For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவராமல் ஏழை மக்களை தண்டிப்பது நியாயமா? மோடிக்கு கருணாநிதி கேள்வி

பிரதமர் மோடியின் அறிவிப்பால் நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருணாநிதி நாளேடுகளை மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் வழிகளைத் தவிர்த்து விட்டு, ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக நாளேடுகள் வாயிலாகவும், நேரிலும் கண்டு வருகிறோம்.

karunanidhi statement about modi's announcement of demonetisation of Rs. 500 and Rs. 1000 notes

அதைத்தான் எனது முதல் அறிக்கையிலேயே "வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும், இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர் களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும் தங்களிடம் உள்ள ஒரு சில 500 ரூபாய் நோட்டை வாங்கு வதற்கு யாரும் முன் வராத நெருக்கடி நிலையில் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது" என்று நான் குறிப்பிட்டதைத்தான் அன்றாடம் நேரிலே கண்டு வருகிறோம். எனது உடல் நலம் சிறிது குன்றியுள்ள நிலையில், நாட்டில் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.

மளிகைக் கடைகள் பலவும் மூடப்பட்டன. மருந்துக் கடைகளிலும் பணத்தை வாங்க மறுத்த தால், பலர் மருந்துகள் கிடைக்காமல் அவதிப் பட்டனர். ஆட்டோக்கள், டாக்சிகள், ஆம்னி பஸ்களில் இந்த நோட்டுக்களை வாங்க மறுத்தனர். சென்னை மட்டுமல்லாது கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதே நிலைதான் நீடித்தது.

karunanidhi statement about modi's announcement of demonetisation of Rs. 500 and Rs. 1000 notes

டோல்கேட்டுகளில் சில்லறையாக வேண்டுமென்று கேட்டதால் அங்கு வாகனங்களில் செல்பவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ரயில் நிலையங்களில் இந்த இரு நோட்டுகளையும் வாங்க ஊழியர்கள் மறுத்தனர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகளிலும் பணத்திற்குப் பதில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டுமென்று நோயாளிகளிடமும், அவர்களுடைய உறவினர்களிடமும் வலியுறுத்தப்பட்டது.

பழைய நோட்டுகளை மாற்ற குவிந்தனர் மக்கள். மாற்றும் போது 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்ததால் சில்லறை கிடைக்காமல் மக்கள் அதிருப்தி அடைந்தனர். சில அஞ்சலகங்களில் மட்டுமே பணப் பரிமாற்றம் என்பதால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். தமிழகம் முழுவதும் வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, இரண்டாவது நாளிலும் பொதுமக்கள் குவிந்தனர்.

புதிய நோட்டுகள் வராததால், ஏடிஎம் சேவை முற்றிலும் முடங்கியது. பணப் புழக்கம் குறைந்துள்ளதாலும், பொருள்களை வாங்குவதற்கு ஆள் இல்லாததாலும் செயற்கையாக பொருளாதாரம் முடங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லா சிறு தொழில்களும் ஊனமடைந்து வருகின்றன. குறிப்பாக, மளிகைக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், அழகு நிலையங்கள், சிறு வணிக நிறுவனங்கள் என்று பல்வேறு சிறு தொழில்கள் முற்றிலும் செயலிழந்து விட்டன.

திருவொற்றியூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு பணம் தர முடியாமல் வங்கி அதிகாரிகள் கதவை இழுத்து மூடியதால், வங்கியை பொதுமக்களே முற்றுகையிட்டிருக் கிறார்கள். இது போன்ற நிலைமைகள் எல்லாம் ஏற்படும் என்பதை யூகித்துத்தான் எனது முந்தைய அறிக்கையில் நான் அதற்கான வழிவகை காண வேண்டுமென்று தெரிவித்திருந் தேன். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குச் சிரமம் கிடையாது என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.

சிறு வீடுகளைக் கட்டிக் கொள்ளவோ, தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு திரும ணம் செய்து வைக்கத் திட்டமிட்டோ, தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காகவோ ஒரு சில லட்ச ரூபாய்களை, வங்கியில் செலுத்தாமல், நேர்மையான முறையில் தங்கள் சொந்த சேமிப்பாக வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களின் கதி என்ன?

பாஜக அரசின் இந்த அறிவிப்பு அவர்களையெல்லாம் காப்பாற்றி விடுமா? அப்படிப்பட்டவர்கள் வைத்திருந் தது கறுப்புப் பணமா? அவரவர்கள் வைத்திருக்கும் பணம் அவரவர்களுக்குத்தான் என்று பிரதமர் அறிவித்தாரே, ஒரு லட்சம் என்றும், இரண்டு லட்சம் என்றும் தங்கள் குடும்பங்களில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தவர்களின் கதி என்ன? கிராமங்களிலும், நகரங்களிலும் தாய்மார்கள் குடும்ப நலன் கருதி, அவசரப் பயன்பாட்டுக்காக, ஆயிரம், லட்சம் ரூபாய்களை சேமிப்பாக வைத்திருக்கிறார்களே, அந்தத் தொகைகள் எல்லாம் கறுப்புப் பணமா?

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் வங்கிக் கிளைகள் - சுமார் 8000 ஏடிஎம் மையங்கள் - சென்னையில் மட்டும் 930 வங்கிகள் - 700 ஏடிஎம் மையங்கள். ஏடிஎம் சேவை மையங்களில் இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டு வந்து சேரவே இல்லை. புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சற்று வடிவ வித்தியாசத்துடன் இருப்பதால், அவற்றை நிரப்ப ஏடிஎம் இயந்திரங்களில் சில மாறுதல்கள் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. அதனால் 2000 ரூபாய் நோட்டுகள் அங்கே நிரப்பப்பட வில்லை.

இவற்றையெல்லாம் முறையாக மத்திய அரசு முதலிலேயே எதிர்பார்த்து உரிய வகையில் திட்டமிட்டு இந்த அறிவிப்பினைச் செய்திருக்க வேண்டாமா? அல்லது உடனடியாகச் செல்லாது என்று அறிவித்ததற்குப் பதிலாக, ஏற்கெனவே பல முறை செய்ததைப் போல, குறிப்பிட்ட தேதி வரை செல்லும்; அதற்குப் பிறகு புதிய நோட்டுகள் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்திருந்தால், இப்போது நாட்டில் நடைபெறும் கலவரமான நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாமே?

வங்கிகளில், தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளைக் கொடுத்து விட்டு 4000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணம் மாற்றப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. அந்த 4000 ரூபாய்க்கு, புதிய இரண்டு 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய், மளிகைக் கடையிலோ, ஆட்டோ ஓட்டுநரிடமோ 100 ரூபாய்க்காக கொடுத்தால், அந்த மளிகைக் கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுநரும் மீதம் கொடுப்பதற்கு என்ன செய்வார்கள்? எங்கே போவார்கள்?

ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? ஒரு சில சிறிய கடைகளில் மீதித் தொகையைக் கொடுக்க முடியாமல், துண்டுச் சீட்டில் மீதித் தொகையை பின்னர் பெற்றுக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களிடம் எழுதிக் கொடுக்கிறார்கள். கறுப்புப் பணத்தை ஒழிக்கக் கச்சைக் கட்டிக் கொண்டிருப்பதாக கட்டியம் கூறுப வர்கள், 1000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டு, புதிய 2000 ரூபாய் நோட்டை முதலில் அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை இப்போதாவது உணர்வார்களா?

தமிழகத்தில் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து விட்டு, வேறு நோட்டுகளை மாற்றிக் கொள்ள 4,000 ரூபாய் ஒருவருக்கு என்று உச்ச வரம்பு நிர்ணயித்து, அவ்வாறு மாற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் மாலை வரை வங்கிகளில் நீண்ட கியூவில் நிற்பதை நாளிதழ்கள் எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளன.

ஆனால் கறுப்புப் பணம் வைத்திருப்பதாகக் கூறப்படும் எந்தப் பணக்காரராவது தங்கள் கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ள அந்த நீண்ட கியூவில் இடம் பெற்றதைப் பார்க்க முடிகிறதா? அது மாத்திரமல்ல; இந்த 4,000 ரூபாய் என்ற உச்ச வரம்பை, அண்டை மாநிலங்கள் 8,000 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்திக் கொண்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் அந்த மாநில முதல்வர்களின் முயற்சி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்திலே அப்படி உச்ச வரம்பை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு இதுவரை ஏதாவது முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் துயரைப் போக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.

தமிழக முதல்வர், ஜெயலலிதா கூட, மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காகத்தானே தவிர ஏழையெளிய மக்களின் துயரைப் போக்குவதற்கான நடவடிக்கை பற்றி எதுவும் கூறவில்லை என்பதிலிருந்து நாட்டு மக்களின் துன்ப துயரங்கள் அவருக்கு அவ்வப்போது அறிவிக்கப்பட்டனவா என்ற ஐயப்பாடு தோன்றுகிறது அல்லவா?

மத்திய அரசுக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பது மட்டுமே லட்சியம் என்றால், ஏழையெளிய நடுத்தர மக்களைப் பாதிக்காமல் என்ன செய்யலாம் என்று பொருளாதார மேதைகளை அழைத்து யோசனை கேட்டிருந்தால் பல முடிவுகளை அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆயிரம் ரூபாய் நோட்டைச் செல்லாது என்று கூறி விட்டு, 2000 ரூபாய் நோட்டை விநியோகிப்பதால், ஊழல் இரண்டு மடங்கு உயரும். இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர், சீதாராம் யெச்சூரி, கூடத் தெரிவித்திருக்கிறார்.

''கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது என்பதின் சாரம், கறுப்புப் பண நடவடிக்கைகளை, நேர்மையான, திட்டமிட்ட மற்றும் கடுமையான புலனாய்வு மூலம் கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறதே தவிர, இப்போது செய்திருப்பதைப் போல சாதாரண மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதில் அல்ல'' என்று பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.

தேசிய புலனாய்வுக் கழகத்தின் வேண்டுகோளின்படி, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் துறை 2015இல் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியப் பணப் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய். மொத்தப் பணப் புழக்கம் 16.24 இலட்சம் கோடி ரூபாய். அதில் சுமார் 86 சதவிகிதம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் ஆகும். ஒரே நொடியில் இதை புழக்கத்திலிருந்து எடுத்து விட்டால் பொருளாதாரம் என்ன ஆகும்?

நமது தேசிய வங்கிகளில் பெரிய முதலாளிகள் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொகை 11 லட்சம் கோடி ரூபாய். அவர்கள் யார் யார் என்பது மத்திய பாஜக அரசுக்கு நன்கு தெரியும். அந்தப் பெயர்களை வெளியிட வேண்டு மென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும்கூட, மோடி அரசு அதைச் செய்ய முன்வரவில்லை. பனாமா லீக்ஸ் மூலம் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளன. அதைப் போல ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளிலும் கறுப்புப் பணம் அடை காத்துக் கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட கறுப்புப்பணம் மொத்தம் 120 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.

கறுப்புப் பணத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் அன்னிய நாட்டுக் கரன்சிகளில் பாதுகாப்பாகப் பதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக் கிறார். இவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து, கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதைத் தவிர்த்து விட்டு, இப்படி இந்திய நாட்டு மக்களை, குறிப்பாக ஏழையெளிய நடுத்தர வர்க்கத்தினரை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் அறிவித்த தகவல் முன்கூட்டியே வெளியாகி விடாமல், பிரதமர் வியூகம் வகுத்ததைப் பற்றி நாளிதழ்கள் எல்லாம் அவரைப் பாராட்டி எழுதியிருந்தன. ஆனால் பிரதமர் 2000 ரூபாய் நோட்டு பற்றி வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்பாகவே, அந்த 2000 ரூபாய் நோட்டின் படமே ஏடுகளில் வெளிவந்ததற்கு என்ன காரணம் என்று இதுவரை மத்திய பாஜக அரசினர் காரணம் கூறவில்லை.

குறிப்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், ''நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததில், மெகா ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, அவரது கட்சியினர் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்களை, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, ஆளுங்கட்சி தங்களுக்கு நெருக்கமான நபர்களுக்கு இந்தத் தகவலைக் கசிய விட்டுள்ளது. பல தொழிலதிபர்களுக்கும் இந்த விபரம் தெரிந்துள்ளது'' என்றெல்லாம் கூறியிருக்கிறார். கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்குப் பொருத்தமான பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

நேற்றையதினம் கோவாவில் பேசிய பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்த போது கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக தூங்கினர் என்றும், சில லட்சம் ஊழல்வாதிகள் மட்டும் தங்கள் தூக்கத்தை இழந்தனர் என்றும் பேசியிருக்கிறார். உண்மை என்னவென்றால், பிரதமரின் அறிவிப்பு காரணமாக கோடிக்கணக்கான சாதாரண சாமானிய மக்கள் தூக்கமிழந்து துயரத்தோடும், பதைபதைப்போடும் நீண்ட க்யூக்களில் தங்கள் பணத்தை மாற்ற முடிவில்லா தவம் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எனவே பிரதமர் மோடியின் அறிவிப்பு, நல்ல நோக்கம் கருதிச் செய்யப்பட்டதாக ஓரளவு வரவேற்கப்பட்ட போதிலும், அதனால் நடுத்தர, அடித்தட்டு வகுப்பு மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன், என்ன நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு செய்யப்பட்டதோ, அதுவே முழுமையாக வெற்றியடையாமல் போய் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடுமோ என்ற ஐயப்பாட்டினை மறுதலிக்க முடியாது.

இந்த அறிவிப்பு அண்மையில் நடைபெறவிருக்கின்ற சில மாநிலத் தேர்தல்களையொட்டி பாஜக அரசினால் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்ற குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட வேண்டும். ஏழையெளிய மக்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுவதற்கும் தக்க உடனடி நிவாரணம் தேடி, தங்கள் மீது பொழியப்பட்டுள்ள வசவுகளைக் கழுவிப் பரிகாரம் காண, மத்திய பாஜக அரசினர் முன்வர வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief karunanidhi issued statement about prime minister modi's announcement of demonetisation of Rs. 500 and Rs. 1000 notes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X