For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம்: தேர்வுக் கட்டணம் கட்ட திருடிய மருத்துவ மாணவி, காதலனுடன் கைது

Google Oneindia Tamil News

காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் நிதி நிறுவன அதிபர் வீட்டுக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக மருத்துவ மாணவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சீபுரம் முனுசாமி முதலியார் அவென்யூவில் வசித்து வரும் ஜெயக்குமார், ஓட்டல் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வங்கி லாக்கரில் இருந்து தங்கம்-வைர நகைகளை எடுத்து வந்து தனது வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.

கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த ஜெயக்குமார், இரவு திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 135 பவுன் தங்க நகை, வைர நகைகள் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை யர்களை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயக்குமார் வீட்டு மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி மாணவி சவுமியாவின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகளான சவுமியா தான், தனது காதலனுடன் இணைந்து இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தற்போது சவுமியாவையும், அவருடன் கல்லூரியில் உடன் படிக்கும் காதலன் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனபள்ளியை சேர்ந்த மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். போலீசில் சவுமியா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் இருவரும் காஞ்சீபுரம் அருகே உள்ள கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறோம் மணிகண்டன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் ஜாலியாக சுற்றி வந்தோம்.

மணிகண்டன் பல பாடங்களில் பெயிலாகி இருந்தார். அவரது பெற்றோர் சுமாரான வசதி படைத்தவர்கள். கல்லூரி கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் காதலனுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். அவருக்காக எனது வீட்டிலும் பணம் கேட்க முடியாது என்பதால் எப்படியாவது பணத்தை திரட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

நான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் மிகவும் வசதி படைத்தவர். அவரது வீட்டில் எல்லோரிடமும் நான் நெருங்கி பழகி வந்தேன்.

அவர் திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரில் இருந்த நகைகளை வீட்டுக்கு எடுத்து வந்திருப்பது தெரிந்தது. அதனை கொள்ளையடித்து காதலனின் கல்வி கட்டணத்தை செலுத்திவிட்டு உல்லாச செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

ஜெயக்குமார் குடும்பத்தினருடன் பேசும் போது அவர்கள் சில நாட்களில் வெளியூர் செல்ல இருப்பது தெரிந்தது.

உடனே அவர்களது வீட்டு சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று ‘டூப்ளிகேட்' சாவி செய்தேன். பின்னர் அவர்களது சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டேன். இதனால் அவர்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

சம்பவத்தன்று காலை அனைவரும் வீட்டை பூட்டி வெளியில் சென்றவுடன் காதலன் மணிகண்டனை போன் செய்து வரவழைத்தேன். ‘டூப்ளிகேட்' சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றோம். பின்னர் நகையை கொள்ளையடித்து கதவை பூட்டி சென்று விட்டோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 135 பவுன் நகை மற்றும் சவுமியாவைன் கார் ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.

கொள்ளைச் சம்பவத்தில் டூப்ளிகேட்' சாவி பயன்படுத்தி இருந்ததால் தெரிந்த நபர்களே இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்ததாலேயே சவுமியா சிக்கிக் கொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான சவுமியாவின் தந்தை கோவிந்தராஜன் பவானி அருகே தனியார் பள்ளி நடத்தி வருகிறார். கொள்ளை வழக்கில் மகள் கைதாகிய தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், தற்போது காஞ்சீபுரம் வந்துள்ளார்.

கொள்ளை நடந்த 3 நாட்களுக்குள் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

English summary
The Police have arrested two medical college students un connection with the recent robbery at Kanchipuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X