For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா வின் வார்த்தைகள் 'அம்மா'வுக்கே பொருந்தும்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா தற்போது முதல்வர் - இனியாவது கபட நாடகம், இரட்டை வேடம், பச்சோந்தி என்பன போன்ற வார்த்தைகளைக் கைவிட்டு நாகரிகமாக அறிக்கை விடவும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இல்லையேல்,"அம்மா" அறிக்கையில் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் "அம்மா"வுக்கே பொருந்தும் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ? எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொடநாட்டுக்கு ஆளுநர் மாற்றுவார்களோ...

23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே நடந்ததை, பழைய இடத்திற்கு மாற்றியதைப் போல, ஆளுநர் உரையைக்கூட கொட நாட்டிற்கு மாற்றுவார்களோ என்னவோ?

முதல்வர் பெயரில் வந்த அறிக்கை

இந்த நிலையில் "சென்னை"யிலிருந்து வெளி வந்ததைப் போலக் குறிப்பிட்டு, முதல்வர் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் வரும் 20ஆம் தேதி இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதையேதான் நானும் சொன்னேன்

இந்தச் செய்தியை; நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நான் சொன்னதின் பேரில், கடந்த மாதம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளை டெல்லியில் பிரதமரை 27.12.2013 அன்று சந்திக்க வைத்தபோதே, பிரதமர்; மீனவர் பிரதிநிதிகளிடமும், டி.ஆர். பாலுவிடமும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வாக்கில் இரண்டு நாட்டின் மீனவர்களின் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள் என்று பிரதமர் உறுதி கூறி, அந்தச்செய்தி அனைத்து ஏடுகளிலும் அப்போதே வெளிவந்து விட்டது. அந்தச் செய்தியைத்தான் பதினைந்து நாட்கள் கழித்து தமிழக முதல்வர் அறிக்கையாகத் தெரிவித்திருக்கிறார்.

படிக்கவி்ல்லையோ...

ஒருவேளை பிரதமர் அறிவித்த செய்தியை தமிழக முதல்வர் கொடநாட்டில் இருந்த காரணத்தால் படிக்க வில்லையோ என்னவோ? எப்படியோ அந்தப் பேச்சுவார்த்தை நடை பெற்று, நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு மீனவர் களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டாக வேண்டும். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து காவல் நீடிக்கப்பட்டு, அங்கே சிறையில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களும் அந்த அரசினால் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ராஜபக்சேவிடமிருந்து வந்ததா

பேச்சுவார்த்தையின்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வர அது மிகவும் உதவியாக இருக்கும். தமிழக அரசின் சார்பில் முதல்வர், நிச்சயமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இன்றைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. மத்திய அரசிடமிருந்து வந்ததா? அல்லது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடமிருந்து நேரடியாக வந்ததா?

அதிமுக அரசு செய்த உதவிகள்

முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் மீனவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த உதவிகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மீனவர்களுக்குச் செய்த உதவிகளை நினைவூட்ட வேண்டுமேயானால், கழக ஆட்சியில், மே 2006 முதல் ஜனவரி 2011 வரை 88 கோடியே 57 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - நிவாரணத் தொகை 1,200 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாக உயர்வு - மீனவ மகளிருக்கு 61 கோடியே 57 லட்சம் ரூபாய் நிவாரணம் - மீன் பிடிப்பு தடைக் காலத்தில் 14 கோடியே 33 இலட்ச ரூபாய் நிவாரணம் - உயிரிழக்க நேரிடும் மீனவர் குடும்பத் திற்கு நிவாரணம் 3 லட்சம் ரூபாயாக உயர்வு - மா. சிங்காரவேலர் நினைவு வீட்டு வசதித் திட்டத் தின்கீழ் 21 கோடியே 12 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு - 27 கோடி ரூபாய்ச் செலவில் குளச்சல் மற்றும் தேங்காய்பட்டினத்தில் மீன் பிடித் துறைமுகங்கள் - 50 கோடி ரூபாய்ச் செலவில் நாகை மாவட்டம் பூம்புகாரில் மீன் பிடித் துறைமுகம் - தமிழ்நாடு மீனவர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, 4 கோடியே 52 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி என்று நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

தேவையில்லாமல் விமர்சனங்கள்

ஆனால் முதல்வர் விடுத்த அறிக்கையில் வழக்கம்போல என்னைப் பற்றியும் பல கண்டன விமர்சனங்களை தேவையில்லாமல் செய்திருக்கிறார். மீனவர் பிரச்சினை பற்றி 7-1-2014 அன்று முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் வாயிலாக விடுத்த வேண்டுகோளைப் பற்றி நான் குறிப்பிடும்போது; "மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்க நாள் குறிப்பிட வேண்டு மென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி யிருப்பதாகவும், தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை" என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறாரே, அதற்கு முதல் அமைச்சரின் பதில் என்ன என்று நான் கேட்டதற்கு, "குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பதுபோல" என்ற பழமொழி அம்மை யாருக்கு நினைவிற்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

நடுக்கடலில் மீன் பிடிக்கிற பிரச்சினை

இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்ற பிரச்சினை அல்ல, நடுக் கடலிலே மீன் பிடிக்கின்ற பிரச்சினை என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். குழம்பிய குட்டையில் நான் மீன் பிடிக்கவில்லை; 7-1-2014 அன்று "Headlines Today""என்ற தொலைக்காட்சி நிறுவனம், "தமிழக மீனவர் பிரச்சினையை வாக்குகள் பெறுவதற்காக ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்கிறார்"" என்ற தலைப்பிலே வெளியிட்டுள்ள செய்திக்கு ஏன் பதில் கூறவில்லை? அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தி.மு.க. சார்பிலே நடத்தப்படுகின்ற நிறுவனமா?

அதற்குப் பதில் சொல்ல வேண்டியதுதானே..

பொதுவாக நடக்கின்ற தனியார் நிறுவனம்தானே! அந்த நிறுவனம் சாட்டியுள்ள குற்றச்சாட்டினை எடுத்து நான் தெரிவித்தேனே தவிர, உண்மையில் குற்றம் கூறியது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அல்லவா?

நான் வக்காலத்து வாங்கவில்லை

முதல்வர் அதற்கு அல்லவா பதில் கூற வேண்டும்! அதற்குப் பதில் கூறாமல் நான் ஏதோ மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவதாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். நான் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கவில்லை. தாமதத்திற்குக் காரணம் தமிழக அரசுதான் என்று எடுத்துக் காட்டி னேனே தவிர வேறல்ல.

தாமதம் செய்தது யார்

மீனவர் பிரச்சினையில் தான் ஏதோ செய்து கிழித்துவிட்டதாக முதல்வர் அறிக்கை விட்டிருக்கிறாரே, இரண்டு நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் கூட்டத்தை தாமதம் செய்தது யார்? அதைத்தானே அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் கேட்டிருக்கிறது. "மத்திய அரசு மீது ஜெயலலிதா குறை சொல்லி வருகிறார், ஆனால் அதே நேரத்தில் ஜெயலலிதாவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காலதாமதம் செய்து வருகிறார். 16.3.2013 லிருந்து இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மீனவர் பிரச்சினை குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 11 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

உண்மையா.. இல்லையா...

இந்திய மீனவர் பிரதிநிதிகளும், இலங்கை மீனவர் பிரதிநிதிகளும் சந்தித்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாகக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு, தமிழக முதல்வர் ஒத்துழைத்திட வேண்டுமென்று, தான் எழுதிய பெரும்பாலான கடிதங்களில் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்" என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறதே, இது உண்மையா? அல்லவா?

யாருடைய குற்றம்

உண்மை என்றால், மீனவர் பிரச்சினையில் இவ்வளவு கால தாமதம் செய்தது யாருடைய குற்றம்? குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது யார்? ஜெயலலிதா கூறத் தயாரா? 16.3.2013 அன்றே பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார். ஏன் அதற்குப் பதில் எழுதவில்லை? ஆறு மாதங்கள் கழித்து 20.9.2013 அன்றுதான் தமிழக முதல்வர் இருநாட்டு மீனவர்களின் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான தமிழக அரசின் ஒப்புதலைத் தெரிவித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக, பிரதமரே 9.11.2013 தேதிய கடிதத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அக்கறை இருக்குமானால்...

உண்மை யிலேயே தமிழக மீனவர்களின் துன்பங்களில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், பிரதமரின் கடிதத்திற்கு ஆறு மாதங்கள் தாமதம் செய்திருப்பாரா? மீனவர்கள் சிறை பிடிக்கும் போதெல்லாம் பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதி விட்டு, அதை அவசர அவசரமாக ஏடுகளிலே விளம்பரப்படுத்திக் கொண்டால், இந்திய மீனவர் களைப் பாதுகாப்பதாக அர்த்தம் ஆகிவிடுமா?

பதில் சொல்ல வக்கில்லையே...

இதைத்தான் நான் சுட்டிக்காட்டி, "ஹெட்லைன்ஸ் டுடே" தொலைக்காட்சி இவ்வாறெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறதே என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதில்சொல்ல வக்கற்ற முதல்வர், என்மீது வழக்கம்போல குற்றஞ்சாட்ட முனைந்திருக்கிறார். ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு நிலை என்று நான் இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

இதற்கு பெயர்தான் இரட்டை நிலை...

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று சட்டப் பேரவையில் 16.4.2002 அன்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு, தற்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றுகிறாரே, இதற்குப் பெயர்தான் இரட்டை நிலை! இப்படிப்பட்டவர்தான் என்னைப் பற்றி நேற்றைய அறிக்கையில் நான் "பச்சோந்தி" போல அடிக்கடி நிலையை மாற்றிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

முழங்கியது உண்டா இல்லையா...

இலங்கையிலே அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, "போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்" என்று இதே ஜெயலலிதா முழங்கியது உண்டா இல்லையா? அது சிங்கள அரசை ஆதரித்து ஜெயலலிதா தெரிவித்த கருத்து அல்லவா? யார் போடுவது இரட்டை நாடகம்? "பச்சோந்தி" வேடம் போடுவது யார்? தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

விடுவதாக இல்லையே ஜெயலலிதா

என்னைத் தாக்கி அறிக்கை விடும் போதெல்லாம் ஜெயலலிதா பயன்படுத்துவது கச்சத் தீவினை நான் தாரைவார்த்துக் கொடுத்து விட்டேன் என்ற குற்றச்சாட்டாகும்.அதற்கு பல முறை பதில் சொல்லியும் ஜெயலலிதா விடுவதாக இல்லை.

நரசிம்மராவுக்கு எழுதிய கடிதம்

30.9.1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations" அதாவது தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத்தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நில விட வேண்டும் என்பதற்காகத்தான் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு, தற்போது என்மீது பாய்ந்து விழுவது ஏன்? அரசியல்தான் காரணமா?

இது மாத்திரமல்ல..

இதுமாத்திரமல்ல; 23.7.2003 அன்று முதல்வர் ஜெயலலிதா, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளுக் கிடையே நல்லுறவு பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமை களைக் காப்பாற்றவும் உள்ள ஒரேவழி என்று குறிப்பிட்டுவிட்டு மேலும், "The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka's Sovereignty over Katcha Theevu could be upheld at the same time" -அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப் பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம்" என்று பிரதமருக்கு கடிதமே எழுதிய ஜெயலலிதாதான், கச்சத் தீவை நான் விட்டுக் கொடுத்துவிட்டேன் என்று சொல்கிறார்.

இதுதான் இரட்டை வேடம்

பிரதமருக்கு அவ்வாறு கடிதம் எழுதிவிட்டு, தற்போது என்னைக் குற்றஞ்சாட்டுவதுதான் இரட்டை வேடம். 20.4.1992 அன்று சட்டப் பேரவையில் பேசும் போது "கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை" என்று கூறினாரே,
அதை அப்படியே மறைத்து விட்டு நேற்றைய அறிக்கையில் கச்சத் தீவினை மீட்டே தீருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறாரே, அது யாரை ஏமாற்றுவதற்காக? யார் போடுவது இரட்டை நாடகம்?

கபட நாடகம்.. பச்சோந்தித்தனம்

"இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக்கூடாது" - "இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" எனச் சட்டமன்றத்தில் தீர்மானங்களை இயற்றிய ஜெயலலிதாதான், தஞ்சையில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய போர் நினைவாக எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரை இடித் தாரே, அதுதான் ஜெயலலிதாவின் கபட நாடகம்; பச்சோந்தித்தனம்!

இனியாவது

Karunanidhi slams Jaya for her statement on TN fishermen issue

ஜெயலலிதா தற்போது முதல்வர் - இனியாவது இந்தக் கபட நாடகம், இரட்டை வேடம், பச்சோந்தி என்பன போன்ற வார்த்தைகளைக் கைவிட்டு நாகரிகமாக அறிக்கை விடவும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இல்லையேல்,"அம்மா" அறிக்கையில் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் "அம்மா"வுக்கே பொருந்தும் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has criticised chief Minister Jayalalitha for her statement on TN fishermen issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X