For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக தலைமை நீதிபதி கூறவில்லை: ஜெ. விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காவல் துறை மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் கூறவில்லை; மேலும் சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பு வழங்க இயலாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்மையிலேயே கருதுவாரேயானால், அதற்கான காரணங்களை விளக்கி இது தொடர்பான வழக்கில் மனு தாக்கல் செய்யத் தயாரா? என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வேண்டும் என்று நீதிபதி தெரிவித்த கருத்து குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த திருவண்ணாமலை எம்.எல்.ஏ. எ.வ.வேலு சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:

திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்த கருத்துகளை ஒட்டியே திமுக உறுப்பினரும் தலைமை நீதிபதி காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக 18.9.2015 அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று சொல்கிறார். தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஒரு சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு மாறானது என்பதை நான் இங்கே முதலில் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். தலைமை நீதிபதி அவ்வாறு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் CISF போன்ற மத்திய பாதுகாப்பு அமைப்பு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது என்பது உண்மை தான். எந்த வழக்கில் அவ்வாறு தெரிவித்தார்கள் என்பதனை இங்கே சற்று விளக்கிட வேண்டும்.

12 பேர் கைது

12 பேர் கைது

கடந்த 14.9.2015 அன்று, உயர் நீதிமன்ற தமிழ் போராட்டக் குழு உறுப்பினர்கள் 12 பேர், செந்தமிழ்செல்வன் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு விசாரணை அறைக்குள் அதாவது Court Hall Of The First Bench-க்குள் நுழைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமெனவும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்றமாக அறிவிக்கக் கோரியும், கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி, வாயை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, முதல் அமர்வு அவர்களது போராட்டத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய உள் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்பி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) அல்லது அதே போன்ற வேறு ஒரு அமைப்பிடம் வழங்கிட வேண்டும் எனக் கூறி அவ்வழக்கை 18.9.2015-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், பொது (நிர்வாகம்) அளித்த புகாரின் பேரில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட செந்தமிழ்செல்வன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மத்திய படை தேவை இல்லை

மத்திய படை தேவை இல்லை

இதனையடுத்து இவ்வழக்கு, 18.9.2015 அன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகங்களை High Security Zone ஆக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வளாகங்களுக்கு தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளிக்கும் என்றும், எனவே, உயர் நீதிமன்ற வளாகங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அவசியமில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டக் கல்லூரி சம்பவம்

சட்டக் கல்லூரி சம்பவம்

கடந்த திமுக ஆட்சியின்போது, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கும், வீட்டிலிருந்து கல்லூரிக்கு பயிலச் செல்லும் இதர பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கும் இடையே நிலவி வந்த முன்விரோதம் காரணமாக, அவர்களுக்குள் தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைக்கப் பெற்று சட்டக் கல்லூரி வளாகத்தில் காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12.11.2008 அன்று பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கொடிய ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பொது மக்கள் முன்னிலையில், இருதரப்பினரும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு ரத்தக்களறி ஏற்படுத்தியதையும், அருகிலிருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததையும், ஊடகங்கள் படம் பிடித்துச் செய்திகள் வெளியிட்டன. தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை ஊடகங்களில் பார்த்து பீதியடைந்த பொது மக்கள் இன்னும் அதை மறந்திருக்க மாட்டார்கள். இச்சம்பவத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் ஏன் தடுக்கப்படவில்லை என வினா எழுந்தபோது, காவல் துறையினருக்கு அனுமதி கிடைக்கவில்லையென அரசு தரப்பில் கூறப்பட்டது.

உயர்நீதிமன்ற வளாகத்தில்...

உயர்நீதிமன்ற வளாகத்தில்...

சில மாத கால இடைவெளியில், முந்தைய திமுக ஆட்சியில் இச்சம்பவத்தையும் விஞ்சும் வகையில் மீண்டும் ஒரு சம்பவம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததை பொது மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் சென்றபோது சில வழக்கறிஞர்கள் மற்றும் சிலர் அவர் மீது முட்டை போன்றவற்றை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கப்பட்ட வழக்கில் சில வழக்கறிஞர்களைக் கைது செய்வது தொடர்பான நிகழ்வில் 19.2.2009 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சரித்திரம் காணாத வன்முறை வெடித்தது.

