நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம் ரூ.6000! ரேஷன் கடையில் விநியோகம் தொடங்கியது! என்ன ஆவணம் தேவை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் இன்று காலை 8.30 மணி முதல் வெள்ள நிவாரணதொகை ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள், ஸ்மார்ட்கார்டை காண்பித்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண தொகையை வாங்கி செல்கின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16,17 ஆம் தேதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத இந்த மழையால் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. நெல்லை, தூத்துக்குடி மிகக் கடுமையான அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள ஊர்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வீடுகள் தண்ணீரில் மூழ்கி பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர். நெல்லை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. ஜங்ஷன் பேருந்து நிலையம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவையும் வெள்ளத்தில் மிதந்தது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மழை விட்டு, வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்ப சில நாட்கள் ஆனது. கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஆரசு ஈடுபட்டது.
ரூ. 6000 வெள்ள நிவாரணம்: வெள்ள பாதிப்பை பார்வையிட தென் மாவட்டங்களுக்கு வருகை தந்த முதல்வர் முக ஸ்டாலின் நெல்லைக்கு நேரில் வந்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட தாலுகா பகுதிகளுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், தென்காசி, கன்னியா குமரி மாவட்ட ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதன்படி, நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க கணக்கெடுப்பு பணி முழு வீச்சில் நடைபெற்றது. பின்னர் நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலமாக வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டது. கடந்த 3 தினங்களாக இந்த பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று முதல் நிவாரண தொகை பொதுமக்களுக்கு நியாயவிலைக்கடையில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் கார்டு, டோக்கன்: நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான ரேஷன் கடைகளில் இன்று காலை 8.30 மணிக்கே திறக்கப்பட்டு வெள்ள நிவாரணத்தொகை ரூ.6000 ஆயிரம் வழங்கப்பட்டது. காலை நேரத்திலும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ரூ.6000 பெற்று சென்றனர். 12 ஐநூரு ரூபாய் தாள்களாக வழங்கப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் ரூ.6000 வெள்ள நிவாரண தொகை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் கனிமொழி எம்பி இதனை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து டோக்கனை கொடுத்து வாங்கி செல்கின்றனர். ஸ்மார்ட் கார்டு, டோக்கன் கொண்டு போனால் போதும். குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் கைரேகையை வைத்து நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
விடுபட்டு இருந்தால்: இன்றும், நாளையும் பெரும்பாலும் நிவாரண தொகையை வழங்கிட வேண்டும் என்றும், நாளை மறுநாளுக்குள் முழுமையாக முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்பிறகும் வாங்காமல் விடுபட்டு இருந்தால் அதாவது, 31-ந் தேதிக்குள் நிவாரண தொகை வாங்காமல் விடுபட்டிருந்தால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணி இருப்பதால் வரும் 31 ஆம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications