தேர்தல் ரெய்டுகளில் சிக்கியதுதான் எத்தனை கோடி.... ஒருவரையும் கைது செய்யாதது ஏன்?- கருணாநிதி
8-4-2016 அன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி அன்புசெல்வம், அப்பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் காரைச் சோதனை செய்ததில் ரூபாய் பத்து இலட்சத்தை பறிமுதல் செய்து, அந்தத் தகவலை மாவட்டக் கலெக்டர் ராஜேஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர், வேட்பாளரை விடுவிக்கவும், பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக அன்புச் செல்வம் கூறியும் கலெக்டர் அவரை மிரட்டியதாகச் செய்தி வந்தது.

22-4-2016 அன்று டி.எஸ்.பி. ராமச்சந்திரன் வாகன சோதனை நடத்திய போது ஒரு சொகுசு காரிலிருந்து 58 இலட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளார்.
24-4-2016 அன்று கோவை மாநகராட்சி 9வது வார்டு அதிமுக கவுன்சிலர் வக்கீல் ராஜேந்திரன் வீட்டில், தேர்தல் பிரிவு அதிகாரி மோகனசுந்தரம், வருமான வரித் துறை துணை ஆணையாளர் ராணி காஞ்சனா ஆகியோர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். என்னென்ன சிக்கியது என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளார்கள்.
27-4-2016 அன்று ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது நிதி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராமல் வைத்திருந்த 11 இலட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளார்கள்.
அதே நாளில், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அலுவலர் அனுபியாஸ், கோவை மண்டல வருமான வரித் துறை துணை ஆணையாளர் ராணி காஞ்சனா ஆகியோர் தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறுவினரும், நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் நண்பருமான டாக்டர் மகேந்திரன் என்பவரின் பண்ணை வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவில் 2 பெரிய சூட்கேஸ்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.. ஆனால் என்னென்ன சிக்கியது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டார்களாம். அ.தி.மு.க. வினருக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டும், எந்த நிகழ்விலும் முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை என்பதும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் நாட்டின் சட்ட விதிமுறைகளையே நசுக்கும் நாசச் செயல்.
தமிழகத்திலே இவை மட்டுமா நடந்தன? முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகையில் கன்டெய்னர்கள் நிறுத்தப்பட்டிருந்ததை, புகைப்படம் எடுத்து ஏடுகள் வெளியிடவில்லையா? அதுபற்றி எவ்வளவு செய்திகள் வந்தன? தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?


Click it and Unblock the Notifications
