வரத்து அதிகரிப்பு.. விலை குறைந்த மரவள்ளிக் கிழங்கு.. கவலையில் விவசாயிகள்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம், வேட்டமங்கலம், குந்தானிபாளையம், கவுண்டன்புதூர், ஒலப்பாளையம், நெய்யால், முத்தனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னம்பள்ளி, கீரனூர், நாமகிரி பேட்டை, தொ.ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயார் செய்யும் ஆலைகளுக்கு வாங்கி செல்கின்றனர்.

ஜவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளி கிழங்குக்கு விலை உயர்த்தியும், வீழ்ச்சி அடையும் போது மரவள்ளி கிழங்குக்கு விலை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜவ்வரிசி விலை சேகோசர்வ் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக மரவள்ளிக் கிழங்கு ஒரு டன் ரூ.10,000க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு டன் 4 ஆயிரத்துக்கு 500 க்கு ரூபாய்க்கு விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிக்க கூடிய கிழங்குகள் ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
ஜவ்வரிசி விலை தொடர்ந்து விழ்ச்சி அடைந்து வருவதினாலும், கிழங்கின் வரத்து அதிகரித்து உள்ளதாலும் மரவள்ளிக் கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications