பாஜகவினரை எம்.எல்.ஏக்களாக நியமிப்பதா? கிரண்பேடிக்கு எதிராக தமிழகமும் போராட வேண்டும்: மணியரசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவினரை எம்.எல்.ஏக்களாக நியமித்து தன்னலப் போக்கில் செயல்படும் புதுவை ஆளுநர் கிரண்பேடியை திருப்பி அனுப்ப தமிழகத்திலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுவை மாநிலத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அத்து மீறல்களும், தன்னல நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் அன்றாடம் பெருகிக் கொண்டே வருகின்றன. அண்மையில் முதலமைச்சர், அமைச்சரவை ஆகிய சட்டப்படியான ஜனநாயக நிறுவனங்களைப் புறந்தள்ளிவிட்டு, பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை புதுவை சட்டப்பேரவையின் நியமன உறுப்பினர்களாக அமர்த்தி, அவர்களுக்கு கமுக்கமாகப் பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு ஓர் உறுப்பினர் கூட இல்லை. பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக உள்ள சாமிநாதன் என்பவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு காப்புத்தொகை இழந்தவர். மேற்படி சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. பொருளாளர் சங்கர், பா.ஜ.க.வைச் சேர்ந்த பள்ளிக்கூட அதிபரும், ஆர்.எஸ்.எஸ். ஊழியருமான செல்வகணபதி ஆகிய மூவரையும் நடுவண் அரசுக்கு, கிரேன்பேடி பரிந்துரை செய்து உள்துறையின் ஒப்புதல் கடிதம் பெற்று, அம்மூவருக்கும் பதவியேற்பு உறுதிமொழியும் செய்து வைத்துள்ளார்.

எம்.எல்.ஏக்களாக பாஜக நிர்வாகிகள்

எம்.எல்.ஏக்களாக பாஜக நிர்வாகிகள்

புதுவை மாநில அமைச்சரவையைப் புறந்தள்ளிவிட்டு, சட்டப்பேரவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மூவர் பெயரை நடுவண் அரசுக்குக் கிரேன்பேடி பரிந்துரை அனுப்பிய உடனே அதை இரத்து செய்ய கேட்டு, புதுவை சட்டப்பேரவைக் காங்கிரசு உறுப்பினர் லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. நீதித்துறையையும் புறக்கணித்துவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் அவசரத்துடன் கிரேன்பேடி இம்மூன்று பேருக்கும் பதவியேற்பு உறுதிமொழி வழங்கினார்.

அத்துமீறும் பேடி

அத்துமீறும் பேடி

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை, முதல்வரின் நிதி அதிகாரம் முதலியவற்றில் தலையிடுவது, கிரேண்பேடியின் அன்றாட நடவடிக்கைகளாக உள்ளன. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமலேயே அத்தொகுதியில் திடீர் ஆய்வு என்று தெருக்களில் சுற்றுவதும் அடிக்கடி நிகழ்கிறது. இவற்றிலெல்லாம், புதுவை முதலமைச்சர் நாராயணசாமியைப் புறந்தள்ளி, கிரண்பேடி அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து வருகிறார்.

ஒழுக்கமே இல்லை

ஒழுக்கமே இல்லை

பாரதிய ஜனதா கட்சிக்கு ஆன்மிக ஒழுக்கமும் இல்லை; அரசியல் ஒழுக்கமும் இல்லை! பா.ச.க.வின் நடுவண் அரசுதான் கிரேண் பேடியின் இத்தனை அத்துமீறல்களுக்கும் அதிகார அலங்கோலங்களுக்கும் பின்னணித் தூண்டுதலாகச் செயல்படுகிறது.

தமிழகமும் போராட வேண்டும்

தமிழகமும் போராட வேண்டும்

மாநில உரிமைகளை நடுவண் அரசு பறிப்பதை ஜனநாயக உணர்வாளர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும். அத்துடன் புதுச்சேரி என்பது தமிழர்களின் இன்னொரு தாயகம்! அதிகார வெறியோடும், அலங்கோல உளவியலோடும் அத்துமீறல்கள் செய்து, புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், சனநாயகத்தையும் சீர்குலைக்கும் "துணைநிலை ஆளுநர் கிரேன்பேடியைத் திரும்ப அழைத்துக் கொள்" என்று தமிழ்நாட்டுத் தமிழர்களும், புதுவைத் தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும். தமிழ்நாட்டுக் கட்சிகளும் அமைப்புகளும் இந்த முழக்கத்தை முன்வைத்துப் போராட வேண்டுமென்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

முழு அடைப்புக்கு ஆதரவு

முழு அடைப்புக்கு ஆதரவு

கிரண்பேடியை வெளியேற்றுவதற்காக வரும் சூலை 8 அன்று, புதுச்சேரியில் நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் புதுச்சேரி பிரிவு பங்கேற்கிறது. அதனை வெற்றிகரமாக செயல்படுத்திட புதுவை மக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thamizh Desiya Periyakkam President P Maniarasan demanded the recall of Puducherry Lt. Governor Kiran Bedi.
Please Wait while comments are loading...