இதில் உயர் நீதிமன்ற காவல் நிலையமே தீக்கிரையாக்கப்பட்டதுடன், அங்கிருந்த காவல் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயர் நீதிமன்ற வளாகமே போர்க்களம் ஆனது. காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதுடன், தடியடிப் பிரயோகத்திலும் ஈடுபட்டனர். நீதியரசர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் நீதியரசர் ஒருவர் தவிர 64 வழக்கறிஞர்கள், 6 உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், 4 பத்திரிகையாளர்கள், 6 பொது மக்கள் மற்றும் 122 காவல் துறையினர் காயமுற்றனர்.

கருணாநிதி மீது குற்றச்சாட்டு

கருணாநிதி மீது குற்றச்சாட்டு

இந்த வன்முறை குறித்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையம், இச்சம்பவத்தை கண்டித்ததுடன், இருதரப்பினர் நடந்து கொண்ட விதத்தையும் குறை கூறியது. முந்தைய திமுக அரசு மற்றும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால்தான் அச்சம்பவம் நடந்தது என்பது மட்டுமின்றி காவல்துறையும் இழிபெயரை சுமக்க நேரிட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணையை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை (CBI) மேற்கொண்டது.

இச்சம்பவத்தையடுத்து காவலர் முதல் உயரதிகாரிகள் வரை பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கறிஞர்கள் காவல் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களும் இன்றும் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனையடுத்து காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு அது இப்பொழுது தான் சரி செய்யப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை...

சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை...

2011 ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தது போன்ற நிகழ்வுகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து கடந்த நான்கரை ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் நடைபெறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதைக் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன்.

முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் தனது 29.10.2009 நாளிட்ட உத்தரவில் உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படியே செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும், அதாவது காவலர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவதாக இருந்தாலும், புதிய சாதனங்கள் பொருத்துவதாக இருந்தாலும், உயர் நீதிமன்றப் பாதுகாப்புக் குழுவின் உத்தரவுப்படியே செயல்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

14.9.2015 அன்றைய நிகழ்வின் போதும் உதவி ஆணையர் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு கேட்டும் அது கிடைக்கப் பெறாமையால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை.

மத்திய படை?

மத்திய படை?

7.9.2011 அன்று டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வெடிகுண்டு இறப்புகள் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது. 23.2.2009 தேதியிட்ட கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு தேவை என தெரிவித்ததன் அடிப்படையிலும், டெல்லியில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தின் அடிப்படையிலும் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தற்போது அத்தகைய சூழ்நிலை எதுவும் இங்கே இல்லை. இதனைக் கருத்தில் கொண்டே சென்னை உயர் நீதிமன்றத்திற்கு போதிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என ஆர்.கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு 5.8.2015 அன்று, பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என தெரிவித்து இறுதி ஆணை பிறப்பித்துள்ளது.

இதனை அமல்படுத்தியதை தெரிவிக்க வழக்கை 30.10.2015 அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதியரசர்கள் பாதுகாப்பிற்கென 575 காவல் துறையினரும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 177 காவல் துறையினரும் அன்றாட பாதுகாப்பு அலுவலில் இருந்து வருகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் உயர் நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய சாதனங்கள் வாங்குவதற்கு 5 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு புதிய சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு அதாவது திமுக ஆட்சியில், மத்திய தொழில் பாதுகாப்பு படை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வரப்பெற்றுள்ளதே! அப்படியெனில், அப்போதைய காவல் துறையும், காவல் துறைக்கு பொறுப்பு வகித்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும் சரியாக செயல்படவில்லை என்றும், அவர்கள் மீது அப்போது உயர் நீதிமன்றம் நம்பிக்கை இழந்திருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

தமிழக காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்குவதால் தான் வழக்கறிஞர் சங்கம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு உயர் நீதிமன்றத்திற்கு தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

வழக்கில் சேரத் தயாரா?

வழக்கில் சேரத் தயாரா?

கருணாநிதியும், திமுகவினரும், உயர் நீதிமன்றத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மாநில காவல் துறையால் சரியான பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் உண்மையிலேயே கருதுகிறார்களா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசுகிறார்களா?

தமிழக காவல் துறையால் உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்க இயலாது என கருணாநிதி உண்மையிலேயே கருதுவாரேயானால் அதற்கான காரணங்களை விளக்கி திமுகவோ அல்லது திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர் அணியோ இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டு மனு தாக்கல் செய்ய தயாரா? இதனை கருணாநிதிக்கு ஒரு சவாலாகவே நான் விடுக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

English summary
Tamilnadu Chief Minister J Jayalalithaa today challenged DMK president M Karunanidhi to implead himself in an ongoing case on the Madras High court security issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X