ஜல்லிக்கட்டுக்கு ஒரு நியாயம், காவிரிக்கு மற்றொரு நியாயமா..? மத்திய அரசுக்கு கருணாநிதி "பளார்" கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்ற மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் ஏற்க மறுப்பதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில்கள் வடிவிலான அறிக்கை:

Karunanidhi slams Modi government over Cauvery issue

கேள்வி :- காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க மறுத்து வந்த கர்நாடக அரசின் முதலமைச்சர் சித்தராமய்யா, தற்போது மேகதாது அணை பற்றியும் கட்டியே தீருவோம் என்று மீண்டும் கூற ஆரம்பித்து விட்டாரே?

கருணாநிதி :- அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் இப்போதிருந்தே மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதிலே ஒரு கட்டம்தான் தற்போதைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள். இது பற்றி "ஆனந்த விகடன்" இதழிலே கூட தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார். முதலில் பெங்களூரு நகரின் குடி நீர் தேவைக்காகத்தான் மேகதாது அணை என்றார்கள். தற்போது, மேகதாது அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார். காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழகத்தைக் கை கழுவிய மத்திய அரசு, மேகதாது அணைப் பிரச்சினையில் மட்டும் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கேள்வி :- உச்ச நீதிமன்றம் ஒரு முடிவினை அறிவித்தால், அதை ஏற்க இயலாதென்று மத்திய அரசு அறிவிக்க அதிகாரம் உள்ளதா?

கருணாநிதி :- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்கச் சொல்லி மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்க வேண்டுமென்று கேட்டபோது, "உச்ச நீதிமன்றம் சொன்னதை மீற முடியாது" என்று மத்திய அரசின் சார்பில் அப்போது சொன்னார்கள்.

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அவ்வாறு சொன்ன மத்திய அரசு, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அவ்வாறு செய்ய இயலாதென்று மறுப்புக் கூறுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் ரீதியாகக் கிடைத்திடும் ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்டே, உச்ச நீதிமன்ற உத்தரவைக் கூடத் தலை வணங்கி ஏற்கும் அல்லது தலை நிமிர்ந்து எதிர்க்கும் என்பதற்கு ஜல்லிக்கட்டுப் பிரச்சினையும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் எடுத்துக்காட்டுகள்.

கேள்வி :- காவிரி உயர்மட்டத் தொழில் நுட்பக் குழு என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று பொதுப் பணித் துறை பொறியாளர் சங்கத்தின் சார்பில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்களே?

கருணாநிதி :- அவர்கள் அவ்வாறு சொன்னதோடு, கடந்த 1971ஆம் ஆண்டில் கர்நாடகாவின் பாசன பகுதி 6.68 இலட்சம் ஏக்கராக இருந்தது, தற்போது 21.71 இலட்சம் ஏக்கர் நிலமாக அதிகரித்துள்ளது என்றும், 1971-74 காலக் கட்டத்தில் 350 டி.எம்.சி. காவிரி நீரைப் பெற்ற தமிழ்நாடு தற்போது 192 டி.எம்.சி. தண்ணீரைக் கூட பெற முடியவில்லை என்றும், தமிழகத்தில் 28.8 இலட்சம் ஏக்கராக இருந்த பாசன நிலம் 24 இலட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்களைக் கூறியிருக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றிக்கூட, நர்மதா நதி கட்டுப்பாடு ஆணையம், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியம் போன்றவற்றை மத்திய அரசுதான் அமைத்தது என்றும், அதைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைத்திருக்கலாம் என்றும் விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த விவரங்களெல்லாம் தெரியாமல் இல்லை; தெரிந்தும் அநீதிக்குத் துணை போகிறார்கள் என்றால், அரசியல்தானே காரணம்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP government in the center taking decision on the basic of political gain, not by the Supreme court order, says DMK chief Karunanidhi.
Please Wait while comments are loading...