For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சினிமாவின் பாலியல் பார்வை' மாற வேண்டுமா? குட்டி ரேவதியின் உணர்வுகள்

By BBC News தமிழ்
|

(இதில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

'சினிமாவின் திசை' - ஒரு திரைப்பட பாடலாசிரியரின் அனுபவ பகிர்வு!
Getty Images
'சினிமாவின் திசை' - ஒரு திரைப்பட பாடலாசிரியரின் அனுபவ பகிர்வு!

வெளிச்சத்திலிருந்து இருளில் நிகழ்வைக் காண முடியாது. இருளில் நின்று கொண்டு வெளிச்சத்தில் நிகழ்வதைப் பார்க்கலாம் என்னும் தத்துவ அறிவியல் பார்வையின் வெளிப்பாடு, சினிமா.

சென்ற நூற்றாண்டில் மனிதனின் அரிய கலைச்சாதனையும் கூட, கலை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மனிதர்களின் சிந்தனை வடிவத்தை, அதன் தாக்கத்தை, தாக்கத்தின் எல்லைகளை ஒட்டுமொத்தமாய்ப் பிரதிபலிக்கும் உச்சபட்ச படைப்பு வடிவம்.

சமூக, அரசியல், மானுட மாற்றங்களை எந்தக்கலையும் மனித வரலாற்றில் இவ்வளவு விரைவாக முன்னெடுத்துச் சென்றதில்லை. கலை, தொழில்நுட்பம் என்ற இருதுறைகள் சங்கமித்துப் பிறக்கும் வெளிப்பாடு என்பதால், ஒன்றையொன்று முண்டியடிக்கும், ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்கும் அசாதாரண சாதனைகளும் நிகழ்ந்துள்ளன.

இத்தகையதொரு வெளியில், ஆண்பால், பெண்பால் விகுதிகளும் பகுதிகளும் சினிமாவிற்கு அவசியம் இல்லை என்றாலும், இந்திய நில எல்லையிலிருந்து சினிமாவின் அதிகார வெளிகளை, அதன் எதிர்ப்புகளை இந்தப் பத்தாண்டுகளில் ஒரு பெண்படைப்பாளியாக நிறைய தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

பெண்ணாக எவர் நுழைந்தாலும், திரைத்துறையில் அதுதான் பெண்ணுக்கு முதல்முறை என்பது போல புதியதான சவால்களையும் எச்சரிக்கைகளையும் தாம் சினிமா கற்றுக்கொடுக்கத் தொடங்கும்.

கனத்த கதவுகள்

படைப்புத்திறன் வெளியிலும் சரி, தொழில்நுட்ப வெளியிலும் சரி, பெண்கள் தம் திறமையையோ, வாய்ப்பையோ வெளிப்படுத்த இயலாதபடி, கனத்த கதவுகள் தாம் திரைக்கோட்டையை நிர்வகிக்கின்றன. மார்க்கெட்டிங், விளம்பரம், விநியோகிப்பு என அதன் எல்லா வியாபாரச் சமன்பாடுகளையும் இதற்கேற்றாற் போல முறைப்படுத்தி வைத்திருப்பதன் வழியாக, இந்தக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கையாள்கிறது திரையின் அதிகார ஊடகம் என்று நினைக்கிறேன்.

'சினிமாவின் திசை' - ஒரு திரைப்பட பாடலாசிரியரின் அனுபவ பகிர்வு!
BBC
'சினிமாவின் திசை' - ஒரு திரைப்பட பாடலாசிரியரின் அனுபவ பகிர்வு!

இதற்கு முன் பெண்கள் திரைத்துறையில் சாதனைகள் நிகழ்த்தியதில்லையா, திரைவெளியில் இயங்கியதில்லையா என்று கேட்கலாம். ஒற்றைப் பெண்ணின் சாதனையை, விடுதலையான செயல்பாட்டைக் காரணம் காட்டி, மற்ற பெண்கள் நுழைவது மறைமுகமாக எதிர்க்கப்படுகிறது.

இயல்பாகவே, பெண் படைப்புத்திறன் மீது நிலவும் ஊடகத்தின் அச்ச உணர்வுதான் காரணமாக இருக்கவேண்டும். ஹாலிவுட்டில், முதன்முறையாக இவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்பொழுது தான் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார்.

என் அனுபவத்தில், தொடக்கத்திலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் பரத்பாலா போன்றோரிடம் பணியாற்றியதால், அங்கு பால்வேறுபாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சர்வதேசத்தரம், நவீன இலட்சியங்கள்தாம் மைல் கற்களாக இருந்தன.

ஓர் அசாதாரண பலத்தைக் கொடுக்கும், நம் திறமையை எந்தப்பாரபட்சமுமில்லாமல், தயக்கம் இல்லாமல், மனத்தடை இல்லாமல் முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வெளிகளைக் கண்டறிதல்தான், பெண் படைப்பாளிகள் வெல்வதற்கான தடைக்கட்டைகளைத் தளர்த்திவிடும் என்பதை நான் அங்கே தான் கற்றுக்கொண்டேன்.

கற்பனைத் திறன், திரைத்துறையின் அசுர வளர்ச்சிக்கு ஏற்றபடி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளல், சர்வதேசத் துறை மாற்றங்களை அளவிடுதல், விரைந்து செயல்படும் மனநிலை, அயரா தொடர் உழைப்பு, இயங்கிக்கொண்டே இருத்தல் ஆகியவை திரைத்துறையின் முதன்மையான கோரிக்கைகள். இதில் எப்படி பால்வேறுபாட்டிற்கான அவசியம் ஏற்படுகிறது.

ஒருவகையில், திரை ஊடகம் நேரம் காலம் அறியா பணி என்பதால், அந்த ஒரு காரணத்தை பெண்களுக்கு எதிராக முன்வைப்பதும், பெண்கள் தாம் தயங்குவதற்கும் இதையே சாக்காகக் கொள்வதும் நிலவுகிறது.

திரைத்துறையின் பிரமாண்ட விரிவாக்கம் தொடக்கத்தில் இத்தகைய விதிகளை வைத்துத்தான், மிரட்சியைத் தரும். உண்மையில், திரை ஊடகம் தரும் சவால்கள், ஒவ்வொருவரும் தம் அன்றாட வாழ்விலிருந்து எதிர்கொள்ள வேண்டிய, அதற்கான வழிவாய்ப்புகளைக் கண்டறிய வேண்டியவையாகும். பொதுவிதிகள் என்றோ, காலங்காலமான விதிகள் என்றோ எவையும் இல்லை. எல்லாமே எளிதில் முறியடிக்கப்படக்கூடியவை தாம்.

தவிர்க்கவியலா ஒரு கச்சாப்பொருள்

நடிப்புத்துறையில் மட்டுமே பெண்கள் நுழைய ஏதுவாக இருப்பதன் ஒற்றைக்காரணம், அங்கே பெண் என்பது தவிர்க்கவியலா ஒரு கச்சாப்பொருள். அதிலும், வெள்ளை நிறத்தோல் பெண்களே இடம் பெற முடியும். இந்த நிலை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது. நிறம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வும், அழகியல் சார்ந்த புதிய புரிதல்களையும் விளம்பரத்துறை ஏற்றுக்கொள்ள சமூக அரசியல் களங்கள் நிர்ப்பந்தித்துள்ளதால், வணிகம் சார் வெற்றிக்காகவேனும், நம் அண்டைவீட்டு, நம் வீட்டுப்பெண்களைத் திரையில் காண முடிவது, புதிய சாதனை என்றே சொல்லவேண்டும்.

