For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர்... டிஸ்லெக்ஸியாவை வென்ற தன்னம்பிக்கை சிகரம்... 60,000 அலுவலர்களை நிர்வகிக்கும் சாதனையாளர்!

Google Oneindia Tamil News

தேவகோட்டை: டிஸ்லெக்ஸியா எனப்படும் கற்றல் குறைபாடு கொண்ட ஒருவர் இன்று 60,000 அலுவலர்களை நிர்வகிக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கு உயர்ந்து அசத்தியுள்ளார். அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த சாதனை சிகரத்தை அவர் எட்ட முக்கியக் காரணம் என்பது முக்கியமானது.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு வருமான வரி துறை இணை ஆணையாளர் நந்தகுமார் வருகை தந்திருந்தார். மாணவர்களிடம் அவர் உரையாற்றினார். தான் ஒரு கற்றல் குறைபாடு கொண்ட டிஸ்லெக்ஸியா பிரச்சினை கொண்ட மாணவராக இருந்தது குறித்து அவர் மாணவர்களிடம் பேசினார்.

ஆனால் இன்று தான் உயர்ந்த இடத்தில் இருப்பதாகவும், இதற்கு தனது விடா முயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம் என்றும் நந்தகுமார் பேசினார். மாணவர்களிடம் அவர் உரையாடியதிலிருந்து...

படிப்பு சடங்காகக் கூடாது

படிப்பு சடங்காகக் கூடாது

நாம் படிக்கும் படிப்பு சடங்கு மாதிரி இருக்க கூடாது. என்ன காரணம் என்று தெரியாமல் செய்யும் செயலுக்கு பெயர் மூடநம்பிக்கை ஆகும். ஏனோதானோ என்று படிக்க கூடாது. புரிஞ்சு படிக்க வேண்டும். தெரிந்து படிக்க வேண்டும். கவனித்து படிக்க வேண்டும். எனக்கு பள்ளியில் போர்டுல எழுதிப் போடுறதை எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா' என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு'தான்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும்போது தான் தெரியவந்துச்சு.

மனதால் காயப்பட்டேன்

மனதால் காயப்பட்டேன்

5ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து வந்தேன். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே நான் பலமுறை மனதால் காயப்படுத்தப்பட்டேன். மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் கடைசி பெஞ்சிற்கு தள்ளப்பட்டேன். அதைக்கூட தாங்கிக்கொள்ள முடிந்த என்னால் தாங்கிக்கொள்ள முடியாதது 'இவனோடு சேர்ந்தால் உருப்பட மாட்டீங்க என்று சொல்லி சக மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியதான். இந்தக் கொடுமையை தாங்கிக்கொண்டு ஆறாம் வகுப்பிற்கு போகவும் இல்லை, பள்ளியில் அழைக்கவும் இல்லை. உங்களை போன்று படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு வெளியே வாசலில் சோகத்துடன் நின்று 6ம் வகுப்பு படிக்கும்போது பார்த்து கொண்டு இருப்பேன். ஆனால் அந்த படிப்பை புரிந்து படித்து பள்ளிக்கு செல்லாமலேயே இன்று வெற்றி பெற்று விட்டேன். எனவே படிப்பு சடங்காக இருக்க கூடாது.

வெற்றிக்கான காரணம்

வெற்றிக்கான காரணம்

8 லட்சம் பேருடன் போட்டியிட்டு எங்கள் பேட்சில் வெற்றி பெற்றவர்களில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வந்த உடன், எனது புகை படம் செய்தி தாளில் வந்த பிறகுதான் எனது தெருவிலே நான் படித்து உள்ளேன், என்னால் படிக்கவும், எழுதவும் முடியும் என்பதே தெரியும். உங்கள் வெற்றியின் மூலம் உலகம் உங்களை திரும்பி பார்க்க வேண்டும். என்னை திரும்பி பார்த்தது. பார்த்து கொண்டு உள்ளது. சிலர் படிக்கும்போதே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நீ நல்லா வருவ என்பார்கள். எனக்கு அப்போதே தெரியும் இவன் இப்படி ஆவான் என்று சொல்வார்கள். அதனை நம்பாதீர்கள். என்னை யாரும் அப்படி சொல்லவில்லை. ஆனால் இன்று நான் அறுபதாயிரம் அலுவலர்களை நிர்வகிக்கும் அரசு பணியில் உள்ளேன்.

படிப்புதான் உயர்த்தும்

படிப்புதான் உயர்த்தும்

இந்திய அரசில் தனி துறை உருவாக நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன். இன்று என்னுடைய கார்டை காண்பித்தால் நாடாளுமன்றத்தின் அனைத்து கதவுகளும் திறக்கும். அதற்கு ஒரே காரணம் என்னுடைய படிப்பு மட்டும்தான். என்னை யாரும் சின்ன வயதில் இப்படி வருவாய் என்று சொல்லவில்லை. எனது நண்பர்கள் நான் சிறு வயதாக இருக்கும்போது மெக்கானிக் கடையில் வேலை பார்த்தபோது இருந்த அந்தோணி.அவர் இப்போதும் அதே கடையில் தான் உள்ளார். அவருக்கு ஐ .ஆர்.எஸ்.என்றால் என்ன என்று தெரியாது. என்னுடைய இன்றைய நண்பர்கள் இந்திய நாட்டின் பிரதமர், ஜனாதிபதி. இந்த வெற்றிக்கு காரணம் எனக்கு வராது என்று சொன்ன படிப்பை பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய நான் விரட்டி சென்று அதனை வரவைக்க வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்து படித்தேன். சிறிது படித்த எனக்கே இவ்வளவு வெற்றி என்றால் நன்றாக இருக்க கூடிய நீங்கள் அனைவரும் இன்னும் நன்றாக படிக்கலாம்.மிக பெரிய பதவிகளுக்கு செல்லலாம்.

விளிம்புக் குடும்பத்தில் பிறந்தேன்

விளிம்புக் குடும்பத்தில் பிறந்தேன்

ஐ.ஆர்.எஸ். தேர்வில் நான் வெற்றி பெற்றபோது என்னுடன் பணி ஆணை வாங்க வந்த அனைவரும் நான் ஐ .ஐ .எம்,ஐ .ஐ .டி யில் படித்தேன் என்று சொன்னார்கள். எம்.பி.ல் .படித்தேன் என்று பெரிதாக பேசினார்கள். ஆனால் சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து, பள்ளிக்கே செல்லாமல், பள்ளியினால் நிராகரிக்கப்பட்ட நான் அவர்களைவிட முதல் மாணவனாக வெற்றி பெற்று கிழிந்த ட்ராயர் போட்டு கொண்டு ,மெக்கானிக் கடையில் எடுபிடி வேலை பார்த்த நானும் வெற்றி பெற முடியும் என்று சொல்வதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்தத்தை எண்ணி பெருமைப்பட்டு கொண்டேன். அப்பா படித்திருக்க வேண்டும், அம்மா படித்திருக்க வேண்டும் என்று தேவை இல்லை. ஐ.ஏ.எஸ்.போன்ற குடிமைபணி தேர்வுகள் எழுதுவதற்கு ஒரு இளங்கலை பட்டம் இருந்தால் போதுமானது. நீங்கள் பெரிய படிப்புகள் எதுவும் படிக்க தேவை இல்லை. படிப்பதை புரிந்து படித்தால் போதும்.

பலூன் மாதிரிதான் வாழ்க்கையும்

பலூன் மாதிரிதான் வாழ்க்கையும்

எப்படி நீங்கள் கையில் வைத்துள்ள பலூனில் காற்றை ஊதுகிறீர்களோ அதே மாதிரிதான் உங்கள் வாழ்க்கையும் அமையும். எனவே படிப்பதை புரிந்து படியுங்கள். கவனித்து படியுங்கள். உங்கள் ஆளுமையினை வளர்த்து கொள்ளுங்கள். சாதாரண போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று நான் இருக்கும் இடத்தில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே என்னுடைய வாழ்க்கையை அமைத்து கொள்வேன் என்று கனவு காணாதீர்கள். உங்கள் கனவுகளை பெரிதாக்குங்கள். நீங்கள் எழுதும் போட்டி தேர்வுகளில் பெரிய பதவிகளுக்கு புரிந்து படித்து தேர்வு எழுதுங்கள். தமிழ்நாடு இல்லை, இந்தியா இல்லை, உலகமே உங்களை திரும்பி பார்க்கும் வகையில் வெற்றியாளராக மாறுங்கள். அதற்கு நீங்கள் நினைக்கும் பெரிய கனவை தொடர்ந்து நினைத்து கொண்டே இருங்கள்.

