தும்பை விட்டு விட்டு... ஜெ.யின் ‘நுழைவுத் தேர்வு’ பேச்சு குறித்து கருணாநிதி விமர்சனம்
சென்னை: திருநெல்வேலி பிரச்சாரத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியிருப்பது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் செயல் என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தும் 'தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு' அடிப்படையில் மட்டுமே அமைத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பு தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக அரசு மீண்டும் அமைந்தவுடன் மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லாமலே மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆனால், இது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நுழைவுத் தேர்வுப் பிரச்சினையிலும் குழப்பமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நுழைவுத்தேர்வு...
"தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதா?" என்று ஒரு பழமொழி கூறுவார்கள்! நுழைவுத் தேர்வு குறித்து திருநெல்வேலிக்குப் போய் சாவகாசமாக முதல் அமைச்சர் பேசியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

மதுவிலக்கு...
தற்போது ஆட்சியிலே இல்லாத திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதற்குப் பிறகும் கூட, அ.தி.மு.க. சார்பில் சட்டசபையிலே மதுவிலக்குத் துறை அமைச்சர் மதுவிலக்கைப் படிப்படியாகக் கூட நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது என்று தான் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால் மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற எனது அறிக்கைக்கு தமிழகத்திலே ஏற்பட்ட வரவேற்பையும் தாக்கத்தையும் பார்த்து விட்டு, தற்போது "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பதைப் போல, அ.தி.மு.க. ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மதுவிலக்கைப் படிப்படியாகக் கொண்டு வருவார்களாம்!

மிடாஸ் மந்திரக்கோல்...
இது யார் காதில் பூ சுற்றும் வேலை? மதுவிலக்கைப் படிப்படியாகக் கொண்டு வர வேண்டுமென்றால், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து இதுவரை கொண்டு வந்து முடித்திருக்கலாமே? யார் இவர்கள் கையைப் பிடித்துத் தடுத்தது? மிடாசின் மந்திரக் கோல் துணை கொண்டு செய்திருக்கலாமே?

யார் தடுத்தார்கள்...?
அது போலவே தான் அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைந்தவுடன் மருத்துவப் படிப்பு - பல் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றையதினம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதற்கென தனியே ஒரு சட்டத்தையே கொண்டு வருவார்களாம். நுழைவுத் தேர்வு பற்றிய பிரச்சினை எத்தனை மாதங்களாக நடைபெறுகிறது? அந்தப் பிரச்சினை வந்தவுடனேயே தற்போது திருநெல்வேலிக்குப் போய்ச் சொல்கின்ற முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்திலே ஒரு அவசரச் சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது? மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்லோரையும் ஏமாற்றுகிற ஜெயலலிதா இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தகுந்த தண்டனையை மாணவர்களிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் பெற வேண்டாமா?

ஏன் மனுதாக்கல் செய்யவில்லை?
தற்போது கூட உச்ச நீதி மன்றத்திலே நுழைவுத் தேர்வு பற்றிய வழக்கு நடந்து கொண்டிருந்த போது, மற்ற மாநிலங்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எழுத்துப் பூர்வமாக தங்கள் எதிர்ப்பை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த போது, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்திலே எழுத்துப் பூர்வமான எதிர்ப்பைத் தாக்கல் செய்யாதது ஏன்? அதற்கு காரணமானவர்கள் யார்? முதல்வர் ஜெயலலிதா இந்த முக்கியமான வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞரோடு விவாதித்து தமிழகத்தின் எதிர்ப்பைத் தனியே ஒரு மனு மூலம் எழுத்துப் பூர்வமாக உச்ச நீதி மன்றத்திலே தெரிவித்திருக்க வேண்டாமா?

என் கேள்விக்கென்ன பதில்...
ஜெயலலிதா பேசும்போது "இந்த வழக்கில் தமிழக அரசு எதிர் மனுதாரராக சேர்க்கப்படாத நிலையிலும்" தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடியதாகவும், தான் வாதாடியதை எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி யிருக்கிறார். முக்கியமான இந்த வழக்கில் தமிழக அரசை எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டுமென்று வலியுறுத்தி உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கோரப் பட்டதா? கோரப்படவில்லை என்கிற போது, அதற்குக் காரணம் என்ன? தமிழக அரசையும் எதிர் மனுதாரராகச் சேர்க்கும்படி, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் ஏன் வலியுறுத்தவில்லை? அவ்வாறு வலியுறுத்தாத நிலையில் தான், வழக்கில் தமிழக அரசு எதிர் மனுதாரராகச் சேர்க்கப்படாத நிலையில் தான் தமிழக அரசுக்காக வழக்கறிஞர் குறுக்கிட்டுப் பேசி, அவர் பேசியதை எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்திருக்கிறாரே தவிர, நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தமிழக அரசு 2006ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டம் பற்றியோ, அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது என்பது பற்றியோ மத்திய அரசின் வேறு எந்தச் சட்டமும், அறிவிக்கையும் தமிழக அரசின் சட்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்கவோ, அதை நீர்த்துப் போகச் செய்திடவோ முடியாது என்பது பற்றியோ எழுத்துப் பூர்வமாக தமிழக அரசின் சார்பில் ஏன் தாக்கல் செய்யவில்லை என்று தான் நான் கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நெல்லைக் கூட்டத்தில் எந்தப் பதிலும் கூறவில்லை.

