சென்னை முதல் மன்னை வரை 3 நாட்களாக நடந்த ரெய்டு! - ஆடிப்போன சசி குடும்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் அலுவலகங்களில் சென்னை முதல் மன்னார்குடி வரை பல இடங்களில் 3வது நாளாக நடந்த வருமான வரி சோதனை இன்று நிறைவடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், பினாமிகளின் அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

IT raids at 135 places continues in TamilNadu

ஜெயாடிவி அலுவலகத்திலும் போயஸ்கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்திலும் 3வது நாளாக சோதனை நடைபெற்றது. எனினும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை.

ஜெயா டி.வி. நிர்வாகியும் இளவரசியின் மகனுமான விவேக்கின் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு பெற்றது. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் கடந்த 63 மணி நேரமாக நீடித்த சோதனை நிறைவு பெற்றது.

இதேபோல் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனையும் நிறைவடைந்துள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் 63 மணி நேரம் சோதனை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்ரியாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணைக்கு நடத்திய பின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீடு அண்ணாநகரில் உள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
ஏராளமான ஆவணங்கள் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள திவாகரனின் மகள் ராஜமாதங்கி வீட்டில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடம்பர கார்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் அடிப்படையில் அவர் வீட்டில் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை அருகே படப்பையில் உள்ள சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் 3வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் அரசு கொள்முதலை நிறுத்திக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் 50 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்துள்ளது. கடலூரில் உள்ள சந்திரசேகரின் வீட்டில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் தொழிலதிபர் சஜீவன் வீட்டில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் வீடு, காம்ப்ளெக்ஸ், அலுவலகம், செந்தில்குமரன் திரையரங்கம், செந்தில் சஜீவனின் வீடு, நீல்கிரி பர்னிச்சர் கடை மற்றும் குடோனிலும் கடந்த 60 மணிநேரம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பெண்கள் கல்லூரியின் பயன்படுத்தப்படாத ஹாஸ்டல் அறையின் அலமாரிகளில் இருந்து தங்கம், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் வாட்ச்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கு சோதனை மேலும் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திவாகரனுக்கு சொந்தமான மன்னார்குடி வீடு, சுந்தரக்கோட்டையில் உள்ள அவருக்குச் சொந்தமான செங்கமல தாயார் மகளிர் கலைக் கல்லூரி, கல்லூரிக்கு எதிரே உள்ள வீடு,ரிஷியூரில் உள்ள திவாகரனின் பண்ணை வீடு மேலமறவாக்காடு கல்லூரி பேராசிரியை அன்புக்கரசி வீடு, புள்ளவராயன் குடிகாட்டில் உள்ள திவாகரனின் சின்ன மாமனார் அக்ரி ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி திருத்துறைப்பூண்டி நடேசன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஆடிப்போயிருக்கிறார்கள் சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income Tax officials continued their massive raids at the premises of Sasikala family in 135 places.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற