிய பேமண்ட்டே கிடைக்குது!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முறை காமராஜர் காரில் சென்றுகொண்டிருந்தபோது... என்று ஆரம்பித்தாலே நாம உஷாராயிடனும். இன்னைக்கு வாட்ஸ் அப்பில் உலா வருவதில் உண்மை எது, பொய் எது என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைஞ்சிருக்கு.

உண்மை வீட்டுக்கு வர்ரதுக்குள்ளே, பொய் ஊரை ரவுண்டு அடிச்சிட்டு வந்துடும்னு சொல்வாங்க. அது இன்னைக்கு தேதிக்கு 100 சதவீதம் உண்மை. அதெல்லாம் சரிங்க, இப்படி பொய் சொல்றதுனால யாருக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? அப்படின்னா நீங்க உலகம் தெரியாத அப்பாவின்னு அர்த்தம்.

பொய் செய்திகளை உருவாக்குவதும், அதை பரப்புவதும் இன்னைக்கு மிகப்பெரிய தொழிலாகவே நடந்துகிட்டு இருக்கு. எங்கே? உலகம் முழுக்க. செய்தி என்பதை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படித்து, பார்த்துக் கொண்டிருந்த காலம் வரை பொய் செய்திகள் குறைவாகவே இருந்தன.

உறுதிப்படுத்தாமல்

உறுதிப்படுத்தாமல்

காரணம், ஒரு செய்தியை பிரசுரிப்பதற்கு முன் அல்லது ஒளிபரப்புவதற்கு முன், அந்த நிறுவனத்தின் ஆசிரியர் குழு அதனை பல்வேறு வகைகளிலும் உறுதிப்படுத்த முயற்சிக்கும். அப்படி உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அச்சில் ஏற முடியாது. ஆனால் இணையம் வந்த பிறகு, ஆளுக்கு ஒரு ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்ட், வாட்ஸ் அப் என ஆனதும் எல்லோருமே செய்தியாளர்களாக மாறிவிட்டனர். உங்கள் ஊரில் நடந்த, உங்களை பாதித்த செய்தியை உங்கள் பார்வையில் நீங்கள் பதிவிடலாம். அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அதை எந்த பத்திரிகை ஆசிரியரும் எடிட் செய்ய முடியாது. இங்கிருந்துதான் பொய் செய்தி என்ற பூதம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

பொய்கள் பலவிதம்

பொய்கள் பலவிதம்

பொய் செய்திகளில் நிறைய விதங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கவனத்தை கவர்வதற்காக பொய் சொல்வது. நீங்கள் ஏதேனும் முக்கியமான செய்தியை இணையத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் முப்பதே நாட்களில் 30 கிலோ எடையை குறைக்க முடியும், நான் கேரண்டி என்று சிக்கென ஒல்லியான பெண் சிரித்தபடி போஸ் கொடுக்கும் செய்தி இருக்கும். இதுபத்தி மேலும் தெரிஞ்சிக்க இங்கே கிளிக் பண்ணுங்க என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால், அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்திற்கு உங்களை அலாக்காக தூக்கிக்கொண்டு போய் விட்டுவிடும். அப்புறம், அங்கிருக்கும் சேவைகள், கவர்ச்சிகர கட்டணங்கள் ஆகியவற்றில் சிக்கி நீங்கள் விட்டில் பூச்சியாய் விழுகிறீர்களா, வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு ஓடிவந்து விடுகிறீர்களா என்பது உங்கள் திறமையை பொருத்தது. இதாவது பரவாயில்லை, வியாபாரத்திற்காக இருப்பதை சற்று மிகையாக சொல்வது.

பொய்களில் எத்தனை நிறமய்யா

பொய்களில் எத்தனை நிறமய்யா

அடுத்த வகை பொய் செய்திதான் ரொம்ப ஆபத்தானது. இது பிரச்சார வகையை சேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியை அல்லது அரசியல் பிரமுகரை குறிவைத்து பொய் செய்திகளை பரப்புவது. அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது அரசியல் பிரமுகருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் சொல்வது. குஜராத் பேருந்து நிலையம் என்ற பெயரில் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் ஹை டெக் பேருந்து நிலையத்தின் படத்தை பகிர்வது, எப்போதோ நடந்த ஒரு தாக்குதல் வீடியோவை போட்டு மாட்டுக்கறி வைத்திருந்ததால் தாக்கப்பட்ட அப்பாவி என்று பீதியை கிளப்புவது எல்லாம் இந்த வகையை சேர்ந்ததுதான்.

ஈஸியாக பரவக் கூடிய செய்திகள்

ஈஸியாக பரவக் கூடிய செய்திகள்

இது போன்ற செய்திகளுக்கு பரவும் தன்மை அதிகம். அதனால் அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் ஆராயாமல் மக்கள் அதை அதிகம் பகிர்ந்துகொண்டே இருப்பார்கள். பல பெரிய கலவரங்களுக்கு இதுபோன்ற வீடியோக்களே காரணமாகிவிடுகின்றன. இதனால்தான் பிரச்னை என்ற உடன் இப்போதெல்லாம இணைய இணைப்பை துண்டித்துவிடுகிறார்கள். இவை எல்லாம் அரசியல் ரீதியாக யாருக்கோ மிகப்பெரிய பலன்களை அளித்துக் கொண்டிருக்கும் பொய் செய்திகள். இதை உருவாக்குவோருக்கும், பரப்புவோருக்கும் அந்த கட்சிகள் சார்பில் பெரிய அமவுண்ட் கிடைத்துவிடும். கட்சி பேதமின்றி உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் இப்படி அடிக்கடி பொய் செய்திகளை பரப்பி அந்த தணலில் குளிர்காய்கின்றனர்.

மீதி பொய்

மீதி பொய்

அடுத்த வகை. பாதி உண்மையை மட்டும் சொல்வது. இதுவும் ரொம்ப ஆபத்தானதுதான். அண்மையில் ஒரு போலீஸ்காரர் சைக்கிளில் வந்த சிறுவனை மடக்கி ஓரமாக நிற்க வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாக ஓடியது. அடப்பாவி, சைக்கிளில் வந்தா கூட விட மாட்டீங்களா, சின்ன பையனிடமும் லஞ்சம் வாங்குறீங்களா என்றெல்லாம் இணையவாசிகள் கொதித்து கொந்தளித்தனர். ஆனால் இது பாதி உண்மைதான். முழு உண்மை அடுத்த நாள் வெளியில் வந்தது. அதாவது அந்த சிறுவன் இரண்டு கைகளையும் விட்டுவிட்டு நடுரோட்டில் சாகசம் காட்டியிருக்கிறான். இதைப் பார்த்த போலீஸ்காரர் அவனை மடக்கி, கொஞ்ச நேரம் ஓரமாக நிற்க வைத்து பின்னர் அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார்.

திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

நல்லது செய்த ஒருத்தரை இது தெரியாமல் ஒரு நாள் முழுக்க திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள். யாரோ சிலர் தன் சுயலாபத்திற்காக அந்த போலீஸ்காரருக்கு எதிராக வெளியிட்ட எடிட் செய்த வீடியோவை எந்த காரணமும் இல்லாமல் ஊரே பரப்பிக் கொண்டிருந்ததுதான் வேடிக்கை. முன்பெல்லாம் யாராவது அகப்பட்டால் எல்லாரும் சேர்ந்து தர்ம அடி அடிப்பார்கள். இப்போதெல்லாம் அதை நம்மாட்கள் இணையத்தில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

குழப்பங்கள்

குழப்பங்கள்

இப்படி வகைவகையாக பரவும் பொய் செய்திகள், உலகம் முழுவதும் பல்வேறு குழப்பங்களை விளைவிக்க ஆரம்பித்துவிட்டன. இதனையடுத்து இவற்றிற்கு கடிவாளம் போடும் பணி விறுவிறுப்படைய ஆரம்பித்திருக்கிறது. அண்மையில், ட்விட்டர் நிறுவனம் இப்படி பொய் செய்தி பரப்பும் ஆயிரக்கணக்கான போலி அக்கவுண்டுகளை கண்டுபிடித்து அழித்திருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக் ஆகிய இணைய ஜாம்பவான்களும் பொய் செய்திகளை தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. இவர்களைத் தவிர நிறைய தன்னார்வலர்களும் உண்மை செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான Fact Checking இணையதளங்களை ஆரம்பித்துவிட்டனர். எனவே நம்மிடம் இருக்கும் செய்தி உண்மையா என்பதை இந்த இணையதளங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

புகையுமா

புகையுமா

நெருப்பில்லாம புகையுமா என்ற கேட்போம் இல்லையா? அதுதான் இந்த பொய் செய்தி பரப்புவோரின் மூலதனம். பச்சை பொய் என்று படிக்கும்போதே தெரிந்தாலும், ஒருவேளை இதுல ஏதாவது கொஞ்சம் உண்மை இருக்குமோ என்று தோன்றும். எதுக்கும் தெரிஞ்சவங்களை அலர்ட் பண்ணி வைப்போம் என்று ஷேர் செய்துவிடுவோம். இப்படிதான் பொய் ஊரெல்லாம் உல்லாசமாக உலா வருகிறது. மாசிடோனியாவில் உள்ள இளைஞர்கள் பலர் இதை ஒரு குடிசைத் தொழில் போலவே செய்கிறார்களாம். ஏதாவது பிரபலமான பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பிக்க வேண்டியது. அதில் அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொய் செய்திகளை பரப்புவது. அதை ஃபேஸ்புக் மூலம் மேலும் மேலும் பரப்புவது. இவற்றின் மூலம் தனது இணையதளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் உயர்த்திக் கொண்டு, கூகுள் போன்ற நிறுவனங்கள் விளம்பரம் மூலம் தரும் ஆயிரக்கணக்கான டாலர்களை பெறுவது. இதுதான் இவர்களின் பிசினஸ் மாடல்.

தீ போல பரவும்

தீ போல பரவும்

இவர்கள் எழுதும் செய்திகள் எல்லாம் காட்டுத் தீ போல பரவும். ஏன்னா மேட்டர் அப்படி. உதாரணத்திற்கு கடந்த அமெரிக்க தேர்தலின் போது அவர்கள் எழுதிய ஒரு செய்தி, "ஹிலாரி கிளிண்டன் ஏற்கனவே இறந்துவிட்டார். இப்போது இருப்பது அவரின் குளோனிங்" இந்த ரேஞ்சில்தான் எல்லா செய்தியுமே இருக்கும். இதுபோன்ற பொய் செய்தி எழுதுவதையே முழு நேர வேலையாக பார்க்கும் டிரெண்ட் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. எனவே, நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். எதையாவது ஷேர் செய்வதற்கு முன் இன்னும் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும். இந்த செய்தியை பரப்புவர்களுக்கு உள்நோக்கம் இருக்கலாம், நாம் ஏன் தேவையே இல்லாமல் அதற்கு பலியாக வேண்டும்.

எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது, எலிப்புழுக்கை ஏன் கூட காயுது என்ற சொலவடையை நினைவில் கொள்வது நல்லது.. எதுக்கு???.. எதுக்கோ!

- கௌதம்

English summary
Spreading Fake news has become a big business nowadays all over the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X