For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துரைமுருகன், பழனிமாணிக்கம், சுப.தங்கவேலனுக்கு சீட் கொடுக்க முடியவில்லையே... கருணாநிதி வேதனை

By Mayura Akilan
|

சென்னை: தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வின்போது துரைமுருகன், பழனிமாணிக்கம், அழகு திருநாவுக்கரசு, சுப. தங்கவேலன் போன்ற மூத்த சில தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

''16வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தொகுதிகளும், அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் உரிய நேர்காணலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுவிட்டன.

karunanidhi

இந்த முறை தன்னலம் பாராமல் தி.மு.க.விற்காக பல ஆண்டுகள் உழைத்த, மூத்த சில தொண்டர்களின் விருப்பங்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் என்னிடம் கேட்டபோது, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்று என்னால் கூறப்பட்ட போதிலும், தோழமைக்கட்சிகளோடு கொண்டுள்ள கூட்டணி உணர்வையும் அவர்களுடைய உள்ளக் கிடக்கையையும் எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டேன்.

துரைமுருகன் மகன்

உதாரணமாக, துரைமுருகன் 24 மணி நேரமும் என்னுடன் இருப்பவர். தி.மு.க.வின் மூத்த உறுப்பினர். துணை பொதுச் செயலாளர்களில் ஒருவர். மூத்த அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவர். தி.மு.க. சார்பில் போட்டியிட வேண்டிய உறுப்பினர்களின் பட்டியலை தயாரிக்கும்போது, என்னுடனும், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடனும் அமர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தவர்.

வேலூர் தொகுதி கூட்டணிக்கு

அவருடைய மகனுக்காக வேலூர் தொகுதி வேண்டுமென்று வேலூர் தி.மு.க.வினர் விருப்பம் தெரிவித்தபோது, என்னால் அதனை மறுக்க முடியவில்லை. ஆனால் அந்தத் தொகுதி, நம்முடன் பல ஆண்டு காலமாகத் தோழமை கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்ட தொகுதி என்றும், அங்கே தற்போது அந்தக் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருப்பவரே மீண்டும் போட்டியிட விரும்புகிறார் என்றும் அந்தக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக உள்ள காதர் மொய்தீன் கேட்டபோது அதனை எங்களால் மறுக்க முடியவில்லை.

அதிலும் காதர் மொய்தீன் வேறொரு கட்சி என்று கூட கூற முடியாது. தி.மு.க.வின் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொண்ட உயர்ந்த பண்பாளர். அந்தத் தொகுதியில் முடிவெடுக்க நான் பட்டபாட்டினை நான் தான் அறிவேன்.

தஞ்சாவூர் பிரச்சினை

மற்றொரு தொகுதி, என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி. அந்தத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே தி.மு.க. சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள் ஒருவர் தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவே இருந்தவர், டி.ஆர்.பாலு. மற்றொருவர் மத்திய அமைச்சரவையில் நிதித் துறையில் இணை அமைச்சராக இருந்தவர், பழனிமாணிக்கம். மூன்றாமவர் அ.தி.மு.க. அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் அந்தக் கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நம்முடைய தி.மு.க.விற்கு வந்து, பணிகளை அந்த வட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அழகு திருநாவுக்கரசு.

மூவரில் ஒருவருக்கு சீட்

இந்த மூவரில் ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; எப்படி முடிவெடுப்பது? இதிலே ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், மற்ற இருவரையும் எப்படிச் சந்திப்பது? எவ்வாறு சமாதானம் கூறுவது? ஆனால், துரைமுருகன் ஆகட்டும், டி.ஆர்.பாலு ஆகட்டும், பழனிமாணிக்கம் ஆகட்டும், இவர்கள் எல்லாம் எனதருமைத் தம்பிகள் அல்லவா? நான் வளர்த்தவர்கள் அல்லவா?

என் தம்பிகள்

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நான் அறிவித்த பிறகு டி.ஆர்.பாலு தஞ்சைக்குச் சென்றதும், நேராக பழனிமாணிக்கம் வீட்டிற்குச் சென்று பொன்னாடை அணிவித்திருக்கிறார். பழனிமாணிக்கம் அவரை வரவேற்று கட்டிப் பிடித்துக்கொண்டு சால்வை அணிவித்ததோடு, நேற்று மாலையிலேயே செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்ட தி.மு.க. சார்பில் கூட்டி, டி.ஆர்.பாலுவை வெற்றி பெறச்செய்ய அனைவரும் உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டதைத் தொலைக்காட்சியிலே நான் பார்த்தபோது, ''என் தம்பிகள், என் தம்பிகள் தான்" என்று எனக்கு மகிழ்ச்சியும் மனதில் ஒரு துள்ளலும் ஏற்பட்டது.

ராமநாதபுரம், திருவண்ணாமலை

இதுபோலத்தான் ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் சுப.தங்கவேலன், தன் மகன், சம்பத் போட்டியிடுவதற்காக அனுமதிகோரினார். திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, கு.கருணாநிதிக்காக அனுமதி கோரினார். கோவையில் பொங்கலூர் பழனிசாமி தன் மகன் பைந்தமிழ்பாரிக்காக வேண்டுகோள் விடுத்தார். அதுபோலவே திண்டுக்கல் ஐ.பெரியசாமியும், விழுப்புரம் பொன்முடியும், திருவண்ணாமலை எ.வ.வேலுவும் தங்களின் மகன்கள் போட்டியிடுவதற்குத் தயாராக இருந்த போதிலும், என் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவே இல்லை.

வாய்ப்பு தர முடியவில்லை

மேலும், பல தொகுதிகளில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக நன்றாகப் பணியாற்றி வந்த ஒன்பது பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியவில்லை. இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால், அடுத்த முறை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரும், தி.மு.க.வை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வது தான் இப்போது முக்கியமானது என்று ஆர்வத்தோடு பணிகளை ஆற்றிட வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi said that, his statement he was not satisfied for senior leader Durai Murugan, S.S. PalaniManickam, and Subha Thangavelan for Lok Sabha Seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X