For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம்… வைகோ தொடங்குகிறார்: மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் மேற்கொள்ள உள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013) சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரிமாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

MDMK chief Vaiko meets people for LS election

தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு, நாட்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற அரசியல் கட்சியாக இயங்குகிறது.

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க, பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையில் "சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு" என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்து, அந்த விடியலை இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால், தமிழகத்திலும் தரணி எங்கும் தன்மானம் உள்ள தமிழர்கள் நெஞ்சில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்று இருக்கிறது.

ஸ்டெர்லைட் நாசகர நச்சு ஆலையை அகற்றுவது உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும்; கூடங்குளம் அணு உலையை அகற்றுவதிலும்; தமிழகத்தின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் அடியோடு நாசமாக்கும் விதத்தில் கடந்த ஆட்சிலும், இந்த ஆட்சியிலும் நடைபெற்று வருகிற ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை என பெரும் ஊழலை தடுத்து நிறுத்த வேண்டிய சூழலை உருவாக்கவும் சமரசமின்றிப் போராடி வருகிறது.

மது எனும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும் ஊழலை அகற்ற, பொதுவாழ்வில் தூய்மையை நேர்மையை நிலைநாட்டப் பாடுபட்டு வருகிறது.

துளி அளவும் வன்முறையில் ஈடுபடாத செயல்பாட்டினால் சாதி, மத வேற்றுமைக்கு அணுஅளவும் இடம் தராமல், மனிதநேயத்தோடு மக்களுக்குத் தொண்டு ஆற்றி வருவதால், நாட்டு மக்களின் நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்று நாளும் வளர்ந்து வருகிறது.

இந்திய அரசியலில் மாற்றம் இன்றியமையாதது ஆகும்."ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களுக்கும் கேடும் துரோகமும் செய்து வரும் ஊழல் சாம்ராஜ்யமாகிவிட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து, அதிகாரப் பீடத்தில் இருந்து அகற்றுவது ஒன்றே நமது உடனடி இலக்கும் கடமையும் ஆகும்" என்று விருதுநகர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் சூளுரைத்ததை முனைந்து செயலாற்றுவது என்றும்,

"மக்களிடம் செல்" என்ற அண்ணா அவர்களின் மணிவாசகத்தை மனதில் நிறுத்தி, தமிழக மக்களிடம் நாட்டு நலனைக் காக்கும், ஜனநாயகக் கடமையாற்றவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் களப் பணிகளில் கழகம் ஈடுபடுவது என்றும்,

'மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை' பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்வதென்றும், அதற்கான ஆயத்தப்பணிகளை மாவட்டச் செயலாளர்கள் முன்னெடுப்பது என்றும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

English summary
General secretary Vaiko will renaissance travel and meet to people MDMK high command meeting passed resolution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X