உடைந்த மிக்சி.. நசுங்கிய கிரைண்டர்... "என்னம்மா" இதெல்லாம்.. ஏமாற்றத்தில் மக்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்ட அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் ஆகியவை உடைந்தும், நசுங்கியும் இருந்ததால் கால் வலிக்க நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே முகையூர் கிராமத்தில் தமிழக அரசு வழங்கிய கிரைண்டர், மிக்ஸி, பேன் ஆகிய பொருட்கள் உடைந்திருந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். முகையூர் கிராமத்தில் 750 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 500 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் ஆகிய பொருட்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.

பல மணி நேரம் காத்திருந்து அதனை பெற்றுக்கொண்டு சென்ற பொதுமக்கள், வீட்டிற்கு சென்று பார்த்தவுடன் பெரும்பாலான பொருட்கள் உடைந்தும், நசுங்கியும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவற்றை மாற்ற முடியாது என்றும், அவற்றை தூக்கிப் போடுமாறும் அவர் கூறியதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் எந்த பலனும் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இலவசம் என்ற பெயரில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது அரசும், அதிகாரிகளும் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications