லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி.. கும்பகோணத்தில் கூடிய உயர்மட்டக்குழு.. சரத்குமார் முடிவு என்ன?
கும்பகோணம்: லோக்சபா தேர்தல் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். யாருடைய கருத்து கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு எது சிறந்ததாக இருக்கும், வெற்றிகரமாக அமையும் என ஆராய்ந்து நான் முடிவு செய்து ஒருவார காலத்தில் தெரிவிப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டன. சின்னச் சின்ன கட்சிகளுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்ற குழப்பம் உள்ளது.

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக உடன் இணையலாமா? அதிமுக உடன் கூட்டணி சேரலாமா என்று குழப்பத்தில் இருக்கிறார் சரத்குமார்.
அதற்கு முன்னதாக காரைக்குடி அருகே குல தெய்வ கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் குடும்பத்தோடு பங்கேற்றார். அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் சரத்குமார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனையடுத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் கும்பகோணம், பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்டக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், "தமிழக அரசின் செயல்பாடு முன்னேற்றமாகவோ, வரவேற்கத்தக்க வகையிலோ இல்லை. காரணம் மத்திய அரசு 14 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் உள்ளது. அதே வேளையில் தமிழக அரசின் கடன் 8.33 லட்சம் கோடியாக உள்ளது. வருவாய் குறைந்து கடன் அதிகரித்துள்ள நிலையில், இலவசங்கள் தேவையா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
வருவாயைப் பெருக்க, வேலைவாய்ப்பினை உருவாக்க, புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கைகள் இல்லை. இந்தக் கடனை 5 ஆண்டுகளில் தீர்க்கவல்ல திட்டங்கள் எதுவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் இல்லை" என்றார்.
லோச்பா தேர்தல் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், அவர்கள் பேசிய கருத்துகளை ஆராய்ந்து யாருடைய கருத்து கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு எது சிறந்ததாக இருக்கும், வெற்றிகரமாக அமையும் என ஆராய்ந்து நான் முடிவு செய்து ஒருவார காலத்தில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளேன்.

அது அனைவருக்கு ஏற்புடையதாக இருந்ததால் அதனை வெளிப்படையாக அறிவிப்போம். தேர்தல் தேதி அடுத்த மாதம் 12ம் தேதி வாக்கில் தான் வெளியாகும் நிலையில், கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் இருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. அவர்களது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராகக் கருத்து இருந்தாலும் அதனை அரசு, விவசாயிகளுக்குப் பக்குவமாக எடுத்து வைக்க வேண்டும்.
நடிகர் விஜய் 2026ல் தான் தேர்தல் களத்திற்கு வருவதால், அவரது கட்சியின் தாக்கம் இப்போது எப்படி வரும். மாநில ஆளுநர், அரசு அனுப்புகிற கோப்புகளை விரைந்து ஆராய்ந்து முடிவுகளை அறிவிக்கும் விதமாகக் கோப்புகளைத் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் சரத்குமார். அதிமுக உடன் கூட்டணியா? பாஜக உடனா? இன்னும் ஒரு வாரத்திற்கு சமக கட்சி தொண்டர்கள் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications