For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரசேவைக்கு ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா: ஸ்டாலின் குற்றச்சாட்டு

|

தூத்துக்குடி: பாபர் மசூதியை இடித்து தள்ளியபோது கருணாநிதிதான் குரல் கொடுத்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கரசேவையை ஆதரித்து குரல் கொடுத்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் என்.பி. ஜெகனை ஆதரித்து செய்துங்கநல்லூரில் நேற்று மாலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் சமயத்தில் தான் மக்களை பற்றி எண்ணி பார்ப்பார். நாங்கள் ஊர் ஊராக சாலை வழியாக சென்று மக்களை சந்திக்கிறோம். ஆனால் ஜெயலலிதா ஆகாயத்தில் பறந்து வருகிறார். அவர் மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்காது. அவருக்கு அது தெரியவும் தெரியாது.

Jayalalithaa extended support to kar sevaks: Stalin

வறண்ட பகுதியான சாத்தான்குளம், புத்தன்தருவை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.369 கோடி மதிப்பிலான நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டத்தை கருணாநிதி நிறைவேற்றினார்.

50 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

2011 தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்த திட்டத்தை வேகப்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார். பாபநாசம் அணையில் 90 அடிக்கு தண்ணீர் இருந்தபோது கூட தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

சட்டம் ஒழுங்கு சரியில்லை

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலம் முழுவதும் ஒரு சல்லிக்காசுகூட பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத சட்டம் ஒழுங்கை கட்டிக் காக்க முடியாத அராஜக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கலைஞர் பட்டினம்

பின்னர் ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர் வழியாக காயல்பட்டினம் வந்தார். காயல்பட்டினத்தில் ஊர் வழியாக பிரசார வாகனத்தில் வந்த ஸ்டாலினுக்கும், வேட்பாளருக்கும் முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அணிவித்தனர். அங்கு பேசிய ஸ்டாலின், காயல்பட்டினம் என்றால் அது கழக பட்டினம், கலைஞர் பட்டினம் என விளங்கி கொண்டிருக்கிறது. இங்கு உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளேன். ஆட்சிக்கு வந்தால் கோட்டை, இல்லையென்றால் கொடைநாடு என்று நாங்கள் செல்லவில்லை.

சிறுபான்மையினர் பிரச்சினை

திமுக ஆட்சிக்காலத்தில் இந்த பகுதிக்காக தனி குடிநீர் திட்டத்திற்கு அரசாணை உருவாக்கி தந்தோம். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது காயல்பட்டினம் நகராட்சியில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. இரு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த ஜெயலலிதா சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என்ற வடிகட்டிய பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு

கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் வகையில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்தது ஆகியவை கருணாநிதி ஆட்சியில் செய்து தரப்பட்டது.

மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?

ஜெயலலிதாவிடமிருந்து எனது கேள்விகளுக்கு இரண்டு நாட்களாக எந்த பதிலும் வரவில்லை. ஒரு கட்சி தலைவர் இன்னொரு கட்சியை விமர்சனம் செய்வது இயல்பு. அதை தவறு என்று நான் கூறவில்லை. கருணாநிதியை, திமுகவை விமர்சிக்கும் ஜெயலலிதா, பாரதிய ஜனதாவையோ, மோடியைப் பற்றியோ விமர்சித்து பேசியுள்ளாரா?

கரசேவைக்கு ஆதரவு

பாபர் மசூதியை இடித்து தள்ளியபோது கருணாநிதிதான் குரல் கொடுத்தார். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் இந்த பிரச்னை பற்றி பேசவேண்டுமென்று அனைத்து மாநில முதல்வர்களின் தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தை கூட்டுகிறார். அந்த கூட்டத்தில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். அப்போது கரசேவையை ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியதாக அவரது கட்சியின் அதிகார பூர்வ நாளோட்டிலும், தமிழ், ஆங்கில பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

கரசேவையில் அதிமுகவினர்

உத்தரபிரதேச மாநிலத்தில் விஸ்வ இந்து பரிசத் தலைவர் பாரிக்கர் அளித்த பேட்டியில் அயோத்தியில் கரசேவைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினரை ஜெயலலலிதா அனுப்பி உதவி செய்துள்ளார் என்று 7-11-92 அன்று ஆங்கில நாளேட்டில் செய்தி வந்துள்ளது. நான் ஆதாரத்துடன் சொல்கிறேன். நான் பேசியதில் தவறு இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். சந்திக்க தயார்.

சிறுபான்மையினருக்கு அரண்

திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்களுக்காக இன்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்களியுங்கள் என்றார் ஸ்டாலின்.

English summary
The Chief Minister Jayalalithaa had extended support to ‘kar sevaks,’ M.K. Stalin, DMK treasurer, said showing evidence of media reports at his hand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X