நம் அடுத்தக்கட்ட நகர்வு, படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை நோக்கியதாக இருக்கவேண்டும். குறிப்பாக, இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, கலை இயக்கம் என விரியவேண்டும். இறுதிச்சுற்று, 'சுதா கொங்குரா',வின் வெற்றி படம் வந்த புதிதில், பெண் இயக்குநர்களை வரவேற்கும் முகங்களைத் தயாரிப்பாளர்களுக்கும், பிற ஆண் கலைஞர்களுக்கும், ஒத்துமொத்த இன்டஸ்ட்ரிக்கும் கொடுத்தது. ஆனால், இதுவும் தற்காலிகம் தான்.

ஆக, பெண்கள் திரைத்துறையின் முழு வீச்சையும் பரப்பையும் உணர்ந்துகொள்ளலும், தம் முயற்சியில் சோர்ந்துபோகாமல் இருப்பதும் அவசியமாகிறது. தற்பொழுது, நிறைய இளம் இயக்குநர்களுடன் பணி புரிகிறேன். முந்தைய தலைமுறை படைப்பாளிகளிடம் இருந்த பெண் படைப்பாளிகள் குறித்த மிரட்சியோ தயக்கமோ எதிர்ப்புணர்வோ இவர்களிடம் இல்லை. எல்லைகளை புதிய புதிய பரப்பிற்கு விரித்துக்கொண்டே போகும் எளிய முயற்சிகளைச் செய்வதும், திறந்த மனதுடன் எல்லா கருத்துகளையும் காண்பதிலும் புதிய தெளிவும் திசையும் பிறக்கும் நோக்கங்களுடன் இவர்கள் திரை ஊடகத்தை இவர்கள் கையாள்கின்றனர்.

வீழ்ச்சியில் முடியும்

கலைத்துறையின் அதிகபட்ச தேவைகள் வணிகரீதியானவை. சாதி, மதம், பால் வேறுபாடுகளைத் தொடர்வதன் வழியாகக் கிடைக்கும் ஆதாயங்களை வைத்துக் கட்டமைக்கப்பட்ட சமன்பாடுகள். இத்தகைய சடங்கார்த்த சமன்பாடுகளை பெண்களுக்கு எதிராக அல்லது ஒரு சாராருக்கு மட்டுமே ஏற்றதாகத் தொடர்வது திரைத்துறையின் வீழ்ச்சியில் தான் முடியும்.

இவ்விடத்தில், படைப்புவெளியினைத் தம் களம் ஆக்க உழைக்கவேண்டியிருப்பதைப் போலவே, பெண்கள் தொழில்நுட்பச் சாதனைகளை நிகழ்த்தும் முனைப்பிலும் கடுமையாக ஈடுபடவேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன். ஒளிப்பதிவத் துறை நாளுக்கு நாள் தன்னை புதுமைப்படுத்திக்கொள்வதுடன், ஒட்டுமொத்தத் திரைத்துறையையுமே புதிய திசைக்கு அழைத்துச் செல்லும் துறையாக மாறிகொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்:

நான் ஏன் சமத்துவத்திற்காக போராடுகிறேன்?: உடுமலை கெளசல்யா

குடும்பம், பாலுறவு, குழந்தைகள் நலனில் இந்தியாவின் நிலை - 15 தகவல்கள்

இதன் கலைத்துவத்தில் தேர்ந்து நிபுணத்துவம் பெறுதல் திரைத்துறையை பெண்களுக்கான வெளியாக மாற்றிக்கொடுக்கும் கதவுகளைத் திறக்கும் அதிகச்சாத்தியங்களைக் கொண்டது. பெண்ணைப்பார்க்கும் பார்வை, கதாபாத்திரச்சித்திரிப்பு, கதைக்களம், கதையின் போக்குகள் இவற்றைப்பெருமளவில் மாற்றியமைக்க ஒளிப்பதிவுத் துறையில் பெண்கள் கொள்ளும் அறிவும் திறமையும் உதவும்.

'சினிமாவின் திசை' - ஒரு திரைப்பட பாடலாசிரியரின் அனுபவ பகிர்வு!
Getty Images
'சினிமாவின் திசை' - ஒரு திரைப்பட பாடலாசிரியரின் அனுபவ பகிர்வு!

அவ்வப்பொழுது, பெண்ணிய, பெண்நிலைவாத சினிமா என்ற விவாதங்கள் பொதுவெளியில் வந்து போகின்றன. ஆண் திரை இயக்குநர்கள், பெண்களை முதன்மையாக வைத்துப் படைக்கும் திரைப்படங்கள் அதிகமாவதை மிக நல்ல சூழலாகப் பார்க்கிறேன்.

பெண்கள் மட்டுமே பெண் விடுதலைக் கருத்துகளையும், விடுதலையான கதாபாத்திரங்களையும் முன்வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சொல்லப்போனால், ஆண்களின் பார்வைகள், பெண்கள் வழியாக அவர்கள் எதிர்கொள்ளும் உலகம் நம் மானுட விடுதலைக்கும், சமூகநீதிக்கும் முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.

சமீபத்திய, 'அறம்', 'அருவி' படங்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன். லாரா முல்வி என்ற பெண்ணிய அறிஞர், திரைப்படத்தின் வழியாக நிறுவப்படும் பெண்மீதான ஆண்களின் பார்வைகளைக் கடுமையாக விமர்சித்தார். இயக்குநர் முன்வைக்கும் பெண் மீதான பார்வை, கேமரா வழியாகப் பார்க்கப்படும் பெண் உடல், பார்வையாளர்களின் புலன்களால் உணரப்படும் பெண் உடல் இம்மாதிரியான வன்முறைகளையும், தாக்குதல்களையும் மாற்றியமைக்கக்கூடிய முயற்சிகள் ஆண்படைப்பாளிகள் வழியாக நிகழவேண்டியது தற்கால அவசியம்.

பால் வேறுபாடுகள் உதவாது

வணிக சினிமா, கலை சினிமா என்று திரைத்துறையைக் கூறுபோட்டாலும், கலை சினிமா இம்மாதிரியான கட்டுமானங்கள், கட்டுப்பாடுகளைப் புறக்கணிக்கும் விடுதலையான சினிமாவிற்கான வாய்ப்பு என்றே கொள்ளவேண்டும். இந்த வணிக, வியாபார அழுத்தங்களுக்கு இரையாக விரும்பாத கலைஞர்கள், சினிமாவை ஒட்டுமொத்த மானுடத்திற்குமான சிந்தனை வெளியாக உணர்ந்து இயங்குவதில் ஈடுபடுகின்றனர். இரு புறம் கூர்முனை கொண்ட கத்தியை ஆபத்தில்லாமல் பயன்படுத்தலாம்.

அதிகபட்ச தாக்கத்தையும், வன்முறையான பேதலிப்பான வாழ்விலிருந்து உலக மனிதனை விடுவிக்க, இன்று நம் கையில் இருக்கும் ஒரே அரிய வாய்ப்பும் சினிமா தான். இதன் வழியாக, பிழைகளைத் திருத்தலாம், புதிய பாதைகளை வகுக்கலாம், சமூகநீதியை நிலைநாட்டலாம். புதிய நன்மனித மாதிரிகளை உலகத்திற்குக் காட்டலாம். மனிதனின் அறிவாயுதத்தின் நன்மை தீமைகளைக் கலைத்துவப்படுத்தலாம். இதுவெல்லாம் நிகழ, சினிமாவின் பால் வேறுபாடுகள் உதவாது, அவசியமும் இல்லை.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
இந்திய திரைத்துறையில், பாலின ரீதியான தாக்கங்கள் தொடர்பான புதிய தொடரை பிபிசி வெளியிடுகிறது. அதில் பல்வேறு கலைஞர்கள், படைப்பாளர்களின் உணர்வுகளும், கருத்துக்களும் இதில் இடம் பெறுகின்றன. பாடலாசிரியர் குட்டி ரேவதியின் பார்வை, முதல் படைப்பாக இடம் பெறுகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X