For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுவரை பொருளாளர்.. இனி... ஸ்டாலினுக்கு வழி விடுகிறார் கருணாநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கான அரங்கம் முரசொலி அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

பொதுக் கூட்டத்தின் முடிவில் ஏற்புரை நிகழ்த்தி கருணாநிதி பேசியதாவது...

புரிந்து கொண்டால் சரி...

புரிந்து கொண்டால் சரி...

''பொருளாளர் ஸ்டாலின். இதுவரையில் பொருளாளர்... புரிந்துகொண்டால் சரி, புரியாவிட்டால் பரவாயில்லை... ஸ்டாலினும், துரைமுருகனும் திமுகவின் வலிமை, பொலிவு, வளர்ச்சி பற்றி நீண்ட நேரம் உரையாற்றி இருக்கிறார்கள்.

சிண்டு முடிவார்கள்

சிண்டு முடிவார்கள்

நான் அதிக நேரம் உரையாற்றி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. கடல் போன்ற மக்கள் திரளில் ஒரு சில வார்த்தைகள் சொல்லாவிட்டால், கருணாநிதிக்கு அவரே வெளியிட்ட கருத்துகளுக்கு ஒப்புதல் இல்லை போலும் என்று விகாரமாக சிண்டு முடியும் பாணியில் பேசவும், எழுதவும் தொடங்குவார்கள். ஆகவே தான், இந்த விழாவில் பங்குபெற்றதிலும், பங்குபெற்றுள்ள அருமைத் தம்பிமார்களை பாராட்டுவிதத்தில் ஒருமித்த கருத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

வீரத்தை விளைவிக்கவே படத்துக்கு கதை, வசனம்

வீரத்தை விளைவிக்கவே படத்துக்கு கதை, வசனம்

இன்றைக்கு இந்த கூட்டம் தொடங்குகிற நேரத்தில் நான் புதிதாக எழுதுகின்ற படத்தினுடைய விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அது, ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுதுவது காசு சம்பாதிப்பதற்காக அல்ல. நான் இன்று ,நேற்றல்ல... பல்லாண்டுகளாக எழுதுகின்ற படங்கள் எல்லாமே எழுச்சி ஊட்டுவதாக, தாய்த் தமிழகத்துக்கு வீரம் அளிப்பதாக எழுதப்பட்ட படங்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பூம்புகார், பராசக்தி போன்ற படங்களைத் தந்திருக்கிறென். நான் படங்களிலேயே அண்ணாவின் தத்துவங்களை பெரியாரின் கொள்கைகளை கூறி இருக்குறேன்.

வளர்ச்சியில் நன்மையும் தீமையும்…

வளர்ச்சியில் நன்மையும் தீமையும்…

திமுகவில் .. என்னைப் பின்பற்றி,. மன்னிக்க வேண்டும். அறிஞர் அண்ணாவைப் பின்பற்றி இதுபோன்ற துறைகளிலே ஈடுபட்ட காரணத்தால் தான் வளமான, வலிமையான இயக்கத்தை காண முடிந்தது. அந்த இயக்கத்தின் வளர்ச்சி நன்மையிலும் முடிந்தது. சில நேரங்களில் தீமையாகவும் முடிந்தது. அந்த தீமை என்னவென்று விளக்கி, ஒரு நல்ல விழாவில் மாசு ஏற்படுத்த விரும்பவில்லை.

மாசு எல்லாம் தூசு

மாசு எல்லாம் தூசு

அந்த மாசு எல்லாம் தூசு போல நம்மால் பாவிக்கப்படும். நம்மால் விரட்டி அடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு தான் இன்றைய தினம் கலைத்துறைப் பணிகளையும் லட்சியப் பணிகளையும் ஒன்றாகக் கருதி ஆற்றிக்கொண்டிருக்கிறேன். அந்தப் பணிக்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.

ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்துக்குரியவர்கள்

ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்துக்குரியவர்கள்

ஸ்டாலின் சித்திரமாக சிலையாக எப்படி தொண்டாற்றுவார் என்று என் மனக் கண் முன்னால் எண்ணிப்பார்க்கிறேன். எனக்கு 90வயது. சொல்லிக்கொள்ள வெட்கப்படவில்லை. 90 வயதுக்குள் நான் கண்ட, நாங்கள் கண்ட என்று சொல்வதற்குக் காரணம், திமுகவின் உறுப்பினராக இருந்து தஞ்சை மாவட்ட பகுதி செயலாளராக இருந்து, திமுகவின் தலைவனாகவே ஆகியிருக்கிறேன் என்றால் எத்தனை கட்ட வளர்ச்சி எனக்கு? அந்த வளர்ச்சி போல, ஸ்டாலின் ஆனாலும், துரைமுருகன் ஆனாலும் அவர்கள் எல்லாம் நாங்கள் பெற்ற இன்பம் நீங்களும் பெறவேண்டும் என்ற வாழ்த்துக்குரியவர்கள். அவர்களைப் பாராட்டுகிறேன்.

ஒவ்வொரு இளைஞனும் கருணாநிதி ஆகலாம்…

ஒவ்வொரு இளைஞனும் கருணாநிதி ஆகலாம்…

திருக்குவளை கிராமத்தில் மாடு ஓட்டிக்கொண்டு கல்லூரியில் படிக்க வழியில்லாமல் அலைந்து திரிந்து அவதிப்பட்டு எப்படியோ படித்து முடித்து பெரியாரை தலைவரகாக் கொண்டு, அண்ணாவை தலை சிறந்த வழிகாட்டியாகக் கொண்டு கருணாநிதி முன்னேறியதைப் போல நாமும் முன்னேற வேண்டாமா என்று நினைத்தால் போதும். ஒவ்வொரு இளைஞனும் கருணாநிதி ஆகலாம். ஒவ்வொரு இளைஞனும் ஸ்டாலின் ஆகலாம். ஒவ்வொரு இளைஞனும் துரை முருகன் ஆகலாம். ஒவ்வொரு இளைஞனும் திமுகவின் ஆற்றல் பெற்றவனாக ஆகலாம்.

சுயநலத்தை துறக்க வேண்டும்

சுயநலத்தை துறக்க வேண்டும்

பொதுவாழ்க்கையிலே, அரசியல் வாழ்க்கையிலே, சமுதாய வாழ்க்கையிலே துறக்க வேண்டியது பெரிதான விஷயம் அல்ல. இளைஞர்கள் தங்கள் சுயநலத்தை துறக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் சமூகத்தை காப்பாற்றுகிற, சாதி ஒழிந்த, மத பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்கலாம். அந்தப் பணியை ஏற்படுத்துவது பெரிய காரியமல்ல. மிக சுலபமான காரியம்தான்.

ராமானுஜர் கதைக்கு வசனம் எதற்கு?

ராமானுஜர் கதைக்கு வசனம் எதற்கு?

இன்றைக்குக்கூட ஏன் இளைஞர்களைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று எண்ணுகிறேன் என்றால், என்ன காரணம் என்று கேட்டால், நாளைக்கு நீங்கள் பார்க்க இருக்கிற ராமானுஜர் படம் எழுதப் போகிறேன் என்று சொன்னதும். யார் யார் என்ன கேள்விக்கு இடம் அளித்தார்கள் என்பது தெரியும். வரலாறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ராமானுஜரை நான் படமாக்க, கதையாக்க விரும்பவில்லை. என் ஆசான் பாரதிதாசன் அப்போதே வசனம் எழுதினார். ஏன் பாரதிதாசன் ராமானுஜரை தேடிப்பிடித்து படமாக்கினார் என்றால், அவர் ஆசையை நிறைவேற்ற கிடைத்த கருப்பொருள் அது.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இன்றும் ஏற்றிப் போற்றுகின்ற பார் புகழும் கவிஞர், ஏன் ராமானுஜரை தேர்ந்தெடுத்தார் என்று கேட்டால் இவர்களைக் கண்டாவது, இவர்கள் கதைகளை சொல்லியாவது சாதி, மதம் ஒழியாதா? இவர்கள் வழியில் நடக்க மாட்டார்களா? என்பதற்காகக்தான் ராமானுஜர் படத்தை வெளியிட பாரதிதாசன் முன்வந்தார். கடவுளை மக்களை பேதப்படுத்தும் மதியீனத்தை ஒழிக்க நினைத்தார் ராமானுஜர். அந்த வழியில் பாரதிதாசன் கொள்கைகளை இன்றும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம். சமத்துவ சமுதாயம் படைக்க, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் ஓர் குலம் என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழியிலே ஈடுபட்டோம்.

பகுத்தறிவு பரவ பிரச்சாரம்

பகுத்தறிவு பரவ பிரச்சாரம்

பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தால் படத்துக்கு பிரச்சாரம் செய்கிறாரே? என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை. பகுத்தறிவு பரவவேண்டும் என்ற பிரச்சாரம்தான் இது. அப்படிப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, சாதி மதமற்ற உன்னதமான தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

மீண்டும் விடுதலை கோஷம் தொடங்கும்

மீண்டும் விடுதலை கோஷம் தொடங்கும்

இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை நாங்களே ஆளப்பிறந்தவர்கள். நீங்கள் அணில் தான் என்று மத்திய அரசு நினைத்தால் மீண்டும் விடுதலை கோஷத்தை ஆரம்பிப்போம். திமுக ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நினைத்து யாரேனும் பிரிவினை செய்ய நினைத்தால், அதை வைத்து அரசியல் நடத்த முன்வந்தால், வட நாட்டில் கூட அவர்களால் தலையெடுத்து அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்ய முடியாது. திமுக சமுதாய சீர்திருத்த இயக்கம். பெரியாரால், அண்ணாவால், அவர்களைத் தொடர்ந்து இந்த இயக்கம் வலுப்பெற்றது. மனிதனாக நடப்போம். மனிதனாக நடத்த யார் மறுத்தாலும் வீழ்த்துவோம்.

வீரத்தோடு நடைபோடவேண்டும்

வீரத்தோடு நடைபோடவேண்டும்

இளைஞர்களே, உங்கள் கையிலே இந்த நாடு இருக்கிறது. அதனால்தான், மாணவர் போராட்டம் இந்தி எதிர்ப்பு குரல் கொடுத்தது. அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும் வரையில், எந்த மொழியும் நம்மை இழிவுபடுத்திடமுடியாது. அந்த வீரத்தோடு நடைபோடவேண்டும். அதுதான் வெற்றிக்கு வித்து. வழிகாட்டி. வெற்றிப் பாதையில் வீரநடை போடுவோம். யார் குறுக்கிட்டாலும் சரியான பதிலடி கொடுப்போம்''

இவ்வாறு தனது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றினார்.

English summary
Stalin Will be the next Leader of DMK party. Karunanithi said indirectly in His Birthday meet which was held in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X