For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா: ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணியடித்த தீர்ப்பு- வைகோ பாராட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பு, ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி என்றும், நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம் என்றும் கூறியுள்ளார். மேலும் நீதித்துறையின் நம்பகத்தன்மையை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற தீர்ப்பு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேசமயம் தமிழகம் முழுவதும் நேற்று ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜக வன்முறையை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை:

Jayalalithaa asset case verdict : Vaiko hails verdict

வரலாறு போற்றும் தீர்ப்பு

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம்.

அராஜக வன்முறை

ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர்.

போலீஸ் வேடிக்கை

இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது. முதல்வர்தான் சிறை சென்றாரே தவிர, அரசு நிர்வாகம் என்பது அதிகாரிகளால் இயக்கப்படுவதாகும். காவல்துறையினர் சட்டத்தின் பணியாளர்கள், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள்.

பேருந்து தீவைப்பு

2001 ஆம் ஆண்டில் இதுபோல ஜெயலலிதாவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்தபோது, தர்மபுரியில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் மூவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். அன்று நடந்த வன்முறைக் கொடுமையைக் கருத்தில் கொண்டு அண்ணா தி.மு.க.வினர் பாடம் கற்றார்களா? இல்லை. கட்சித் தலைமை அவர்களை நெறிப்படுத்தியதா? என்றால் அதுவும் இல்லை.

கடமை தவறிய ஜெ

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த முதல்வராக, ‘பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்விதமாக இருப்பினும் தமிழகத்தில் அமைதி காக்க வேண்டும்' என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டிய கடமையைச் செய்யத் தவறினார். அதற்கு மாறாக, அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பெங்களூரில் வந்து குவிவதற்கு, அவருக்குத் தெரிந்தே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மக்கள் அச்சம்

இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பேருந்துப் போக்குவரத்து இல்லை. ஞாயிற்றுக் கிழமையில் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படும் கடைகளும் அச்சத்தால் மூடிக் கிடக்கின்றன.

செயலற்று போன நிர்வாகம்

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புத் தரவேண்டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், நேற்று அரசு இயந்திரம் முற்றிலும் செயலற்றுக் கிடந்தது. ஆளுங்கட்சி அராஜகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அதனால்தான் நேற்று பகலில் தமிழகம் முழுவதிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல், தொலைக்காட்சி ஊடகங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான சூழல் ஆகும்.

நிவாரணம் வழங்குக

இதற்கு முன்பு இப்படி நடைபெற்ற அராஜகச் சம்பவங்களின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றமே ஆணையிட்டது. இதனை மனதில் கொண்டு, நேற்றைய அராஜகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்குகின்ற விதத்தில் வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko today welcomed Chief Minister Jayalalithaa's conviction by a Bangalore special court in the disproportionate assets case and urged police to maintain law and order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X