For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர் பிரச்சினையில் கடிதம் மட்டும் தீர்வாகாது: ஜெ.நேரில் சென்று வலியுறுத்த வேண்டும்- கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் அவ்வப்போது சிறைப் பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு முடிவின்றி தொடரும் துயரத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இனியும் கடிதம் மட்டும் எழுதித் தீர்வு காணும் பிரச்சினையாகக் கருதாமல், டெல்லிக்கு நேரடியாகச் சென்று மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையில் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், நம்முடைய மீனவர்கள் பிரச்சினைக்கு மட்டும் முடிவு காலமே ஏற்படாது போல உள்ளது! 45 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே தமிழக மீனவர்கள் ஏழு பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

karunanidhi alligation on jayalalithaa

தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, மற்றும் பாக். ஜலசந்தி பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான காலம், மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கணக்கிடப்பட்டு, இந்த 45 நாட்களும், மீன் பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த மீன் பிடித் தடைக்கால நிவாரணத் தொகையாக அரசின் சார்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் இந்த இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் என்பதை, திமுக ஆட்சி அமைந்தால், ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். கழகத் தேர்தல் அறிக்கையைப் பார்த்து விட்டு, அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்த அதிமுகவும், இந்த நிவாரண உதவித் தொகையினை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அது இன்னமும் அறிவிப்பு நிலையிலே தான் இருக்கிறது. அந்தத் தடைக்காலம் முடிந்துதான் நேற்றையதினம் கிழக்குக் கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி, விரட்டி அடித்ததுடன், சேசு இருதயம் என்பவரின் விசைப்படகையும், அதிலிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

மீன் பிடித் தடைக்காலம் முடிந்து, மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இவ்வாறு 7 மீனவர்களை இலங்கைக் கடற்படை இரக்கமின்றிப் பிடித்துச் சென்றிருப்பது, இந்திய மீனவர்கள் மத்தியில் கடும் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் தனது கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எப்போதும் போல, ஒவ்வொரு முறை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் கைது செய்யப் படும் போதும் , பிரதமருக்கு ஏற்கெனவே எழுதிய கடிதத்தின் நகலை எடுத்து, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு, தனது கடமை முடிந்து விட்டதாக கருதி விட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பதவியேற்றதும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர்களையும் நேரில் பார்ப்பதும், அவர்களிடம் மாநிலப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் விவாதிப்பதும் வாடிக்கை. அதைப் பயன்படுத்திக் கொண்டு கூட நம்முடைய முதல்வர் டெல்லி சென்று இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் அவ்வப்போது சிறைப் பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு முடிவின்றி தொடரும் துயரத்தை எடுத்துக் கூறித் தீர்வு காண முயற்சி செய்திருக்கலாம்.

ஏற்கெனவே இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இரண்டு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு காணப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இந்தத் தீர்வு எட்டப்படாத பிரச்சினையில் தகுந்த முடிவு காண இந்திய அரசு இனியாவது அக்கறை செலுத்துமா? அல்லது எப்போதும் நடைபெறுகின்ற ஒரு தொடர் சம்பவம் தானே என்று அலட்சிய எண்ணத்தோடு விட்டு விடுமா?

மாநில அரசு இனியும் இந்தப் பிரச்சினையை கடிதம் மட்டும் எழுதித் தீர்வு காணும் பிரச்சினையாகக் கருதாமல், நேரடியாகச் சென்று மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடத் தேவையான அக்கறையோடும் அனுதாபத்தோடும் முயற்சிக்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief karunanidhi alligation on tn cm jayalalithaa for the issue of fishermen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X