For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி சுட்டிக் காட்டும் பிரதமர் தலைமையில்தான் புதிய மத்திய அரசு: மு.க.ஸ்டாலின்

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டும் பிரதமர் தலைமையில்தான் அடுத்த மத்திய அரசு அமையும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"தி ஹிந்து பிசினஸ்லைன்" நாளேட்டுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

கேள்வி: 2014 லோக்சபா தேர்தல் களத்தில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: மூன்றாண்டு காலமாக தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய மக்களிடம் ஆதரவு கேட்கிறோம். தி.மு.க. முன் வைத்துள்ள இந்த முழக்கம்தான் மக்களைக் கவர்ந்துள்ள இன்றைய தேர்தல் களக் காட்சி.

In TN, contest is only between DMK and AIADMK

தேசியக் கட்சி இல்லாமல் கூட்டணி

கேள்வி: எப்போதும் பலமான கூட்டணியை தி.மு.க. உருவாக்கும். ஆனால் தேசியக் கட்சிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கிறீர்கள். அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறதா? அதன் தாக்கம் தேர்தலில் எப்படியிருக்கும்?

பதில்: ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். 16 பாராளுமன்றத் தேர்தல்களை சந்தித்த அனுபவமிக்க கலைஞரைத் தலைவராகக் கொண்ட இயக்கம். ஆளுங்கட்சியாக இருந்த போது மக்களுக்கு அளித்த திட்டங்கள், மத்திய ஆட்சியில் தி.மு.க. பங்கேற்ற போது தமிழகத்திற்கு கொண்டு வந்த எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் வைத்து வாக்கு கேட்கிறோம்.

எங்கள் வேட்பாளர்களை இன்முகத்துடன் வரவேற்கும் மக்கள், அ.தி.மு.க. வாக்காளர்களை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டும் காட்சிகளை பார்க்கிறீர்கள். எங்களுக்கு மக்கள் அளிக்கும் மகத்தான வரவேற்பு, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. வின் வெற்றிக்கு அச்சாரமாக உள்ளது.

பலமுனை போட்டியில் திமுக

கேள்வி: தமிழகத்தில் பலமுனைப் போட்டி நிலவுகிறது- இதனால் மாநிலத்தில் என்ன நிலைமை? அது தி.மு.க.வின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: களத்தில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும்தான் போட்டி. மத்தியில் மதசார்பற்ற, நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். கடந்த 43 வருடங்களில் தி.மு.க. ஒவ்வொரு முறை மத்திய ஆட்சியை ஆதரித்த போதும், நிலையான ஆட்சிக்கும், மதசார்பற்ற தன்மையை போற்றி பாதுகாக்கவும் என்றைக்குமே தி.மு.க. உறுதியுடன் துணை நின்றிருக்கிறது. அப்படியொரு நம்பகத்தன்மை உள்ள தி.மு.க.வையே மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். ஆனால் அ.தி.மு.க.வின் வரலாறு என்ன? பி.ஜே.பி. ஆட்சியை கவிழ்த்ததுதான் அ.தி.மு.க.!

பிரசார அனுபவம் என்ன?

கேள்வி: பிரச்சாரத்தை நீங்கள்தான் முன்னனியிலிருந்து நடத்துகிறீர்கள்- உங்கள் அனுபவம் என்ன? குறிப்பாக கட்சியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் எந்த அளவுக்கு உங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று கருதுகிறீர்கள்?

பதில்: தன் 90 வயதிலும் பிரச்சாரத்தை முன்னனின்று நடத்துபவர் தலைவர் கலைஞர்தான். அவர் தான் எங்களுக்கு எல்லாம் கலங்கரை விளக்கம். பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் மக்களிடம், "நமக்காக உழைத்த தி.மு.க.விற்கு தவறான தீர்ப்பை சென்ற தேர்தலில் வழங்கி விட்டோமே" என்ற வேதனை இருப்பதைப் பார்க்க முடிகிறது. அது இந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு எதிராக பிரதிபலிக்கும்.

சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் போன்ற பொறுப்புகளில் இருந்து நான் ஆற்றிய பணிகளை மக்கள் மறக்கவில்லை என்பதும், கழகத் தொண்டர்களும் சரி, மக்களும் சரி என்னை தங்களில் ஒருவனாகவே உணருகிறார்கள் என்பதையும் பிரச்சாரத்தில் என்னால் காண முடிகிறது.

தேர்தலுக்குப் பின்னர்?

கேள்வி: தேர்தலுக்குப் பிறகு கூட்டணி தேவைப்படுமா? தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?- குறிப்பாக காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார் என்பது போல் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் பேசியிருக்கிறாரே?

பதில்: பிரதமராக கனவு காணுவோருக்குத்தான் தேர்தலுக்கு பிறகு கூட்டணி தேவை. பிரதமர்களை உருவாக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஏற்கனவே கலைஞர் அறிவித்திருக்கிறார். மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் விருப்பம் என்பதை கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிச்சயம் கலைஞர் சுட்டிக்காட்டும் பிரதமர் தலைமையில் மதச்சார்பற்ற அரசு அமையும்.

எந்த ஜியும் பாதிக்காது

கேள்வி: 2-ஜி பிரச்சினைகளும், குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள சச்சரவுகளும் மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்: தமிழகம்- பெங்களூர்- டெல்லி என்று உலா வந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? தி.மு.க. ஆட்சியில் தங்கள் வாழ்வில் வீசிய வசந்தத்தை சூறையாடிய ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு தேர்தலில் பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள்! அதனால் எந்த "ஜி"யும் தி.மு.க. வின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இதுதான் நோக்கம்

கேள்வி: வருகின்ற காலத்தில் தி.மு.க. எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: சமூக நீதிக்கு போராடிய இயக்கம் தி.மு.க. அதை பெற்றுக் கொடுத்த இயக்கமும் தி.மு.க.தான். மத்திய அரசிலும் முழு வீச்சில் சமூக நீதியை பெற்றுக் கொடுக்க வருங்காலங்களில் போராடும். அதே போல், தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி, சேது சமுத்திரத்திட்டம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்களை முடக்கி, தமிழகத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக மாற்றி விட்ட ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை தோலுரித்துக் காட்டுவதுதான் தி.மு.க.வின் முக்கிய நோக்கம்.

மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைத்த கையோடு, ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர தி.மு.க. தன் பயணத்தை தொடரும்.

இளம்வாக்காளர்கள் ஆதரவு

கேள்வி: வாக்காளர்களில் இளம் வாக்காளர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அந்த இளைஞர்களுக்காக தி.மு.க. என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது?

பதில்: இளைஞர்களின் ஆதரவுடன் என்றுமே வளர்ந்து கொண்டு இருக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க முதன் முதலில் "டைடல் பார்க்" தமிழகத்தில் கொண்டு வந்தவர் கலைஞர்தான். திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் கொண்டு வந்தவரும் கலைஞர்தான். இப்போது கூட, கல்விக்கு மொத்த உள் உற்பத்தியில் 7 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாணவ- மாணவியரின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மாவட்ட தலைநகரங்கள் தோறும் சர்வதேச விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்ற பல்வேறு இளைஞர் நலன் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளன. இளைஞர்கள் நம்பும் ஒரே கட்சி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இவ்வாறு ஸ்டாலின் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

English summary
DMK will have a role in identifying the next Prime Minister, says party Senior leader MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X