For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”காந்தியின் மாநிலத்தில் பெரியார் நுழைந்து விட்டார்” - திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தலைவர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ பற்றிக் கொண்டு விட்டது. காந்தியார் மாநிலத்தில் பெரியார் நுழைந்துவிட்டார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மிக ஆவேசமாக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. பட்டேல்கள் என்ற பட்டிதார் வகுப்பினரால். 1980 களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்த குஜராத்தில் இன்று இட ஒதுக்கீடு கேட்டுக் கிளர்ச்சி. குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாதவராவ் சோலங்கி அவர்கள், இட ஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தார்.

K.Veeramani statement about Gujarat protest

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அப்போது பெருங்குரல் கொடுத்தது குஜராத்தின் செல்வாக்கான இதே பட்டிதார் ஜாதியாகிய பட்டேல்கள் பிரிவினர். அதை ஒரு வாய்ப்பாகக் கருதி தமிழ்நாட்டிலும் உரிமை பறிக்கப்பட்ட முற்பட்ட வகுப்பினர் என்ற ஒரு புது அமைப்பாக மார்த்தாண்டம்பிள்ளை என்ற ஒரு முன்னேறியவரின் தலைமையை வைத்து, பார்ப்பனர்கள் பின்னணியில் இருந்து கொண்டு கொம்பு சீவி விட்டு இட ஒதுக்கீட்டை ஒழிக்க நீதிமன்றம் வழக்கு என்பதைப் போட்டதோடு வீதியிலும் போராட ஆயத்தமாயினர்.

உடனே திராவிடர் கழகத்தின் சார்பில் நாம் தமிழ்நாட்டை ஒருபோதும் குஜராத் ஆக அதாவது இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராட அனுமதிக்கமாட்டோம் என்ற எதிர் போராட்டம், பேரணி, உண்ணா விரதம் எல்லாம் அறிவித்தோம். கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டோம். இட ஒதுக்கீட்டை எதிர்த்து மதுரைக்கு வந்து தோள் தட்டினார் அமித்ஷா. இப்பொழுதோ குஜராத்திலேயே கிளர்ச்சி!

பிரதமர் மோடி ‘‘சாந்தி நிலவட்டும்'' என்று பேசியுள்ளார். அதனை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளி-ஒலிபரப்புகின்றன.
இது எப்படி முடியுமோ என்ற கவலை குஜராத் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்க்கு ஏற்பட்டுள்ளது! எங்களது இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால், 2017 இல் ஆட்சி அமைத்து, நாங்களே இட ஒதுக்கீட்டுக்கான ஆணையைப் பிறப்பிப்போம் என்று முழங்கியுள்ளார் அந்த இளைஞர் தலைவர்!

பட்டேல்கள் குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோருவது நியாயமானதுதான்; அதனை நான் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பேசியுள்ளார்! இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்; வரலாறு திரும்புவது மட்டுமல்ல; ஆங்கிலப் பழமொழிபோல் சக்கரம் முழுமையான வட்டத்தைச் சுற்றி வந்துள்ளது. அதாவது முழுமையடையத் தொடங்கியுள்ளது என்ற கருத்து என்பது போன்ற நிலை குஜராத்தில் 30, 35 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.

காந்தியார் பிறந்த மாநிலத்தில் பெரியார் கொள்கைப்பூர்வமாக வரவேற்கப்படுகிறார் என்றுதானே அதற்குப் பொருள்! தமிழ்நாட்டிலே சக்கரம் முழுமையாகச் சுழன்று வந்ததே! எந்த பார்ப்பனர்கள் கம்யூனல் ஜி.ஓ., வகுப்புரிமை கூடாது என்று கோர்ட்டுகளுக்குச் சென்று ஒழித்துக் கட்டினரோ அவர்களே இன்று, சமூகநீதியை இனி அசைத்துவிட முடியாது என்பதை உணர்ந்து, "சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி" என்ற பரிதாபத்திற்குரிய கணவனைப் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு எங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று அன்றைய முதல்வர் கலைஞரை, திராவிடர் கழகத்தை அணுகவில்லையா? அது எதைக் காட்டுகிறது?

இதுபோன்ற வகுப்புவாரி உரிமைக் குரல் சமூகநீதி கோரி இனி பல மாநிலங்களில் ஓங்கி ஒலிக்கவே செய்யும்; அது காலத்தின் கட்டாயம். தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டுக்குக் குரல் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பதை இன்று பிரபல அரசியல் கட்சிகளும் கொள்கை அளவில் - நாம் தொடக்கத்தில் இருந்தே கூறியதை ஏற்றுக்கொண்டுள்ளார்களே" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tiravida kazhakam leader K.Veeramani speaks about Gujarat controversy from a specific cast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X