G Square IT Raid: தமிழகம் முழுவதும் ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித் துறை ரெய்டு
சென்னை: தமிழகத்தில் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 50 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான ஜிஸ்கொயர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியான புகாரை அடுத்து அந்த நிறுவனங்களில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடக்கிறது. சென்னை நீலாங்கரையில் ஜிஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

அது போல் திருச்சியில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது. பெங்களூர், மைசூர் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் காலை வந்த வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கோவை அவினாசி சாலையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்தின் இயக்குநர் பாலாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் அந்த நிறுவனத்தின் ஆடிட்டரின் அண்ணாநகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் "2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜிஸ்கொயர் நிறுவனம் நஷ்டத்தில் வருவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 2020 இல் ரூ 7 கோடியும் 2021 இல் ரூ 8 கோடியும் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது கடந்த 2 ஆண்டுகளில் திடீர் முதலீடுகளுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியது எப்படி, இந்த நிறுவனத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கிறதா, வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்திற்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா" என்றும் பாலாவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, வரவு செலவு கணக்கு, முதலீடு ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications