For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளும்கட்சி ஆசியோடு தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார். ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள கருணாநிதி, மொழி திணிப்புக்கு எதிராக ஒரு கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

திமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா இல்ல திருமண விழா இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த மணவிழாவில் பேசிய கருணாநிதி, உருக்கமாகவும், உணர்ச்சி பொங்கவும் பேசினார்.

மணவிழா என்பது ஆலடி அருணா வீட்டிலே நடந்தாலும் சரி, வேறு யார் வீட்டில் நடந்தாலும் சரி, அது சுயமரியாதைத் திருமணமாக, பகுத்தறிவு திருமண மாக, தன்மானத் திருமணமாக நடைபெற்றாலும் அங்கே நான் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அங்கே சென்று விடுவது என்னுடைய வழக்கம். அப்படித் தான், அதை எல்லாவற்றையும் மேலாக தம்பி ஆலடி அருணா வீட்டிலே நடை பெறுகின்ற திருமண விழா, என் வீட்டில் நடைபெறுகின்ற திருமண விழா என்ற நினைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

Karunanidhi slams move to impose Sanskrit

இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றுக் கொண்டு மணமக்களை வாழ்த்தும் போது, ஆலடி அருணா அவர்களுடைய பேரன், பேத்திக்கு நடைபெறுகின்ற மணவிழா அல்ல, என்னுடைய பேரன், பேத்திக்கு நடைபெறுகின்ற மணவிழா என்ற உணர்ச்சியோடு தான் இந்த மணவிழாவிலே கலந்து கொண்டிருக்கிறேன் என்றார் கருணாநிதி.

திருமண விழாக்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை நான் இன்றைக்குச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, இன்னும் ஒரு படி மேலே சென்று, இதை முழுமையான சீர்திருத்தத் திருமணமாக, முழுமையான பகுத்தறிவு திருமணமாக நடத்த வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவிலே எங்கோ ஒரு மூலையில் நம்முடைய மொழியை, நம்முடைய மொழிக் கொள்கையை வாட்டி வதைக்கின்ற அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் தமிழ்நாட்டில், இந்தியாவில் சமஸ்கிருதம் தலைதுhக்குமா? வடமொழி நம்மீது படையெடுக்குமா என்ற அந்தக் கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது.

தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

வடமொழி எப்படி எல்லாம் ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சிக்காரர்களின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தான் நான் கூறுகிறேன். சோம சுந்தர பாரதியார் சொல்வார் - "சமஸ்கிருதம்" என்று கூடச் சொல்ல மாட்டார் - "சஞ்சிகிரதம்" என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி - வட மொழி.

அந்த வடமொழிக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா என்ற கேள்வி பிறப்பதற்கு முன்பு, வடமொழியைத் திணிக்க விரும்பு கின்ற மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு பெரும் கிளர்ச்சி உருவாகும்.

எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவாயிற்றோ, அதைப் போல வட மொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி தமிழ்நாட்டில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத் தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் "சவுக்கை" எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும். அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால், எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார்.

அப்படிப்பட்ட வீரர், அப்படிப்பட்ட கொள்கைவாதி, அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர், அந்த ஆலடி அருணாவின் இல்ல விழாவில் தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற ஆலடி அருணாக்கள் வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள். அதற்கு நாம் துணை போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi, on Monday, slammed the Centre for its wanton efforts to impose Sanskrit on students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X