For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஸ்வரூபமெடுக்கும் தினகரனை மோடியால் எளிதாக வீழ்த்த முடியாது?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர். மணி

அஇஅதிமுக வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி விட்டார். இதன் மூலம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் அஇஅதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்து போனது.

சசிகலா பிப்ரவரி 15 ம் தேதி பெங்களூர் பரப்பனஹாரா சிறைக்கு போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் நியமித்தவர்தான் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அஇஅதிமுக வின் சசிகலா பிரிவின் சார்பில் போட்டியிட்டார் டிடிவி தினகரன்.

How Modi to Handle TTV Dinakaran

இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் கட்சியின் முன்னாள் அவைத் தலைவர் ஈ. மதுசூதனன் போட்டியிட்டார். இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம், கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்குத் தான் என்று மனு செய்திருந்தன.

இந்த கட்டத்தில்தான் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத் தான் ஒதுக்க வேண்டும் என்று கூறி, அதற்காக தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயற்சி செய்ததாக குற்றஞ் சாட்டி டில்லி போலீஸ் அவரை கைது செய்தது. தேர்தல் ஆணையமும் ஆர்.கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்தது.

ஏப்ரல் 25 ம் தேதி கைதான டிடிவி தினகரனுக்கு டில்லி நீதிமன்றம் ஜூன் 1 ம் தேதி ஜாமீன் வழங்கியது. இரண்டு மாதங்கள் அமைதி காத்த டிடிவி தினகரன் வெள்ளிக் கிழமை, ஆகஸ்ட் 4-ம் தேதி பேசத் துவங்கி விட்டார்.

சென்னை பெசண்ட் நகரில் 4-ம் தேதி மாலை செய்தியாளர்களிடம் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். அவருடைய பேட்டியின் முக்கியமான மூன்று விஷயங்கள் இவைதான்;

1. அஇஅதிமுக வுக்காக தமிழகம் முழுவதற்குமாக 60 புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதில் 20 பேர் தற்போதய எம்எல்ஏ க்கள், 12 பேர் முன்னாள் எம்எல்ஏ க்கள். தற்போதய எம்எல்ஏ க்களில் மூவர் முன்னாள் அமைச்சர்கள். செந்தில் பாலாஜி, பி.பழனியப்பன் மற்றும் தோப்பு வெங்கடாசலம். இது தவிர, தற்போது எம்எல்ஏ க்களாக இல்லாமல்,முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்கள் 12 பேரும் கட்சி நிர்வாகிகளாக நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்ள்.

2. இரண்டாவது முக்கியமான விஷயம் பாஜக வுக்கு மறைமுகமாக டிடிவி தினகரன் கொடுத்த எச்சரிக்கை. ''பாஜக தங்களை காப்பற்றும் என்று நம்பி அஇஅதிமுக வில் ஒரு பிரிவினர் எங்களை விட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் நம்பியது நடக்கவில்லை. அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை தான் இது'' என்றார் தினகரன்.

3. அஇஅதிமுக தலைமை கழகத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, ''இது கட்சி விவகாரம். கட்சியின் தலைமை கழகத்திற்குள்ளே போவதற்கு எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆகவே இதில் போலீஸ் தலையிடாது என்று நம்புகிறேன். அப்படி தலையிட்டால் அதற்கான பலனை போலீஸ் சந்திக்க வேண்டியிருக்கும்.

இதுதான் டிடிவி தினகரனின் பேட்டியின் சுருக்கம். மற்றோர் முக்கியமான விஷயம் தமிழகம் முழுவதும் தான் சுற்றுப் பயணம் செய்து அஇஅதிமுக தொண்டர்களை சந்தித்து பேச இருப்பதாகவும், பொதுக் கூட்டங்களில் உரையாற்ற இருப்பதாகவும் டிடிவி தினகரன் அறிவித்தது. ஆகஸ்ட் 14 முதல் அக்டோபர் 5 ம் தேதி வரையில் தன்னுடைய சுற்றுப் பயணம் இருக்கும் என்றும் கூறினார்.

வட சென்னை, தேனி, கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தர்மபுரி, திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தான் பொதுக் கூட்டங்களில் பேச இருப்பதாக அறிவித்தார். கட்சியின் துணை பொதுச் செயலாளராக சென்னையில் உள்ள அஇஅதிமுக தலைமை கழகத்திற்கு எப்போது போவீர்கள் என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்லாமல், தேவைப்படும் போது போவேன் என்று கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுக வில் முக்கியமான நாடகங்கள் இனிமேல்தான் அரங்கேற இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ''ஏற்கனவே எல்லா மாவட்டங்களிலும் அஇஅதிமுக வில் நிர்வாகிகள் இருக்கின்றனர். இதில் புதியதாக நிர்வாகிகளை டிடிவி தினகரன் அறிவித்திருப்பது, குழப்பத்துக்கு மட்டுமில்லை, வன்முறைக்கும் விதையை விதைத்திருக்கிறது. டிடிவி நியமித்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அஇஅதிமுக அலுவலகங்களுக்கு உள்ளே நூழைய முயற்சித்தாலே அந்த முயற்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்படும். அப்போது அங்கே வன்முறை வெடிக்கும்.

ஏனெனில் டிடிவி நியமித்த நிர்வாகிகள் சுதந்திரமாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கட்சி அலுவலகங்களுக்குள் நூழைவதை ஒரு போதும் எடப்பாடி தரப்பு அனுமதிக்காது'' என்கிறார் வட மாவட்டத்தை சேர்ந்த அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர். ''என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் டிடிவி தினகரனின் அரசியல், குறிப்பாக புதிய நிர்வாகிகளை அவர் நியமித்திருப்பது வன்முறை வெடிப்பதற்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறேன்'' என்று மேலும் கூறுகிறார் அந்த முன்னாள் அமைச்சர்.

குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் எடப்பாடி, ஓபிஎஸ் இருவரைப் போன்றே டிடிவியும் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் படி தன்னுடைய ஆதரவாளர்களை வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். ஆனால் ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூட அதிகாரபூர்வமாக எந்த விவகாரத்திலும் பேசாமல் இருக்கும் சூழ்நிலையில் மறைமுகமாக பாஜக வை டிடிவி விமர்சித்திருப்பது அவர் மேற்கொள்ளப் போகும் அரசியிலின் போக்கை ஓரளவுக்கு தெளிவு படுத்தியிருக்கிறது.

மற்ற இரண்டு அணிகளிலும் கட்சியில் பதவிகள் கிடைக்காமல் இருக்கும் அஇஅதிமுகவினருக்கு ஒரு விதமான நம்பிக்கையை டிடிவி ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது டிடிவி அணியில் சேர்ந்தால் நமக்கு ஏதோ ஒரு கட்சி பதவி கிடைத்து விடும் என்கின்ற நம்பிக்கைதான் அது. டிடிவி யின் பத்திரிகையாளர் சந்திப்புகள் அவரிடம் தெளிவான சிந்தனையும், அரசியல் செயற் திட்டமும் இருப்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. டிடிவி பத்திரிகையாளர்களை கையாளும் விதம் நேர்த்தியானதாக இருக்கிறது.

எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லுகிறார். கடினமான கேள்விகளுக்கு கூட, பச்சை பொய்யை, ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் என்று சொல்லுவார்களே, அத்தகைய மகத்தான பொய்களை கூட தர்க்கவியல் ரீதியில், அதாவது, Logically, அவர் நியாயப்படுத்தி பேசுவது ஆச்சரியமான விஷயம்தான்.

உண்மையான அஇஅதிமுக தொண்டர்கள் மோடியிடம் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸூம் அடிபணிவதை விரும்பவில்லை ஆகவே பாஜகவுக்கு எதிராக டிடிவி தினகரன் வெளிப்படையான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து, அவருடைய போராட்டங்களை தெருக்களுக்கு எடுத்துச் சென்றால் உண்மையான அஇஅதிமுக தொண்டர்கள் அவர் பின் வரலாம்.

டிடிவி யின் பேட்டியில் அவர் 2019 மக்களவை தேர்தல்களை பற்றி மட்டுமே திரும்ப, திரும்ப பேசினார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தல்களைப் பற்றி அவர் பேசவில்லை. இதிலிருந்தே அவரது அரசியல் செயற்திட்டம் தெளிவாகவே தெறிகிறது. 2019 தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பேராசைகளுடன் காத்துக் கொண்டிருக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும் டிடிவியின் வார்த்தைகள் சொல்ல வேண்டிய செய்தியை சொல்லியிருக்கும்.

''ஒன்று பட்ட அஇஅதிமுக வுடன் தான் பாஜக அரசியல் உறவு கொள்ளும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பாக மோடி பேசியிருக்கிறார். இதன் பொருள் ஒன்று பட்ட அஇஅதிமுக வுக்குத் தான் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். ''தற்போதய நிலையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அஇஅதிமுக வின் எந்த அணிக்கும் ஒதுக்காது. அந்தளவுக்கு குழப்பமான, பல்லாயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த ஆவணங்களை வைக்க தேர்தல் ஆணையத்தில் இடமில்லாததால், அருகாமையில் உள்ள வேறோர் இடத்தில் ஆவணங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன'' என்கிறார் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஊழியர் அருண் சச்தேவா.

தனக்கு பிடிக்காத, அரசியல் கட்சிகள் நடத்தும் மாநிலங்களில், தான் விரும்புவதை செய்ய மறுக்கும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றை வைத்து சம்மந்தப்பட்ட மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகார்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொள்ளும் மோடி அரசு நீண்ட நாட்கள் இந்த நாடகங்களை நடத்த முடியாது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை நடத்தியது போல நிச்சயமாக மோடியால் டிடிவி தினகரனை நடத்த முடியாது.

தினகரன் மீது இருக்கும் மூன்று அந்நிய செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணை, சென்னை நீதிமன்றத்தில் வேகம் பிடிக்க ஆரம்பித்திருகிறது. இது தவிர டிடிவி தினகரனை Cofeposa என்கின்ற அந்நிய செலவானி சட்டத்தில் 1996 - 1997 ம் ஆண்டு காலத்தில் அமலாக்கத் துறை ஓராண்டு சிறையில் வைத்திருந்தது. இந்த தடுப்புக் காவல் சரியானது தான் என்று 2006 ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்டவரின் (டிடிவி தினகரன்) பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டுமல்ல அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரின் சொத்துக் களையும் மத்திய அரசு முடக்கி விடும்.

ஆனால் இந்த தீர்ப்பு வந்து 11 ஆண்டுகள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இந்த வழக்கும் விரைவில் சூடு பிடிக்கலாம். உச்ச நீதிமன்றத்துக்கு எவராவது இந்த விவகாரத்தை கொண்டு போனால் டிடிவி தினகரனுக்கு நிலைமை சிக்கலாக மாறலாம். ஆனால் 11 ஆண்டுகள் கழிந்து விட்டதால், உச்ச நீதிமன்றம் எப்படி இந்த பிரச்சனையை அணுகும் என்று உறுதியாக நாம் எதுவும் சொல்ல முடியாது'' என்கிறார் அமலாக்கத் துறையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர்.

''இவ்வாறு கடினமான சட்ட சிக்கல்கள் இருந்தும் டிடிவி தினகரன் துணிச்சலுடன், மோடியின் விருப்பத்துக்கு மாறாக நேரடி அரசியிலில் குதித்து இருப்பதுதான் ஆச்சரியமானது. திரும்ப, திரும்ப ஒருவரை, அதுவும் ஒரு அரசியல்வாதியை மட்டும் குறி வைத்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் வேட்டை நாய்களாக பாய்வது என்பது எதிரான பலன்களைத் தான் கொடுக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Boomarang ஆகும் என்பார்கள்'' என்கிறார் டில்லியில் உள்ள மூத்த பத்திரிகையாளர் அஹமது ஷபீர்.

ஆகவே நிச்சயமாக, கள அரசியிலில், தெருத் தெருவாக, டிடிவி தினகரன் போக ஆரம்பிக்கிறார் என்றால் அவரை சமாளிப்பது என்பது மோடிக்கு அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வேளை, கற்பனையாகவே வைத்துக் கொள்ளுவோம் .... டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில், முழுமையாக இல்லாவிட்டாலும், பெரும்பாலுமான அஇஅதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து விடுகிறார்கள் என்றால், அப்போது அஇஅதிமுக வுடன் 2019 மக்களவைத் தேர்தலில் மோடியின் பாஜக கூட்டணி வைத்துக் கொள்ளுவது என்பது சாத்தியமாகலாம். டிடிவி தினகரனும், அரசியிலின் நெளிவு, சுளிவு களை நன்கறிந்தவர் என்ற காரணத்தால் அவரும் பாஜக வுடன் கை கோர்க்கலாம்.

ஆனால் அதற்கு முன்பாக மோடி திருப்தி அடையும் அளவுக்கு அஇஅதிமுக வின் நிர்வாகிகளை மட்டுமல்ல, அஇஅதிமுகவின் வாக்கு வங்கியையும் டிடிவி தினகரன் தன் வசப் படுத்துவேண்டியிருக்கும்...

இதுதான் அடிப்படையான விஷயம் .....மோடியின் அரசியல் ஆளுமை தெரிந்தவர்களுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அஇஅதிமுக வை மோடி நடத்திக் கொண்டிருக்கும் விதத்தை அறிந்தவர்களுக்கு, அவ்வளவு சுலபத்தில் தமிழகத்தில் டிடிவி தினகரன் தன்னுடைய அரசியலை விஸ்தரித்துக் கொள்ளுவதை மோடி விரும்ப மாட்டார் என்பதுதான். இதில் குறிப்பான விஷயம், விவரம் அறிந்தவர்களுக்கு தெரிந்த விஷயம், சசிகலா மட்டுமல்ல, சசிகலாவின் சொந்த பந்தங்கள் என்று ஒருவர் கூட அஇஅதிமுக வில் இருக்க கூடாது என்பதுதான் மோடியின் கட்டளையாக இருக்கிறது. அஇஅதிமுக வுடன் அரசியல் உறவு கொள்ள மோடி போடும் முதல் கண்டிஷனே அதுதான். இதுதான் மோடியின் சீடர் ஓபிஎஸ், அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும், (தற்போது இது மூன்று ஆகி விட்டது) ஒன்று சேர்வதற்கு போடும் முதல் கண்டிஷனும்.

இந்த பின்புலத்தில் தற்போதைய தமிழக அரசியலை பார்ப்பவர்களுக்குத் தான் இரண்டு அணிகளும் இனி என்றுமே சேர முடியாது என்பது புரியும். இதில் புதியதாக வந்திருக்கும் டிடிவி அணி, நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றியிருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ....ஓபிஎஸ் ஸையும், எடப்பாடியையும் நடத்தியதை போல டிடிவி தினகரனை மோடியால் நடத்த முடியாது ... ஏனெனில் மற்றவர்களை போல அல்லாமல் டிடிவி நேரடியாக, களத்தில் இறங்கி, பாஜகவுக்கு எதிரான அரசியலை நடத்திப் போகிறார். அந்த அரசியலை, மோடி தன் வசம் இருக்கும் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை மட்டும் வைத்து சமாளிக்க முடியாது.

அந்த அரசியல் வல்லமை வெறும் 2 சதவிகித வாக்கு வங்கியை மட்டுமே வைத்திருக்கும் தமிழக பாஜகவுக்கு கிஞ்சித்தும் கிடையாது. அதனால்தான் சொல்லுகிறோம் ....டிடிவி தினகரனை சமாளிப்பது என்பது மோடிக்கு அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.

கிட்டத்தட்ட ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவுகளின் ஆதிக்கம் அஇஅதிமுகவில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது அஇஅதிமுக அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். அஇஅதிமுகவின் டிஎன்ஏ ல் கலந்திருக்கும் ஒரு விஷயத்தை ''சசிகலாவையும், அவரது குடும்பத்தையும், மொத்தமாக தூக்கி எறியுங்கள் என்று உத்தரவு போடும், சட்டாம் பிள்ளை தனம் செய்யும் மோடியின் அணுகுமுறை தான் இன்று அஇஅதிமுக வில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் மூலவேர். ஒரு பிராந்திய கட்சியில் யார் இருக்கலாம், இருக்கக் கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரம் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது.

டிடிவி தினகரன் விஷயத்தில் மோடி என்ன செய்யப் போகிறார், இறுதியில் வெல்லப் போவது யார் என்றெல்லாம் இப்போதைக்கு தெரியவில்லை. டிடிவி தினகரன் தோற்றுப் போகலாம் அல்லது வெல்லவும் செய்யலாம். ஆனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி போல போராடாமல் அவர் பின்வாங்க மாட்டார்.

நிச்சயமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை வழிக்கு கொண்டு வந்தது போல மோடியால் டிடிவி தினகரனை வழிக்கு கொண்டு வர முடியாது. ஏனெனில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி விஷயத்தில் அவர்களை அரசியலை விட்டு விலகி விடுங்கள் என்று மோடி சொல்லவில்லை. ஆனால் சசிகலா விஷயத்தில், சசிகலா மட்டுமல்ல, அவரைச் சார்ந்த அத்தனை பேரையும், டிடிவி தினகரன் உள்பட அஇஅதிமுகவிலிருந்து தூக்கி எறியுங்கள் என்பதுதான் மோடியின் கட்டளை. சுயமரியாதை ஒரு சதவிகிதம் கொண்ட ஒரு கட்சி கூட இந்த கட்டளைகளை ஏற்றுக் கொள்ளாது.

தன்னுடைய அரசியல் இருப்புக்காக போராடும் எந்தவோர் அரசியல்வாதியும் மூர்தன்யமாகத் தான் போராடுவார். டிடிவி தினகரன் தற்போது அதனைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதனால் நிச்சயமாக மோடியால் அவ்வளவு சுலபமாக டிடிவி தினகரனை அரசியலில் இருந்து தூக்கி எறிய முடியாது.

"வல்லவனுக்கும் வழுக்குப் பாறை உண்டு" என்ற பழமொழி அறிந்தவர்களுக்கு இது புரியும். டிடிவி தினகரன் மற்றும் தற்போதைய அஇஅதிமுக விவகாரம் மோடிக்கு வழுக்குப் பாறையாக அமைந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஏக இந்தியாவுக்கும் மிகவும் நல்லது ... இந்திய ஜனநாயகத்துக்கு மிக, மிக நல்லது!.

English summary
TTV Dinakaran has been released on Bail. It has created much expectations in the Political circles and among the supporters of ADMK Amma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X