For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்னல் வீக்… மாயமான டார்னியர் விமானத்தை தேடும் பணி 8 வது நாளாக தொடர்கிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீர் மூழ்கிக்கப்பல், 12 கடற்படை கப்பல்கள், மூன்று ஹெலிகாப்டர்கள் என சல்லடை போட்டு தேடியும் மாயமான கடலோர காவல் படையின் 'டார்னியர்' விமானத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிக்னல் கிடைத்ததாக கூறப்பட்ட பழையாறு அருகே கடல் பகுதியில் தேடும் பணி 8 வது நாளாக தீவிரமடைந்துள்ளது. விமானத்தில் இருந்து சிக்னல் விட்டு விட்டு கிடைப்பதாலும், சிக்னல் மிகவும் பலவீனமாக இருப்பதாலும் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் இருந்து கடந்த 8ம்தேதி புறப்பட்டு சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் மாயமானது. அதில் இருந்த விமானிகள் சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. 3 பேருடன் மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விமானத்தை கடந்த ஒரு வாரமாக தேடி வருகின்றனர்.

மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி சிக்னல் (சோனார் லொகேட்டர் பீகான்) கடலுக்கு அடியில் இருந்து வருவதை கண்டுபிடித்தது. 37.5 கிலோ ஹெட்ஸ் அலைவரிசையுடன் கூடிய அந்த சிக்னல் மிகவும் பலவீனமாக இருந்தது. மேலும் சிக்னல் தொடர்ச்சியாக வராமல் விட்டு விட்டு வந்தது. தற்போது சிக்னல் கிடைக்கும் கடல் பகுதிக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போதுதான், திருச்சி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனவே அந்த இடத்தில்தான் விமானம் விழுந்து நொறுங்கி மூழ்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல்

ஆழ்கடலில் தேடுவதற்காக 'ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ்' என்ற நீர்மூழ்கி கப்பல் வரவழைக்கப்பட்டது. இக்கப்பல் காரைக்கால் அருகே தேடும் பணியில் ஈடுபட்டதில் மாயமான விமானத்தின் அடிப்பகுதியில் பொருத்தியிருந்த ஏ.டி.எஸ்.பி. கருவியிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் 12 கடற்படை கப்பல்கள் மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றொரு டார்னியர் விமானம் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றின் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மீன்பிடிக்கத் தடை

மீன்பிடிக்கத் தடை

மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் தேடுதல் வேட்டைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பழையாறு கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியைத் தேடி

கருப்புப் பெட்டியைத் தேடி

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓசியனோகிராபி' (என்.ஐ.ஓ.) குழு காணாமல் போன டார்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையாறு - சிதம்பரம் இடையேயுள்ள கடல் பகுதியில் 50 கி.மீ. துாரத்தில் 840 மீட்டர் ஆழத்தில் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விமானம் கண்டறியப்பட்டதாகவும் நேற்று காலை தகவல் வெளியானது. இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது ஊர்ஜிதமாகவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

உறுதி செய்யப்படவில்லை

உறுதி செய்யப்படவில்லை

இது தவறான தகவல். எண்ணெய் படலம் மற்றும் சிக்னலைத் தொடர்ந்து நீர்மூழ்கி கப்பல் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை விமானம் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை'' என்று கடலோர காவல் படை ஐ.ஜி. ஷர்மா கூறியுள்ளார்.

மேலும் சிக்னல் வரும் பகுதியில் கடலின் மேற்பரப்பில் வண்ணமயமான எண்ணெய் படலம் மிதப்பது கண்டு அறியப்பட்டது. அது விமானத்தின் எரிபொருள் டேங்கில் இருந்து கசிந்த எரிபொருளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த எண்ணெய் படலத்தை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஸ்கேன் செய்தும் பலனில்லை

ஸ்கேன் செய்தும் பலனில்லை

இதனிடையே கடலுக்கு அடியில் ஸ்கேன் செய்தபோது விமானம் உய்வம் எதுவும் பதியவில்லை என தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஆத்மானந்த் தகவல் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் 'சாகர்நிதி' ஆராய்ச்சிக் கப்பல் ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள பொருட்களை ஸ்கேன் செய்யும் பணியை தொடர்ந்து வருகிறது.

அதிகாரிகள் ஆலோசனை

அதிகாரிகள் ஆலோசனை

மாயமான விமானத்தில் இருந்து சிக்னல் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் திடீரென முற்றிலும் நின்றுபோனதால் கடலோர காவல்படை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாயமான மலேசியா விமானத்தைப் போல கடலோர காவல்படை விமானத்தின் தேடும் பணியும் கைவிடப்படுமோ என்ற அச்சம் விமானிகளின் உறவினர்களிடையே எழுந்துள்ளது.

கவலையில் உறவினர்கள்

கவலையில் உறவினர்கள்

மாயமான விமானத்தில் பயணித்த விமானி சுபாஷ்சுரேஷ் சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரைச்சேர்ந்தவர். சுரேஷ் மாயமாகி 8 நாட்கள் ஆனதால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதேபோல விமானி எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரின் குடும்பத்தினரும் சென்னைக்கு வந்து கவலையுடன் காத்திருக்கின்றனர்.

வருகைக்காக காத்திருக்கிறோம்

வருகைக்காக காத்திருக்கிறோம்

இந்தநிலையில் சுபாஷ்சுரேஷின் மனைவி தீபலட்சுமி தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் ‘‘சுபாஷ் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்'' என எழுதி உள்ளார்.

பிரதமருக்கு கோரிக்கை

பிரதமருக்கு கோரிக்கை

மேலும் அவர் பிரதமருக்கு ஒரு கோரிக்கை வைத்து உள்ளார். அதில், ‘எனது கணவர் விமானி சுபாஷ்சுரேசை கடந்த 8 தினங்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க நீங்கள் தலையிட வேண்டும்' என கோரிக்கை விடுத்து உள்ளார்.

English summary
For over 170 hours by press time on Monday night. CG-791, deployed from Coast Guard Air Station, Chennai, for surveillance of the Tamil Nadu coast and Palk Bay on the evening of June 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X