• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரம்பமாகிறது அமித் ஷா ஆட்டம்.. தமிழகத்தில்!

|
  தமிழகத்தில் ஆரம்பமாகிறது அமித் ஷா ஆட்டம்..வீடியோ

  -ராஜாளி

  கழகங்கள் இல்லாத தமிழகம் - பாஜக

  திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் ஒரு கட்சியை எப்படி அழைக்க முடியும்? - ஸ்டாலின்

  இனி இந்த கேள்விகளுக்கு பொருள் இருக்குமா என்று தெரியவில்லை. அப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல். பொதுவாக மாற்று அணியில் அல்லது மாற்றுக் கொள்கைகள் கொண்ட கட்சிகளோ அல்லது முந்தின நாள் இரவுவரை கழுவி கழுவி ஊற்றிய கட்சிகளோடு கூட்டணி வைக்க நேரும்போதோ தமிழக அரசியல் கட்சிகள் திருவாய் மலர்ந்து அருளும் ஒரு வாக்கியம் "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரிகளும் இல்லை" இந்த வாக்கியம் மறுபடியும் உண்மையாக போகிறதா என்ற கருத்துகள் கருணாநிதி இல்லாத, ஜெயலலிதா இல்லாத அரசியல் சூழலில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

  Is BJP ready to launch its game in Tamil Nadu?

  இம்மாதம் 30 ம் தேதி கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் தேசியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவுள்ளார். இதுதான் இப்போது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்தக் கட்டுரையின் முதலில் குறிப்பிட்டது போல் கழகங்கள் இல்லாத தமிழகம் என்பது பாஜகவின் கனவு. அதுபோல கடந்த 2017 ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா நடைப்பெற்றபோது பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏன் என பத்திரிக்கையாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த பதில்தான் திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் ஒரு கட்சியை எப்படி அழைக்க முடியும்? என்ற இந்த கேள்வி.

  இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்த மோடியையும், அமித் ஷாவையும் கோ பேக் மோடி என்றும், கோ பேக் அமித் ஷா என்றும் துரத்திய கதை தமிழகம் அறிந்ததே. மோடி திரும்பிச் சென்ற பின்னர் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை என்பது இன்னமும் பலமாக அடித்துக்கொண்டு இருக்கிறது என்பது கள எதார்த்தம்.

  ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை தனது விருப்பப்படி ஆட்டுவித்து வரும் பாஜக சமீப காலமாக ஏனோ ஓ. பி. எஸ் க்கும், ஈ பி எஸ் க்கும் பாராமுகமாய் இருந்து வருகிறது. அதோடு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பப்ட்டிருந்தபோது மரபுகளை மீறி அவரை வந்து பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த். அடுத்ததாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாய்டுவின் வருகை, கருணாநிதி இறந்தபோது இரு அவைகளையும் ஒத்தி வைத்து அவருக்காக அஞ்சலி செலுத்தியது என்று பாஜக அதிமுகவை விட திமுக பக்கம் அதிக நெருக்கம் காட்டி வருகிறது.

  இந்நிலையில்தான் தெற்கே உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைக்கப்பட்டிருக்கிறார். அதை திமுக அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழாக வெளியிட்டுவிட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலங்களைவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆஸாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதில் அமித் ஷாவின் பெயர் அழைப்பிதழில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதோடு திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் பாஜக எதிர் கட்சிதானே ஒழிய எதிரிக் கட்சி அல்ல என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

  இப்படி தேசியத்தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள நிகழ்ச்சியில் இடதுசாரிகள் உட்பட பல தலைவர்களும் சனாதன கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பார்கள். அதை பாஜகவும், திமுகவும் எப்படி எதிர்கொள்வார்கள். கருணாநிதி சமூக நீதிக்காகவும், இட ஒதுக்கீட்டுக்காகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அமித் ஷா கலந்து கொள்கிறார் என்பதற்காக திமுக இவற்றை பேசாமல் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்துமா? அல்லது கருணாநிதி மதவாதத்திலும் இந்துத்துவாவிலும் ஈடுபாடு கொண்டவர் என்று அமித் ஷா பேசுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

  GO BACK MODI#, GO BACK AMITSHA#, என்பதை உலக அளவில் டிரன்ட் ஆக்கிய உடன்பிறப்புகள் அமித் ஷாவின் வருகையை ஆகஸ்ட் 30 ம் தேதி எப்படி வரவேற்பார்கள் என்ற கேள்வியும் இந்த நேரத்தில் எழாமல் இல்லை. அமித் ஷாவை திமுக அழைத்திருப்பது தற்போது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜக திமுக மீது அளவு கடந்த பாசம் காட்டுவதும், திமுக பாஜகவை நெருங்குவதும் புதிய கூட்டணிக்கான அடையாளங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. அப்படி திமுக கூட்டணியில் பாஜக இணையுமேயானால் இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிறுபான்மை கட்சிகள் திமுகவோடு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இது திமுகவிற்கு பெரும் பலவீனத்தை ஏற்படுத்தும்.
  அமித் ஷாவின் வருகை திமுக கூட்டணிக்கான அச்சாரம் என்பது வெறும் யூகம்தான் என்று வைகோ கூறியிருக்கிறார். இது திமுக கூட்டணியில் பாஜக இணைவதை அவர் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. அதுபோல மதவாதம், மதசார்பின்மை என்ற அடிப்படையில்தான் கூட்டணிகள் அமையும் என்று திருமாவளவனும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த சில காலங்களாக திமுகவின் நிலைப்பாட்டை விசிக, இடதுசாரிகள், மதிமுக போன்றவை ஆதரித்ததற்கும், திமுக ஏற்பாடு செய்த கூட்டங்களில் அவர்கள் பங்கேடுத்ததற்கும் காரணம் பாஜக எதிர்ப்பு நிலை என்பதை திமுக எடுத்ததே காரணம்.

  இப்படியாக திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து தனக்கு ஒரு சரிவை ஏற்படுத்துமா அல்லது தமிழகத்தில் தனது பரம வைரியான அதிமுகவிற்கு பாஜகவின் ஆதரவை விலக்கிவிடுவது என்ற நிலைப்பாடா என்பது போக போகத் தெரியும். ஏனெனில் இப்போது இருக்கின்ற அரசியல் சூழலில் திமுகவை மாநிலக் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை விருபுகின்றன. காங்கிரசம், இடது சாரிகளும் ஏற்கனெவே திமுக கூட்டணியில்தான் இருக்கின்றன. இந்த இரு தேசிய கட்சிகளும் நிச்சயமாக அதிமுகவை தங்களது தோழனாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆக தேர்தல் களத்தில் அதிமுகவை தனிமைப் படுத்த திமுக எண்ணுகிறதா என்பதும் திமுகவின் தற்போதைய செயல்பாடுகள் எண்ண வைக்கின்றன.

  மாநில சுயாட்சியை மத்திய அரசு நசுக்க நினைக்கிறது என்று குரலெழுப்பும் திமுக வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம் பாஜகவுடன் நெருக்கம் காண்பித்து அதை தேர்தலிலும் கொண்டு வந்தது என்றால் ஸ்டாலினின் இமேஜ் நிச்சயமாக கீழிறங்கும் என்பதோடு தமிழக மக்கள் மத்தியில் திமுக மீது தற்போது இருக்கும் நன்மதிப்பும் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜகவை பொறுத்தமட்டில் மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அமித் ஷா ஒரு இரங்கல் கூட்டத்திற்கு சாதாரணமாக வந்து போகும் தலைவர் இல்லை. அவர் ஒரு மாநிலத்திற்கு வருகிறார் என்றால் அங்கு அமித் ஷாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகப்போகிறது என்று அர்த்தம். ஆக தமிழ்நாட்டில் கூட்டணி குழம்புகளுக்கான ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Sources say that BJP is ready to launch its game in Tamil Nadu as Amit Shah is coming to Tamil Nadu to attend the tribute to Karunanidhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more