உச்ச நீதிமன்ற உத்தரவுபடி விவசாயிகளின் பிரச்சனை தீர்க்க வேண்டும்.. வேல்முருகன் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக மோடி அரசுதான் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம் எனும்போது அதனை எதிர்த்துத் தட்டிக் கேட்க தமிழக அரசுக்கு என்னதான் தயக்கம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் பிரச்சனைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. வறட்சி மற்றும் கடன் தொல்லையால் விவசாயிகள் செத்து மடிகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு கொடூர நிலை தமிழகத்தில் இருந்தும் அதைப் பற்றிய உணர்வு கூட தமிழக அரசுக்கு இல்லாதது ஏன்?

உத்தரவு

உத்தரவு

இதற்கான விளக்கத்தை இரண்டு வாரத்திற்குள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு எதிராகத் தொடுத்த பொதுநல வழக்கின் பேரில்தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்திருக்கிறது.

முன்வருமா?

முன்வருமா?

தமிழக அரசின் விளக்கத்தைப் பொறுத்து விசாரணையைத் தொடர வழக்கினை அடுத்த மாதம் 2ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்காகிலும் உடன்பட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வருமா? அல்லது,

கேள்வி

கேள்வி

நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பின் இந்த உத்தரவையும் கூட துச்சமாகத்தான் நினைக்குமா? இந்தக் கேள்வியைத்தான் தமிழக அரசிடம் முன்வைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டம்

விவசாயிகளின் பிரச்சனை என்றைக்குமில்லாத அளவுக்கு மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, அதற்குத் தீர்வு காண உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஏற்கனவே தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கடமை

கடமை

ஆனால் இதுவரை அதற்குச் செவி சாய்க்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமே இந்த உத்தரவினைப் பிறப்பித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அதேநேரம் விவசாயிகளின் பிரச்சனை அதன் அடியாழத்திற்கே சென்றுவிட்டிருக்கிறது என்பதையும் மீண்டும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் அடிவேர் எது என்றால் அது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததுதான். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால்தான் நீரின்றி திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதியே வறண்டது. விவசாயம் பொய்த்தது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். செத்து மடிந்தனர். பிரச்சனை வலைக்குள் சிக்குண்டனர்.

போராட்டம்

போராட்டம்

அதனாலேயே தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டங்கள்! தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான போராட்டம் தலைநகர் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கு மேலாக நீடிக்கிறது. காவிரி உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான போராட்டம் தஞ்சையில் இருபது நாட்களை எட்டுகிறது.

 ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன்

மத்திய அமைச்சரும் தமிழக முதலமைச்சரும் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் அதனை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததால் அதற்கெதிரான போராட்டம் மீண்டும் தொடர்கிறது புதுக்கோட்டையின் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் ஆந்திர, கேரள அரசுகள் பாலாறு, பவானி ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவதால் அதனை எதிர்த்த போராட்டங்கள் நெடுநாட்களாகத் தொடர்கின்றன எல்லையோர தமிழகப் பகுதிகளில்.

மேகதாது அணை

மேகதாது அணை

முக்கியமாக, காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணையைக் கட்டி தமிழகத்திற்கு சொட்டு நீர்கூட விடக்கூடாது என்று பார்க்கிறது. இதற்கு மத்திய பாஜக மோடி அரசுதான் உற்ற துணையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு நாட்டிலுள்ள அனைத்து நதிகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்று அமைக்க முடிவு செய்கிறது மோடி அரசு.

வேதனை

வேதனை

இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும்கூட காலிசெய்வதுதான் மோடி அரசின் வஞ்சகத் திட்டம். இத்தனை பிரச்சனைகள் இருந்தும் எதுவுமே தன் புலனறிவுக்கு எட்டாதது போல் தமிழக அரசு இருந்து வருவதுதான் வியப்பும் வேதனையும் அளிக்கிறது. ஏன் இந்த மௌனம், மர்மம்?

தயக்கம் ஏன்?

தயக்கம் ஏன்?

மத்திய பாஜக மோடி அரசுதான் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம் எனும்போது அதனை எதிர்த்துத் தட்டிக் கேட்க தமிழக அரசுக்கு என்னதான் தயக்கம்? இந்தக் கேள்விக்கான விடையை தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

பிரச்சனை தீர...

பிரச்சனை தீர...

அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதித்து தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Velmurugan has urged Tamil Nadu government that farmers issue should be solved immediately.
Please Wait while comments are loading...