களைகட்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்
Recommended Video
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 23 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழகத்தின், நெல்லை மாவட்டம், நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை அக்டபோர் 1ம் தேதி நடைபெற்றது. நாங்குநேரியில் 46 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட சேர்ந்த 24 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதே தேதியில் தேர்தல் நடைபெற உள்ள, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் மொத்தம் 18 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 9 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 9 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதிபட்டியல் இன்று வெளியானது. 3 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால், விக்கிரவாண்டி தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாங்குநேரில், 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காமராஜ்நகர் இடைத் தேர்தலில் 9 பேர் போட்டியிடுகிறார்கள்.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், நாங்குநேரியில்தான் அதிகபட்சமாக 23 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி ஆகியோர் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.
நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் ராஜநாராயணன் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.
காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா, நாம் தமிழர் கட்சி பிரவீனா மதியழகன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications