For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காவல்துறையை மீட்க ‘மாநில பாதுகாப்பு ஆணையம்’ அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

சீரழிந்து வரும் தமிழக காவல்துறையை மீட்க உடனடியாக மாநில பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஆறு ஆண்டுகளாக சீரழிந்து வரும் தமிழக காவல்துறையை மீட்க உடனடியாக 'மாநில பாதுகாப்பு ஆணையம்' அமைக்க வேண்டும்" என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

'ஸ்காட்லாண்ட் யார்டு' காவல்துறைக்கு இணையான திறமை கொண்டது, என்று பெயரெடுத்தத் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள், கடந்த ஆறு ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஒருசில காவல்துறை அதிகாரிகளால் சீரழிந்து நிற்கிறது. ஓய்வுபெற்ற டி.ஜி.பி. பிரகாஷ் சிங் தொடர்ந்த வழக்கில், அரசியல் தலையீடுகளில் இருந்து காவல்துறையைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு போலீஸ் அதிகாரியை "சட்டம் - ஒழுங்கு" டி.ஜி.பி. பதவிக்குப் பொறுப்பு அதிகாரியாக (Incharge) இரு வருடங்கள் நியமித்தது. பிறகு அவர் ஓய்வுபெறும் நேரத்தில் இரு வருடங்கள் 'பணி நீட்டிப்பு' அளித்து, தேர்தல் முறைகேடுகளுக்கும், எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடவும் மட்டுமே டி.ஜி.பி.களை பயன்படுத்தும் கேடுகெட்ட நிர்வாகத்தை அதிமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

போராடுபவர்கள் மீதே புகார்

போராடுபவர்கள் மீதே புகார்

ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது தடியடி, பொதுமக்கள் மீது ‘தீவைத்தல்' புகாரைப் போடும் போலீசாரின் புதுவிதமான கலை. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் முன்பே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கைது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் தாய்மார்கள் மீது தடியடி, சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டம் பற்றி துண்டுப் பிரசுரம் கொடுத்த மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது என்று தொடர்கிறது அவலம். சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றிய திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது, நீட் தேர்வு பற்றி துண்டு பிரசுரம் கொடுத்தால் தேசத்துரோக வழக்கு போடப்படுகிறது. இன்னொரு மாநிலத்திற்கே காவல்துறையினரை அனுப்பி ஆள்பிடிக்கும் வேலையில் அந்தத்துறையினைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் உச்சநீதிமன்றம் வழங்கிய, ‘2 ஆண்டுகால பணிப் பாதுகாப்பு', என்ற நோக்கத்தை தோற்கடித்திருக்கிறது.

அடக்குமுறை செய்யும் போலீஸ்

அடக்குமுறை செய்யும் போலீஸ்

இப்படியான பணிப் பாதுகாப்புப் பெறும் டி.ஜி.பி.கள் அரசின் தலையாட்டி பொம்மைகளாக மாறி, பதவியைக் காப்பாற்றிக் கொள்ளக் காவல்துறையின் சுதந்திரத்தை அதிமுகவிற்கு தாரைவார்த்து விட்டார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வருமான வரித்துறையால் ‘குட்கா மாமூல்' புகார் சாட்டப்பட்ட ஒருவரை, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்து, எதிர்கட்சிகளின் மீது பொய் வழக்குகள் போடவும், பொதுமக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவும், காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பண விநியோகம் செய்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமே உத்தரவிட்டும் இதுநாள் வரை அமைச்சர்கள் மீதோ, முதலமைச்சர் மீதோ வழக்குப் பதிவு செய்ய முடியாத ஒரு தலைமை, தமிழக காவல்துறைக்குக் கிடைத்திருப்பது கவலைக்குரியது.

சட்டம் ஒழுங்கு கையாள்வதில் தோல்வி

சட்டம் ஒழுங்கு கையாள்வதில் தோல்வி

இது ஒருபுறமிருக்க, டி.ஜி.பி.யே உளவுத்துறைக்கும் ‘பொறுப்பு டி.ஜி.பி.யாக' இருக்கிறார். இதனால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாளுவதில் தோல்வியடையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குறித்து, ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளால் டி.ஜி.பி.யிடம் கூறிட முடியவில்லை. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உளவுத்துறையால் ஏதும் செய்ய முடியாமல், ‘அரசியல் பணிகளை' மட்டும் செய்யும் நிலைக்கு உளவுத்துறை தள்ளப்பட்டுள்ளது.

வரலாறு காணாத சீரழிவு

வரலாறு காணாத சீரழிவு

இப்படியொரு வரலாறு காணாத சீரழிவைத் தமிழக காவல்துறை சந்தித்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, எண்ணற்ற நேர்மையான டி.ஜி.பி.க்கள் இருந்தும் திறமையற்ற தலைமையின் கீழ் தமிழக காவல்துறை இன்றைக்கு நிலைகுலைந்து நிற்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அத்துமீறிய தலையீடுகளால் காவல்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே, காவல்துறை நிர்வாகத்தின் சீரழிவை தடுத்து நிறுத்த, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ன் கீழ் அமைக்கப்படவேண்டிய, ‘மாநில பாதுகாப்பு ஆணையம்' (State Security Commission) இப்போது மிகவும் அவசியமாகிறது. காவல்துறையினர் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான கொள்கை வழிகாட்டுதல், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல்பாடுகளை எல்லாம் காவல்துறைக்கு வகுத்துக் கொடுத்தல், பொறுப்புணர்வுடன் காவல்துறை செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு இந்த மாநில பாதுகாப்பு ஆணையத்தின் பணி மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

வழிகாட்டுதல்களை உருவாக்க முடியும்

வழிகாட்டுதல்களை உருவாக்க முடியும்

காவல்துறைக்கான அமைச்சர், எதிர்கட்சி தலைவர் மட்டுமின்றி, அரசு பணியாளர் தேர்வாணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில மகளிர் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம் போன்றவற்றின் தலைவர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரையும் இந்த ஆணையம் உறுப்பினர்களாக கொண்டிருக்கும். இதனால் தமிழக காவல்துறை சீரமைப்பிற்கான ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களை உருவாக்கிட முடியும் என்று நம்புகிறேன்.

உடனடியாக நிறைவேற்றுக

உடனடியாக நிறைவேற்றுக

அதுமட்டுமின்றி, இந்த ஆணையத்தின் அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதால், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் பற்றிய ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்கமுடியும். ஆகவே, நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்ததுபோல், தமிழக காவல்துறைக்கு ‘கொள்கை வழிகாட்டுதல்களை' உருவாக்க, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான ‘மாநில பாதுகாப்பு ஆணையத்தை' தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK working President M.K.Stalin urges Tamilnadu Chief secretary that to make reforms in Police department form immediately State Security Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X