For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரானைட் கொள்ளை: கேக் மாதிரி வெட்டப்பட்ட பொக்கிஷ மலை… நசுங்கிய உயிர்கள்!!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள். மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளின் நடைபெற்றுள்ள முறைகேடுகளை தோண்ட தோண்ட புதுப்புது பூதங்களாக கிளம்பி வருகின்றன.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை மேற்கொண்டு வரும் சகாயம் இதுவரை பலகட்ட விசாரணைகளை நடத்தி முடித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகள் இரவு பகலாக நடந்துவருகின்றன.

பொதுமக்களின் மனுக்கள், கள ஆய்வுகள், சிதைக்கப்பட்ட மலைகள், பாலைவனமாக மாறிய விளைநிலங்கள் என பல விசயங்கள் நேரடியாக தெரியவந்தாலும் மறைக்கப்பட்ட பல விசயங்கள் உள்ளனவாம்.

பொக்கிஷ மலை

பொக்கிஷ மலை

கீழவளவு அடுத்துள்ள மட்டங்கிபட்டியில் சகாயம் ஆய்வு செய்துகொண்டிருக்கும்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரெங்கராஜ், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கால்வாயை உடைத்து 17 ஹெக்டேர் அளவுள்ள குளத்துக்குத் தண்ணீர் வரவிடாமல் தடுத்து அடைத்துவிட்டனர். அடுத்து அருகில் உள்ள தனியார் இடங்களில் உரிமையாளர்களைக் கேட்காமல் நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளனர் என்று புகார் அளித்தார். நில உரிமையாளர்கள் கேட்டால், 'உயிருடன் கிரானைட் குவாரியில் போட்டு அரைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள்' ' என்று புகார் அளித்துள்ளனர்.

மறைக்கப்பட்ட உண்மைகள்

மறைக்கப்பட்ட உண்மைகள்

பொக்கிஷ மலையில் சகாயம் குழு ஆய்வு செய்தபோது திடீர் என்று வந்த ஒருவர், திடுக்கிடும் புகார் அளித்துள்ளாராம். பொக்கிஷ மலை என்கிற சக்கரை பீர்மலையை இரண்டு குரூப், ஆளுக்குப் பாதி என்று பங்கு போட்டுக்கொண்டு வெட்டியது. அதிக ஆசையில் கேக்போல பெரும் துண்டுகளாக வெட்ட வெளிநாட்டில் இருந்து மிஷின்கள் வாங்கி வந்து பெரிய மலையை இரண்டாகப் பிளந்தார்கள். அன்று ஒரே இடத்தில 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள்.

அமுக்கிய மலை

அமுக்கிய மலை

மலையை மார்க் பண்ணி பெரிய அளவில் வெட்டியபோது துண்டாக வந்த மலை அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மலையின் மேல் பகுதியில் நின்றவர்கள் அப்படியே கல்லின் மேலே விழுந்தனர். கீழ்ப்பகுதியில் வேலை பார்த்தவர்கள் மீது மலையின் துண்டு விழுந்து அமுக்கியது. கைகள், கால்கள், உடல் பாகங்கள் என்று நசுங்கி சிதறின. அந்த மலைத்துண்டின் அடிப்பகுதி, பக்கவாட்டில் என்று ஒரே நேரத்தில் மொத்தம் 79 நபர்கள் இறந்துபோனார்கள். எல்லாமே ஒரே நிமிடத்தில் நடந்துவிட்டது.

நசுங்கி சிதைந்த உடல்கள்

நசுங்கி சிதைந்த உடல்கள்

அதே கல்லின் இன்னொரு பாகம் பின் பகுதியில் இருந்த கோயிலில் திருமணத்திற்கு வந்தவர்கள் மீதும் விழுந்ததில் மொத்தம் 11 நபர்கள் இறந்துபோனார்கள். சிதைந்த உடல்களை வாரி அங்கேயே போட்டு புதைத்துவிட்டானராம்.

கணக்கு நான்கு பேர்

கணக்கு நான்கு பேர்

உடனடியாக யாரைப் பார்க்க வேண்டுமோ, பார்த்து இந்தச் சம்பவம் வெளியே வராமல் பார்த்துக்கொண்டனராம். இதனையடுத்து கணக்கில் வெறும் நான்கு நபர்கள் மட்டும் இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இறந்தவர்களில் 80 சதவிகிதத்தினர் வெளி மாநில ஆட்கள் என்பதால் யாருக்கும் தெரியாமல் எல்லா வேலைகளையும் கமுக்கமாகச் செய்து மூடி மறைத்துவிட்டார்கள் என்று ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளாராம் அந்த நபர்.

வராத வங்கிக்கணக்குகள்

வராத வங்கிக்கணக்குகள்

இதனிடையே கிரானைட் ஊழலில் சிக்கியுள்ள அதிபர்களின் வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள் உள்பட பல்வேறு முக்கியமான விவரங்களை சகாயம் கேட்டு இருக்கிறார். ஆனால் கிரானைட் புள்ளிகளின் வங்கிக் கணக்குகள், விவரங்கள் குறித்த சேமிப்புகள், பணப் பரிமாற்றங்கள் என்று கேட்டதில் மிக முக்கியமான நபர்களின் கணக்குவழக்கு விவரங்கள் மட்டும் இன்னமும் வந்து சேரவில்லையாம்.

வசமான வருவாய்துறை

வசமான வருவாய்துறை

கிரானைட் குவாரிகள் இருந்த இடங்கள், அனுமதி வாங்கிய தேதி, யார் நடத்தியது, எத்தனை ஆண்டுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது, அரசு மற்றும் பட்டா நிலங்களில் உள்ள குவாரிகளின் எண்ணிக்கை, நீர்நிலைகள், விவசாய நிலங்களில் போடப்பட்ட கற்கள், கழிவுக்கற்கள் கொட்டிய இடங்கள், விதிமுறை மீறப்பட்ட இடங்கள், அரசு அவற்றுக்கு இதுவரை என்ன மாதிரியான அபராதம் விதித்தது என வருவாய்த் துறைக்கு சகாயம் அனுப்பிய கேள்விகளுக்கு மேலூர் ஆர்.டி.ஓ செந்தில்குமாரி பதில்களை அனுப்பியுள்ளார்.

ஷாக் அடிக்கும் மின் இணைப்புக்கள்

ஷாக் அடிக்கும் மின் இணைப்புக்கள்

இந்தியா முழுவதும் உள்ள முக்கியமானத் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு ஏற்றுமதி, இறக்குமதி விவரங்கள் பற்றிய கேள்விகளுக்கும் பதில் ரெடி. மின்சார வாரியமோ தாறுமாறாக மின் இணைப்பையும், கூடுதலாக மின்சாரத்தையும் வரைமுறை தெரியாமல் தந்துவிட்டு தற்போது வசமாக மாட்டிகொண்டு நிற்கிறதாம்.

அறிக்கைக்கு தாமதம் ஏன்

அறிக்கைக்கு தாமதம் ஏன்

வாரத்தின் மூன்று நாட்கள் மட்டும் மதுரையில் விசாரணை செய்யும் சகாயம், கடந்த வாரம் முழுவதும் மதுரையில் முகாமிட்டிருந்தார். தயாரித்த அறிக்கையுடன் கடந்த 12-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சகாயம், ''இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமத்துக்குக் காரணம் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து பதில் வராததுதான். அதனால் இன்னும் ஒரு மாதகாலம் அவகாசம் வேண்டும்'' என்று தன் மனுவில் கேட்டிருந்தார்.

அரசு எதிர்ப்பு

அரசு எதிர்ப்பு

அரசுத் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, ''சகாயம் தன்னிலையாகச் செயல்படுகிறார். பொது மக்கள் யார் மனுக்கொடுத்தாலும் அதனை வாங்கி விசாரித்து வருகிறார். இது அரசுக்கு நல்லது இல்லை!'' என்று வாதிட்டார்.

சூறையாடியது நியாயமா?

சூறையாடியது நியாயமா?

தலைமை நீதிபதி சஞ்சய் கிசான் கவுல், ''அங்குள்ள இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி சூறையாடி இருக்கிறார்களே! அரசு அதிகாரிகளின் துணை இல்லாமல் இவ்வளவு நடந்து இருக்குமா? நேர்மையாக அவரது போக்கில் விசாரிக்கவே அவரை நியமித்திருக்கிறோம். அதில் தலையீடு இருக்கக் கூடாது. பதில் தராத துறைகள் இன்னும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, சகாயம் அவரது அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்குகிறோம் என்று முடித்தார்.

ஆயிரம் பக்க அறிக்கை

ஆயிரம் பக்க அறிக்கை

ஆய்வுகள், கிரானைட் முறைகேடுகள் குறித்த ஆவணங்களின் தொகுப்புகள், இதர முக்கியமான விவரங்கள் என்று 1,000 பக்கங்கள் அடங்கிய முதல்கட்ட அறிக்கை சகாயத்தின் கைகளில் தயாராக இருக்கிறது. அறிக்கை விவரங்கள் தலை சுற்ற வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதும் செல்வாரா?

தமிழகம் முழுவதும் செல்வாரா?

இதனிடையே கடந்த வாரம் சகாயத்தைச் சந்தித்து பேசிய டிராஃபிக் ராமசாமி, மதுரையில் கிரானைட் விசாரணையை முடித்ததும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் கொள்ளையை விசாரிக்கத் தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். இதற்குப் பின்பே டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Public can directly submit their petitions to Sagayam IAS against erring granite quarry operators, companies,firms,representatives on any form of intimidation acts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X