For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 முடிவுகள்: தோல்விக்கு பயந்து வாழ்க்கையை தொலைத்த மாணவ, மாணவிகள்

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைகளைத் தாண்டி வருபவர்கள்தான் புடம் போட்ட தங்கமாக மாறுகின்றனர்.

ஆனால், பள்ளித் தேர்வின் தோல்வியைச் சகிக்க முடியாத சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அவர்களின் எதையும் தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையை காட்டுகின்றது.

தேர்வு சமயங்களில் இதுபோன்று மாணவர்கள் மத்தியில் ஏற்படும் அச்சங்களையும், படபடப்பையும் தவிர்ப்பதற்காக பள்ளிக் கூடங்களில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.

தோல்வி பயம்:

ஆனால் மாணவர்கள் மத்தியில் நிலவும் தேர்வு பயமும், தோல்வி பயமும் தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகள் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

தற்கொலை சோகம்:

இந்த ஆண்டும் வேதனை அளிக்கும் விஷயமாக 5 மாணவிகள் தங்களது இன்னுயிரை போக்கியுள்ளனர்.சாதித்த மாணவர்கள் வெற்றிக் கோட்டை எட்டிப்பிடித்துவிட்ட சந்தோஷத்தில் ஒரு பக்கம் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தோல்வியால் துவண்டு போன 5 மாணவிகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித்தொழிலாளி மகள்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வீரராகவனின் மகள் கவுசல்யா. கணிதத்தில் 48 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார்.இதனால் விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இருவர்:

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணையை சேர்ந்த சுகன்யா, ஊட்டி தலைக்குந்தா பகுதியை சேர்ந்த மாணவி கவிதா ஆகியோர் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயி மகள்:

திருவாரூர் அருகே மூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி லட்சாதிபதியின் மகள் அகிலா, 575 மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற்ற நிலையிலும் மார்க் குறைவாக இருந்ததால் மண்எண்ணை ஊற்றி தீக் குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

சேலம் மாணவி:

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த ஏரிக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சுதாவும் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

13 பேர் உயிர்தப்பினர்:

இப்படி 5 மாணவிகளை தோல்வி பயம் காவுவாங்கி இருக்கும் நிலையில் 13 மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியிருக்கிறார்கள். இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாணவன்:

சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த மாணவர் சிவகுமார் 1000 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 786 மார்க்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தார்.பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாணவர்:

பண்ருட்டியை அடுத்த சோலை கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ராம்கி தேர்ச்சியடையவில்லை. இதனால் மனம் வருந்தி வேதனைப்பட்ட அவர் உயிரை மாய்த்து கொள்ள விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அந்த மாணவனை பெற்றோர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

3 முறை தோல்வி:

சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் வசித்து வரும் மாணவி ஒருவர் 3 முறை பிளஸ் 2 தேர்வை எழுதி தோல்வியடைந்த நிலையில் 4-வது தடவையும் தேர்வில் தோல்வியை தழுவினர். இதனால் விஷம்குடித்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2 பாடங்களில் தோல்வி:

வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியை சேர்ந்த சரண்யா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்ததால் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

காஞ்சிபுரம் மாணவி:

சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி சுடர்ஒளி தோல்வி பயத்தில் தூக்கில் தொங்கினார். அவரை காப்பாற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.விருதுநகர் சத்திரரெட்டி பட்டியில் 800 மார்க் எடுத்த மாணவர் ஒருவர் விஷம் குடித்தார்.

அடுக்கடுக்காய் தற்கொலை:

மதுரை மாவட்டம் வில்லூர் புளியங்குளம் பகுதியிலும் விஷம் குடித்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டி வெலிங்டனில் தீக்குளித்த மாணவிக்கு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கெரசின் குடித்த மாணவிகள்:

திருவாரூர் நன்னிலத்தில் சூர்யா, ரம்யா என்ற 2 தோழிகளும் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தனர். கெரசின் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே பகுதியில் தேர்வில் தோல்வியடைந்த கவுசிகா என்ற மாணவியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

குறைந்த மதிப்பெண்:

விருதுநகர் அருகே உள்ள சத்தியரெட்டிய பட்டியை சேர்ந்த சுபலட்சுமி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மதிப்பெண் குறைந்ததால் விஷம் குடித்தார். அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றுமொரு மாணவர்:

எம்.புளியங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் செந்தில் பிளஸ் 2 பரீட்சையில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து விஷம் குடித்தார். அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலவீனமான மாணவிகள்:

இந்த சம்பவங்கள் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட 5 பேருமே மாணவிகள்தான். இதன் மூலம் மாணவிகள் மிக மிக பலவீனமான மனதுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

காலத்தின் மாற்றம்:

எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க கல்விதுறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆராய்ச்சி அவசியம்:

தற்கொலை எண்ணத்தை மாணவர்கள் மனதில் இருந்து அடியோடு ஒழிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கல்வி துறையினர் மேலும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தோல்வி மட்டும் வாழ்க்கை அல்ல:

அதே நேரத்தில் பள்ளித் தேர்வுகளில் பெறும் வெற்றி மட்டுமே தங்களது வாழ்க்கையை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை மாணவ,மாணவிகள் உணர வேண்டும். இதையும் தாண்டி சாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. தோல்விகள் மட்டுமே என்றும் சாஸ்வதம் அல்ல.ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுகள்தான் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

English summary
Many plus 2 students attempted to suicide and 5 members died. Younger generation didn’t have the capable of failures in heart and mind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X