விடாமல் துரத்தி ஓடுங்கள்

விடாமல் துரத்தி ஓடுங்கள்

விடாமல் அதனை துரத்தி ஓடுங்கள். நீங்கள் எவ்வளவு அதனை நினைக்கீறீர்களோ அவ்வளவு தூரம் அது உங்களை நோக்கி வரும். அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தானாக கிடைக்கும். நான் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும்போது எனது சிந்தனை பெரியதாக இல்லை. படித்து வெற்றி பெற வேண்டும் என்று எனது உள்ளுணர்வு சொல்லும்போது படிப்பதற்கான அனைத்து உதவிகளும் போராடினாலும் கிடைக்கத்தான் செய்தது. எனது எண்ணம் பெரிதாக,பெரிதாக அதற்கான வாய்ப்புகளும்,உதவிகளும் தொடர்ந்து கிடைத்தது. எனக்கு அப்போதுதான் நாம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உலகம் நமக்கும் உதவி செய்யும், நம்மாலும் உலகத்தை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்ற உண்மை தெரிந்தது. நான் உலகத்தை திரும்பி பார்க்க வைத்து விட்டேன். எனவே உங்களை உலகம் நல்ல விஷயத்துக்காகத்தான் திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும்.

பணம் வரும் போகும்.. ஆனால் படிப்பு கூடவே இருக்கும்

பணம் வரும் போகும்.. ஆனால் படிப்பு கூடவே இருக்கும்

வாழ்க்கையில் பெரிய ஆள் ஆவதற்கு பெட்டி கடை வைத்தால் கூட நன்றாக சம்பாதித்து விடலாம். பணம் இன்று இருக்கும் நாளை போகும். ஆனால் படிப்பு மட்டுமே உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும். இன்று நான் பல ஆயிரம் பேருக்கு இணையம் வழியாக ஐ .ஏ .எஸ். ஆவதற்கு பயிற்சி கொடுத்து கொண்டுள்ளேன். எனது அரசு பணியில் மிக பெரிய செயல்களை என்னால் செய்ய முடிகிறது. நன்றாக எழுத வராத, படிக்க வராத நான் திரும்ப, திரும்ப எனக்கு வராத விசயத்தை தேடி, தேடி சென்று செய்தேன். வராததை வரவைத்தேன். நல்ல நிலையில் கிராம பகுதியில் உள்ள நீங்கள் எனக்கு அது இல்லை, இது இல்லை, அப்பா சரியில்லை, அம்மா சரியில்லை என்று புலம்பி கொண்டு இருக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.

நீங்களும் சாதிக்கலாம்

நீங்களும் சாதிக்கலாம்

கொஞ்சமாக படித்த எனக்கே இவ்வளவு வெற்றி கிடைத்து உள்ளபோது உங்களுக்கு இன்னும் அதிக வெற்றி கிடைக்கும். எப்போது என்றால் நல்ல விஷயம் வராதபோது அதனை தேடி கண்டுபிடித்து அதனை உங்களது ஆக்கி கொள்ளும்போதுதான் வெற்றி கிடைக்கும். என்னுடைய பெயரை கூட எழுத தெரியாத, வாசிக்க தெரியாத நிலையில் இருந்த நானே சாதித்திருக்கிறேன். நீங்களும் சாதிக்கலாம். இதற்காகத்தான் வருடத்தில் மூன்றரை லட்சம் மாணவர்களை சந்தித்து உற்சாகத்துடன் நம்பிக்கை ஊட்டுகிறேன் என்றார் நந்தகுமார்.

மாணவர்களும் பெற்றோர்களும்

மாணவர்களும் பெற்றோர்களும்

நந்தகுமாருடன் சென்னையை சார்ந்த கோபிநாத், ரங்கநாதன் ஆகியோரும் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் வெங்கட்ராமன், காயத்ரி, சாய் புவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், தனலெட்சுமி, ராஜேஸ்வரி, சின்னம்மாள், திவ்ய ஸ்ரீ, ஜீவா, நித்திய கல்யாணி, பரமேஸ்வரி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்

English summary
A Former Dyslexia student who paid a visit to the Chairman Manickavasagam govt aided middle school shared his experiences with the shool students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X