For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2016: குருவின் பார்வை கிடைக்க இங்கே போய் வழிபடுங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நவக்கிரகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சூரியன் மாதம் ஒருமுறையும், சந்திரன் இரண்டே கால் நாளிலும், செவ்வாய் ஒன்றரை மாதத்திலும், புதனும், சுக்கிரனும் ஒரு மாதத்திலும், குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகுவும் கேதுவும் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் குரு பகவான்.

நவகிரகப் பெயர்ச்சிகளில் குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சிகள் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர்.

குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர்.

Gurupeyarchi 2016: Guru Parikara Temples in Tamil Nadu

தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு.

குருப் பெயர்ச்சிக்கு முன்னரும், அன்றும், பின்னரும் வழிபடுவதால் கேட்ட வரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம். குரு சன்னதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றை நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம்.

ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன.

Gurupeyarchi 2016: Guru Parikara Temples in Tamil Nadu

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் மகா மகம் நடக்கிறது. இப்பொழுது குரு சிம்மத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரிமாதம் 22ம் தேதி மகாமகம் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 2ம் தேதி குரு பகவான் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைகிறார்.

குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகார தலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

•நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

•திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும்.

•தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.

• முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம்.

•மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.

Gurupeyarchi 2016: Guru Parikara Temples in Tamil Nadu

•திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது தேவூர் . இத்தலத்து இறைவனுக்கு தேவகுருநாதன் என்றுபெயர். குருபகவான் வழிபட்ட தலம் இது. இங்கு குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

•கும்பகோணத்தில் மகாமகக் குளமான பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் கோயில் குரு பரிகாரத்திற்கு ஏற்ற கோயில். குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசி விஸ்வநாதர் என்றும், காசி விசாலாட்சி, தேனார் மொழி என்றும் அழைக்கிறார்கள்.

•வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி' ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

•மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம்.

•சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணா மூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.

•சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் (வ்யாக்யான)தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார்.

•காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத் தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத் திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார்.

•ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்.

•குருபகவானை வணங்க தனியாக பரிகார தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தோறும் வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கு குரு ஹோரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

English summary
Guru peyarchi on August 2,2016.Here is the Guru Parikaram Temples in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X