கட்டுப்படுத்த இயலாது...
மத்திய அரசு அமைச்சகங்கள் பதிவு செய்திருந்த குறிப்புரைகளின் அடிப்படையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றதற்குப் பிறகு, தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசின் வேறு எந்தச் சட்டமும் ஒழுங்கு முறை ஆணைகளும் கட்டுப்படுத்திட இயலாது என்பதைத் தனது வாதத்தில் தமிழக அரசு ஏன் எடுத்துரைக்க வில்லை?

இடைக்காலத் தடை...
ஜெயலலிதா பேசும்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் 2010ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்து அறிவிக்கை வெளியிட்ட போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தது தி.மு.க. தான் என்றும், அதைத் தடுக்க இடைக்காலத் தடை வாங்கி என்ன பயன் என்றும் கூறியிருக்கிறார். 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் இவ்வாறு அறிவிக்கை வெளியிட்ட வுடன், அந்த அறிவிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதி மன்றத்தில் கழக அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம், கழக அரசின் எதிர் வாதங்களை ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு நுழைவுத் தேர்வினை ரத்து செய்து கொண்டு வந்த சட்டத்தை வேறு எந்த அறிவிக்கைகளும் கட்டுப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் கழக அரசு கோரியபடி, இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிக்கைக்குத் தடை உத்தரவையும் உயர் நீதி மன்றம் வழங்கியது.

உண்மை உப்பாகக் கரிக்கிறது...
ஆனால் ஜெயலலிதா நெல்லை பேச்சிலே இந்த உண்மைகளை யெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, கழக அரசைக் குறை கூறிப் பேசியிருக்கிறார். உண்மை என்றாலே உப்பாகக் கரிக்கும் ஜெயலலிதாவுக்கு! மத்தியில் அப்போதிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் நான் பேசி அறிவிக்கையை ஏன் தடுக்கவில்லை என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். மத்திய அரசிடம், அப்போது இருந்த கழக அரசு வலியுறுத்திய காரணத்தால் தான், அப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த திரு. கபில்சிபல் அவர்கள், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அது மாத்திரமல்ல; மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த திரு. குலாம் நபி ஆசாத் அவர்கள் ஐதராபாத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மாநாட்டை நடத்திய போது, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அதிகாரப் பூர்வமாக நிறுத்தி வைப்பது என்ற ஒரு தீர்மானத்தையே ஒருமனதாக நிறைவேற்றினார்கள். ஆனால் இந்த உண்மைகளும் யாருக்குத் தெரியப் போகிறது என்ற அகங்கார மனப்பான்மையோடு, தி.மு. கழகம் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
நுழைவுத் தேர்வினைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்று நான் கடந்த 10ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டவுடன் திடீரென்று கண் விழித்துக் கொண்டு நெல்லைக்குச் சென்று நுழைவுத் தேர்வு பற்றி ஆட்சிக்கு வந்தால் சட்டம் கொண்டு வரப் போவதாக வழக்கமான கதையைச் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்! அதனால் தான் இந்த அறிக்கையின் தொடக்கத்தில் "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க முயலுகிறார்" என்று குறிப்பிட்டேன். அது உண்மை தானே?

புதிய சட்டம்...
முதலமைச்சர் ஜெயலலிதா நெல்லையில் பேசும்போது, "2006ஆம் ஆண்டு ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 2007ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பட்ட படிப்பு களுக்கு மாணாக்கர்கள் சேர்க்கப்படுகின்றனர்" என்று கூறியிருக்கிறார்.
2006ஆம் ஆண்டு புதிய சட்டம் இயற்றப்பட்டதாகக் கூறுகிறீர்களே, அது எந்த ஆட்சியில் நடைபெற்றது? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தானே? அதை ஏன் மறைக்க முயற்சிக்கிறீர்கள்? 2006ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தான் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்திட உருப்படியாக ஒரு காரியத்தையும் செய்யாத ஜெயலலிதா, இப்போது தேர்தல் என்றதும், நுழைவுத் தேர்வைப் பற்றி ஏதேதோ பேசி "நுணலும் தன் வாயால் கெடும்" என்பதை நிரூபித்திருக்கிறார்!''என அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications