கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு..விசாரணை வளையத்தில் எடப்பாடி ஜோதிடர்..மர்மம் எப்போது விலகும்?
சென்னை:
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது. ஆறு ஆண்டுகாலமாக நீடிக்கும் மர்மத்திற்கு எப்போது விடைகிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கப்போவதாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் இங்குதான் ஓய்வெடுக்க வருவார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று அதிமுகவில் இருந்தே குரல்கள் எழுந்துள்ளன.
கோடாநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியாதா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சென்னை சிஐடி நகரில் உள்ள, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த வழக்கு விசாரணை எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்தபோது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கனகராஜிடம் கோவை மாநகர சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் திடீர் விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான காவலர்கள், கனகராஜிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சட்டசபையிலும் கடந்த வாரம் காரசார விவாதப்பொருளானது.
கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் என்றும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக என குற்றம் சாட்டினார். மேலும், கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம் எனவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கொடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, அதிமுக ஆட்சியில் காலம் மெத்தனமாக இருந்தீர்கள். நாங்கள் அந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.
குற்றவாளி சாயன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த உடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியிருந்தால் வழக்கு நிலுவையில் இருந்திருக்காது. அம்மையார் வீட்டில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அவர் சாதாரண நபர் கிடையாது. முதலமைச்சராக இருந்தவர். மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டுபிடிப்போம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 'அந்த வீடு வேறொருவருடையது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு கிடையாது. அது தனியாருடையது தான். அரசு உங்களிடம் தான் இருக்கிறது விசாரணை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு மு.க.ஸ்டாலின், 'அந்த வீடு அவருடையதாக இல்லை என்றாலும் அவர் இருந்த வீடு. அலுவலகமாக பயன்படுத்திய வீடு. கொடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான் கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications