For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை கேஸ் போட வேண்டும் ஜெயலலிதா மீது.. ஜி.கே.மணி ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். இதை வலியுறுத்தி தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் அவர் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

GK Mani wants Jaya be booked under murder case

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் பரப்புரைக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அடைத்து வைக்கப்படுவது குறித்தும், இந்த கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்களில் 5 பேர் உயிரிழந்தது குறித்தும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 11.04.2016 அன்று அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாலை 3 மணிக்கு ஜெயலலிதா பேசிய நிலையில், காலை 11 மணிக்கே பொதுமக்கள் வரவழைக்கப்பட்டு 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் அமரவைக்கப்பட்டனர். மாலை 4 மணிக்கு பேச்சை முடித்துக் கொண்டு ஜெயலலிதா அங்கிருந்து வெளியேறும் வரை இயற்கை அழைப்புக்கு கூட மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு செல்ல முயன்றவர்களை அதிமுகவினர் மிரட்டி அமர வைத்தனர்.

இதனால் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த போதே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலர் மயங்கி விழுந்தனர். இது குறித்த செய்தி பரவியதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்றதால் மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மேலும் பலர் மயக்கமடைந்தனர். அவர்களில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததாலும், முதலுதவி கூட அளிக்கப்படாததாலும் கருணாகரன் டேவிட், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

அதேபோல், 15.04.2016 அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் ஜெயலலிதா பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்திலும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி 21.04.2016 அன்று உயிரிழந்தார். இக்கூட்டத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.

20.04.2016 அன்று சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஜெயலலிதா பங்கேற்ற அதிமுக பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. சேலத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட மக்கள் கொளுத்தும் வெயிலில் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டனர். மாலை 4 மணிக்கு ஜெயலலிதா உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11 மணி முதலே பல மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்ட மக்கள் பொதுக்கூட்டத் திடலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர். ஒரு பகுதியில் அடைக்கப்பட்ட மக்கள் அவசியத் தேவைகளுக்காகக் கூட அங்கிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நெரிசலும் அதிகமாக இருந்ததால் வெயில் மற்றும் நெரிசலில் சிக்கி பச்சியண்ணன், பெரியசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.

விருத்தாசலம், அருப்புக்கோட்டை, சேலம் ஆகிய 3 இடங்களிலுமே அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு காரணம் அடிப்படை வசதிகள் குறைபாடும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமும் தான் காரணம் ஆகும். ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு ரூ.300 பணம் தரப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்ததாகக் கூறி ஒருநாள் ஊதியமும் வழங்கப்படுகிறது. பரப்புரைக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து ஒரு மணி நேரம் பேசுகிறார். அந்த ஒரு மணி நேரம் மட்டுமே மேடையில் இருக்கிறார். அந்த மேடையில் 8 ஏ.சி.க்கள், 20 ஏர் கூலர்கள் வைக்கப்பட்டுள்ளன. தரையிலிருந்து வெப்பம் தாக்காமல் இருக்க செயற்கை புல்தரை அமைக்கப்படுகிறது. ஆனால், பொதுமக்களுக்கோ கூரை கூட அமைக்கப்படுவதில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட போதிய அளவு தரப்படுவதில்லை. கிட்டத்தட்ட நெருப்பில் நிற்பதைப் போலத் தான் இருக்கின்றனர்.

தமிழகத்தில் வெப்பக்காற்று வீசுவதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்திருந்த நிலையில், அதை மீறி ஜெயலலிதா பங்கேற்றக் கூட்டங்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் 4 முதல் 5 மணி நேரம் வரை கால்நடைகளைப் போல அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனால் தான் அப்பாவி மக்கள் நெரிசலில் சிக்கியும், வெப்பம் தாங்க முடியாமலும் உயிரிழந்திருக்கின்றனர்.

இது மனித உரிமைகளை மீறிய செயல் என்பதுடன், 5 பேரின் உயிரிழப்புக்கும் காரணமாக இருந்திருக்கிறது. எனவே, இதற்குக் காரணமான பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீதும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறைக்கு ஆணையிட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ஜி.கே.மணி.

English summary
PMK president GK Mani has urged the NHRC to book CM Jayalalitha under murder charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X