For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபாலி வசூலில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்கு செலவிட வேண்டும்: நீதிபதி கிருபாகரன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கபாலி படம் பல நூறு கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது என்கின்றனர். இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து கூறியுள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது.

Kabali' full movie leaked internet - HC asks Central government

இந்த படம் வெளியாவதற்கு முன்பு, சட்டவிரோதமாக கபாலி படத்தை வலைதளங்களில் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாணு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு, இந்தியாவில் உள்ள 169 இணையதள சேவை நிறுவனங்கள், இணையதளம் சேவைகளை வழங்க தடை விதித்து கடந்த ஜூலை 15ம்தேதி உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கபாலி படம் ஜூலை 22ம்தேதி காலை 10 மணிக்கு தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, அதிகாலையில் சில இணைய தளங்களில் வெளியாகி விட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில், தாணுவின் வழக்கறிஞர் முறையிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.குருமூர்த்தி, இந்த உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும், ஒரு சில இணையதள சேவை நிறுவனங்கள் மட்டும்தான் அந்த உத்தரவை மதித்து செயல்பட்டுள்ளது.

25 வலைதளங்களில் கபாலி படம் ஜூலை 22ம்தேதி அதிகாலை 5 மணிக்கெல்லாம் திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது. இந்த வலைதளங்களுக்கு, இணையதள சேவை நிறுவனங்களும் சேவை வழங்கியுள்ளது என்று கூறி அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

இதை படித்து பார்த்த நீதிபதி, தடை உத்தரவு பிறப்பித்தும் கபாலி படம் எப்படி வெளியானது? படத்தை வெளியிட்ட வலைதளங்களுக்கு எப்படி சேவை வழங்கப்பட்டது? இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், இந்த உயர்நீதிமன்ற தடை உத்தரவு நகலுடன், நாட்டில் உள்ள 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு சேவைகளை வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது என்று கூறினார்.

தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் சி.மோகன், மனுதாரர் பிரபலமான இணையதள சேவை வழங்கும் நிறுவனம் மட்டும் உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு சேவை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அந்த குறிப்பிட்ட சேவை நிறுவனத்துக்கும், மனுதாரர் நிறுவனத்துக்கும் கபாலி திரைப்படம் தொடர்பான ஒப்பந்தம் உள்ளது.

இதற்காக மற்ற நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது. திருட்டுத்தனமாக படத்தை வெளியிடும் ஒரு வலைதளத்தை முடக்கினால், மற்றொரு போலியான பெயரில் அந்த வலைதளம் உருவாக்கப்பட்டு, படத்தை வெளியிட்டு விடுகின்றனர் என்று கூறினார்.

அப்படிப்பட்ட வலைதளங்களை தடுக்க தொழில்நுட்ப வசதிகள் இல்லையா? மத்திய அரசிடம் இதுதொடர்பான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? இல்லையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து மத்திய அரசு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், மனுதாரர் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்களின் கருத்துகளை கேட்டு, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதன்பின்னர் நீதிபதி, தமிழகத்தில்தான் திருட்டு சி.டி.க்கள் அதிகம் வெளியாகுகின்றன. ஆந்திர, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த பிரச்சினை பெரிய அளவில் இல்லை. அங்குள்ள மக்கள் தியேட்டருக்கு சென்றுதான் படம் பார்க்கின்றனர். அதனால்தான் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட பாகுபலி என்ற திரைப்படம் வெற்றிப் பெற்றது.

எனவே, தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை? இதற்கு தியேட்டர் கட்டணம் ஒரு காரணமா? ஏன் என்றால், தியேட்டர் கட்டணம் தொடர்பாக இந்த உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் முன்பு மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறிய விவரங்கள் தீவிரமானது. ஆனால், முதல் நாள் அரசுக்கு மனு அனுப்பி விட்டு, மறுநாள் வழக்கு தொடர்ந்ததால், அவரது இடைக்கால மனு தள்ளுபடி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, தமிழக அரசு கடைசியாக தியேட்டர் கட்டணம் எப்போது நிர்ணயம் செய்தது? தற்போது ரசிகர்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பதில் மனுவாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறினார். இதற்கு அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.முத்துகுமார், அடுத்த விசாரணையின்போது, இந்த விவரங்களை தாக்கல் செய்வதாக கூறினார்.

மேலும் நீதிபதி கிருபாகரன், கபாலி படம் பல நூறு கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது என்கின்றனர். இதனால், அந்த படத்தை தயாரித்த நிறுவனம் பெருநிறுவனமாக கருதப்படுகிறது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின்படி, பெருநிறுவனங்கள் சமுதாய பொறுப்புடன் செயல்படவேண்டும். அதன்படி, இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும். இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால், பிறப்பிக்க தயாராக உள்ளேன் என்று கருத்து தெரிவித்தார்.

அதற்கு தாணுவின் வக்கீல், ஏற்கனவே மனுதாரர் பல உதவிகளை செய்து வருகிறார். கபாலி படத்தின் மூலம் கிடைத்த வருவாயிலும் ஒரு பகுதியை அதேபோல சமுதாய நலனுக்கு செலவு செய்வார் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் மோகன், கபாலி படத்தின் மூலம் ஒரு பக்கம் வருமானம் வந்தாலும், ஊரெல்லாம் அந்த படத்தின் சுவரொட்டிகளை விதிகளை மீறி ஒட்டியுள்ளனர் என்றார்.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் குறிக்கிட்டு, நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நடைபாதையை மறித்து மிகப்பெரிய விளம்பர பலகையை வைத்துள்ளனர் என்றார்.

இதற்கு நீதிபதி, நானும் சாலைகளில் உள்ள சுவரொட்டிகளை பார்த்தேன். இது சம்பந்தமாக தனியாக விசாரிக்கலாம். வருமானம் ஒரு பக்கம் வந்தாலும், திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க திரைத்துறையினரும் முன்வரவேண்டும் என்று கூறினார்.

தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட குழுவை உருவாக்கி, திருட்டுத்தனமாக படம் வெளியாவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற குழுவை பிற மாநிலங்களில் உள்ள திரைப்படத்துறையினர் அமைத்துள்ளனர் என்று கருத்து தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையை வருகிற 16ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Piracy has been a big problem for Tamil cinema for over two decades. With the advancement of technology, this issue has grown multifold and is causing huge losses to film producers says High court justice Kirubakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X