ஐபிஎல் வெற்றிக் கோப்பை..தி.நகர் ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை: ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்று சென்னை திரும்பிய சிஎஸ்கே அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டுமே என்று பல லட்சக்கணக்கானோர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. சிஎஸ்கே அணி வெற்றி கோப்பையுடன்
சென்னை திரும்பியுள்ளது. கோப்பையை சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். கோவிந்தா முழக்கத்தையும் தாண்டி சிஎஸ்கே அணியை ரசிகர்கள் வாழ்த்திய முழக்கம் எதிரொலித்தது.

ஐபிஎல் டி 20 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டி படு சுவாரஸ்யமாக இருந்தது. டாஸ் வென்றாலும் பீல்டிங் தேர்வு செய்தார் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி.
வெற்றி பெற வேண்டுமே என்று கேப்டன் தோனி உள்பட எல்லோரும் கண்களை மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டனர். கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தை சிக்ஸராகும், 6வது பந்தை பவுண்டரிக்கும் அடித்து வின்னிங் ஷாட் அடித்த ஜடேஜா, பந்து பவுண்டரி லைனுக்கும் சென்றதும் துள்ளிக் குதித்து மகிழ்ச்சி துள்ளலுடன் ஓடிவந்தார். கேப்டன் தோனி கட்டித்தழுவி ஜடேஜாவை தூக்கினார். இந்த வெற்றி தருணங்களை கடந்த 2 நாட்களாகவே சிஎஸ்கே அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான என்.சீனிவாசன், தோனியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், பிரமாதம் கேப்டன். நீங்கள் அதிசயம் நிகழ்த்தி உள்ளீர்கள். இது உங்களால் மட்டுமே முடியும். அணியில் உள்ள வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று கூறி வாழ்த்தினார். தொடர்ந்து, தோனியை ஓய்வெடுக்க கூறிய என்.சீனிவாசன், வெற்றியைக் கொண்டாட சிஎஸ்கே அணியுடன் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் வென்ற கோப்பையுடன் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் சிஎஸ்கே சேர்மன் ஆர்.சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் சென்னை திரும்பினர். அப்போது, விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி, வெற்றிக் கோப்பைக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காசி விஸ்வநாதன், "ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அடுத்த ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் என்று தோனியே தெரிவித்துள்ளார். இதுவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே வீரர்கள் யாரும் தற்போது சென்னை வரவில்லை. சென்னையில் நடக்க உள்ள வெற்றி கொண்டாட்டங்கள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

விமான நிலையத்தில் இருந்து நேராக சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு ஐபிஎல் கோப்பையை கொண்டு சென்றனர். தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தேவஸ்தானத்தின் உறுப்பினருமான என்.சீனிவாசன் கலந்து கொண்டார். பூஜை முடிந்த பிறகு அவரிடம் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. அப்போது ஏழுமலையான் கோவிலில் கோவிந்த முழக்கத்தை தாண்டி சிஎஸ்கே அணியை வாழ்த்தியும் தோனியை வாழ்த்தியும் ரசிகர்கள் முழக்கமிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய என். சீனிவாசன், இந்த ஐபிஎல் சீசன் ரசிகர்கள் தோனியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது. நாங்களும் அவரை நேசிக்கிறோம் என்றார். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர் சென்னை வரும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலினை கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications