அதிமுக துணைப் பொதுச்செயலராக தினகரனை நியமித்தது செல்லாது- எடப்பாடி கோஷ்டி தீர்மானம் சொல்வது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக துணைப் பொதுச்செயலராக தினகரனை நியமித்ததே செல்லாது என்பதால் அவரது அறிவிப்புகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு இன்று இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சியாக விளங்குகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து கட்சியினர் அனைவருமே அதிர்ச்சியில் உள்ளோம்.

ஜெயலலிதாவின் நோக்கங்கள், லட்சியங்கள்,கொள்கைகளை நிறைவற்ற ஒன்று கூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழலில் கட்சி உள்ளது. இத்தகைய சூழலில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

சசிகலா

சசிகலா

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு எவரையும் வைத்து அழகு பார்க்க விரும்பமாட்டார்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நியமிக்கப்பட்டாலும் அசாதாரண சூழலால் அவரரால் செயல்பட முடியவில்லை.

தினகரன்

தினகரன்

பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சசிகலா நியமனத்தை ரத்து செய்யக் கோரிவழக்கு தொடர்ந்துள்ளதால் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி அவரின் வழிகாட்டுதலின்படி கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகிறோம். ஜெயலலிதாவால் 19.12.2011ம் தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் 14.3.2017ம் ஆண்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

தினகரன் நியமனம் செல்லாது

15.2.2017 அன்று தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது சட்டதிட்ட விதிக்கு விரோதமானது. தொடர்ந்து 5 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தால் அவர் கட்சியின் எந்த பொறுப்பையும் வகிக்க இயலாது.

தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

தினகரன் துணைப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்திற்கு அளித்த பதில் கடிதத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயர் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தினகரன் நியமனம் குறித்த விசாரணையும் தேர்தல் ஆணையத்தில் வர உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி தினகரன் தன்னிச்சையாக சில நியமனங்களை செய்துள்ளார்.

கட்டுப்படுத்தாது

கட்சியை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி வழி நடத்தி வரும் நிலையில் தினகரன் வீண் குழப்பங்களை ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கழக சட்டதிட்ட விதிகளின்படி செல்லக்கூடியவை அல்ல. கட்சித் தொண்டர்கள் தினகரனின் அறிவிப்புகளை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜெயலலிதாவின் உயரிய லட்சியமான ஒவ்வொரு தொண்டனுக்கும் வாய்ப்பு, உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும் என்பதை நிறைவேற்ற, அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும் ஆட்சியையும் வழி நடத்துவோம் என்று உறுதி ஏற்போம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
EPS Cutoff Dinakaran from the party and here is the full resolutions adopted in the meeting.
Please Wait while comments are loading...