For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு கிராம மாணவர்களை பாதிக்கும்: மோடிக்கு ஜெ., கடிதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்தினால், கிராமப்புற மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மீண்டும் எழுதியுள்ள கடிதம்:

Jayalalithaa writes to Modi entrance test for medical admissions

மருத்துவப் படிப்புகளில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கடந்த மாதம் 9 ஆம் தேதியன்று தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில், பல் மருத்துவத்தின் இளநிலை-பட்ட மேற்படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து தகுதியான வாதங்களையும் ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி வழங்கியது.

இந்தத் தீர்ப்பு பரவலாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்யும் மனுவை தாக்கல் செய்தது.

இதையடுத்து அந்த மறுஆய்வு மனுவை வாபஸ் பெறுமாறு கோரி 28-7-2013 அன்று அன்றைய பிரதமருக்கு மீண்டும் நான் கடிதம் எழுதினேன்.

ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கருத்துருவின் அடிப்படையில் இந்த நுழைவு தேர்வை கொண்டு வருவது குறித்து இதர அமைச்சகங்களின் கருத்துகளை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கோரியுள்ளது என்று தற்போது வெளியாகும் தகவல் எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனதில் இது விரக்தியையும், குழப்பத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளில் பதிவு செய்வது, பயிற்சி-படிப்புக்கான புத்தகங்கள் கிடைப்பது போன்றவை நகர்ப்புற மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ததால் சமூக-பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நன்கு படிக்கக் கூடிய கிராமப்புற மாணவர்கள் பயனை அடைந்தனர்.

பட்ட மேற்படிப்புகளை முடிக்கும் மாணவர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென ஒப்பந்தம் போடப்படுகிறது. இது, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

தமிழகத்தில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அல்லது வேறு வகையான பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வரும் கொள்கை நடைமுறைகள், சமூக-பொருளாதார கருத்தாக்கங்கள் அனைத்தும் பயனற்றுப் போகும். எனவே, மருத்துவப் படிப்புகளில் பொது நுழைவுத் தேர்வு என்ற விஷயத்தில் தமிழகம் தனது கடுமையான அதிருப்திகளை பதிவு செய்கிறது. இதனை தங்களின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வருகிறோம்.

இந்தத் தருணத்தில், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைத் திரும்பப் பெற மத்திய சுகாதாரம்-குடும்ப நலத் துறைக்கு தாங்கள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 15 ஆம் தேதி வர இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த முயற்சிகளையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். தேசிய நுழைவு தேர்வை கொண்டு வர எந்தவகையிலும் முயற்சி செய்யக்கூடாது. அவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது மாநில அரசின் உரிமைகளையும், மாணவர்கள் சேர்க்கை கொள்கைகளையும் பாதிக்கும்.

மேலும், இந்தப் பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம், கடந்த 2013 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Jayalalithaa asks Modi to withdraw plea in Supreme Court on medical admissions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X