For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று சென்னையில் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய, இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று மத்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

தமிழ்நாடு - இலங்கை மீனவர்களுக்கிடையே 27.1.2014 அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், தமிழ்நாட்டின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ். சித்திரவேலு மற்றும் எம்.ஜெகநாதன்; தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பி.இராஜமாணிக்கம்; புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருவாளர்கள் என். குட்டியாண்டி மற்றும் ஜி. இராமகிருஷ்ணன்; ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாளர்கள் பி. ஜேசுராஜா, யு. அருளானந்தம், எம்.எஸ். அருள், எஸ்.பி. இராயப்பன் மற்றும் என். தேவதாஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள். மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பாக திரு எம்.இளங்கோ அவர்கள் கலந்து கொள்வார்.

இலங்கை மீனவர்களின் சார்பாக டி.சதாசிவம், எ.ஜஸ்டின் ஜோய்ஸா, அமல்தாஸ் ஜேசுதாசன் சூசை, என். பொன்னம்பலம், பி.செந்தில்நாதன், ஜே.எப். அமிர்தநாதர், டபிள்யு.ஜே. காமிலஸ் பெரைரா, எஸ்.எஸ். அருள் ஜெனிபர், கே.டபிள்யு.எம். பெர்னாண்டோ மற்றும் பி.அந்தோணி முத்து ஆகிய மீனவப் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பார்வையாளர்களாக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் முனைவர் ச.விஜயகுமார், மீன்வளத்துறை இயக்குநர் ச.முனியநாதன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் க.ரெங்கராஜூ, மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசு சார்பாக திருவாளார்கள் நிமல் ஹெட்டியராச்சி, மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குநர், முனைவர் எஸ். சுபசிங்கே, மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர், நிவான் பெரீஸ், ஸ்டேட் கவுன்சிலர், அட்டார்னி ஜெனரல் அலுவலகம், டபிள்யு.எஸ்.எல். டிசில்வா மற்றும் பி.எஸ். மிரண்டா, உதவி இயக்குநர்கள், மீன் வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டு துறை, மற்றும் இந்திய அரசு சார்பாக மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் சுசித்ரா துரை, மற்றும் துணைச் செயலர் .மயங்க் ஜோஷி, இலங்கைக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ்தர்ஷன் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 27.1.2014 அன்று காலை நடைபெறும். தமிழக முதல்வர் உத்தரவுப்படி நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது,

(1) தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லை பாரபட்சமின்றி இருதரப்பு பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்துதல்.

(2) முந்தைய இந்திய-இலங்கை கலந்தாய்வின்போது ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசம் மற்றும் இலங்கை அதிகாரிகளால் மீன்பிடிப்படகுகள் / உபகரணங்களை பறிமுதல் செய்தல் மற்றும் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல்.

(3) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் விரைவாகவும், சுமூகமாகவும் நாடு திரும்புவதற்கான வழி வகைகள் குறித்து விவாதித்தல்.

(4) பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உகந்த மீன்பிடி முறைகளை தெரிவித்தல்.

(5) முக்கிய தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்குகந்த மீன்பிடிப்பு முறைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாக் நீரிணைப்புப் பகுதியில் மீன் மற்றும் மீன்வளங்களை நீண்டகால வாழ்வாதாரத்திற்கு உகந்த வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலும் சாத்தியக்கூறுகளை கண்டறிதல் ஆகிய பொருள்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

ஜெயலலிதா அவர்களால் கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (w.p.civil no. 561/2008) தொடரப்பட்டு, தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்ட வழக்கிற்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் தமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், பேச்சுவார்த்தையின்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே செயல்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை, இரு நாட்டு மீனவர்களும் தங்களது மீன்பிடித் தொழிலை எவ்வித அச்சமுமின்றி மேற்கொள்ள வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indo -Sri Lankan fishermen talks will be held in Chennai tomorrow in the presence of the officials from Centre, TN govt and Lankan govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X