For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் சட்டசபைக்கு செல்வது ஏன்.. விளக்கம் தந்த ஸ்டாலின்

நாளை முதல் சட்டசபைக்கு செல்லவுள்ளது ஏன் என்பது குறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்யும் வரை சட்டசபைக்கு போக மாட்டோம் என்று கூறிய ஸ்டாலின் நாளை முதல் சட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"நாங்கள் எதிர்க்கட்சியினர்தானே தவிர, எதிரிக்கட்சியினர் அல்ல. இந்தப் பேரவையிலே இருக்கின்ற யாருமே எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலே எதிரிகளும் அல்லர். எல்லோருமே தமிழக மக்களுக்கு நண்பர்களாகச் செயல்படவேண்டிய பொறுப்பிலே இருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையுள்ளவர்களாகக் கடமையாற்ற வேண்டியவர்களாகிறோம்.

அதற்குரிய வாய்ப்பு இந்த அவையிலே கிடைக்கும் என்று நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்" என்று இன்றைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பேற்ற நேரத்தில் உரையாற்றி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், தொடக்கத்திலிருந்து மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை எடுத்துவைத்து ஜனநாயக ரீதியாகவும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும் ஆக்கபூர்வமாகவும் ஆர்வத்துடனும் சட்டமன்றத்தில் பணியாற்றி வந்ததை அனைவரும் அறிவர்.

சட்டநெறிமுறைகள்

சட்டநெறிமுறைகள்

அதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுப் பிரச்சினை, நீட் தேர்வுப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை ஆகிய அனைத்துப் பிரச்சினைகளிலும் மக்களின் பொதுநலன்கருதி ஆளுங்கட்சியுடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்து தீர்மானங்களை நிறைவேற்றவும், சட்டங்களை நிறைவேற்றவும் துணை நின்றது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனாலும் அதிமுகவைப் பொறுத்த மட்டில்,பெரும்பான்மை இல்லாமல் சட்டநெறிமுறைகளுக்கு எதிராக,குறுக்கு வழியில், மத்திய பாஜக அரசின் உள்நோக்கத்துடன் கூடிய தயவில்,பதவியில் நீடிப்பதோடு மட்டுமின்றி, சட்டமன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் நசுக்கிப் பொசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

உயரிய மாண்பை சீர்குலைத்த அரசு

உயரிய மாண்பை சீர்குலைத்த அரசு

குறிப்பாக சட்டமன்ற நிலைக்குழுக்களை பல மாதங்கள் அமைக்காமலேயே சட்டமன்றத்தின் குரல் வளையில் கை வைத்தது இந்த அரசு. முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போதே,பேரவைத் தலைவர் நடுநிலை பிறழ்ந்து நடந்து கொண்டு , சட்டமன்ற மரபுகளுக்கும் நீதி-நியாய அடிப்படைகளுக்கும் விடைகொடுத்து , நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்து வரிசை வரிசையாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற குற்றவாளியான ஜெயலலிதாவிற்கே சட்டமன்றத்தில் படம் திறந்து அவையின் உயரிய மாண்பையும் கண்ணியத்தையும் சீர்குலைத்தார்.

திமுகவுக்கு வாய்ப்பு

திமுகவுக்கு வாய்ப்பு

மாநில சுயாட்சி பற்றிப் பேசுவதற்கே அனுமதி மறுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டு வந்ததற்கு,21 கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தார்கள். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை சட்டப்பேரவையில் பேசுவதற்கே திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு முறையாக வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

ஏமாற்றமே மிஞ்சியது

ஏமாற்றமே மிஞ்சியது

சட்டமன்ற ஜனநாயகம் பேராபத்துக்குள்ளாகி இருப்பதைத் தடுக்கவே ,பேரவைத் தலைவர் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானமே கொடுக்கப்பட்டது. அப்போதாவது மனமாற்றம் ஏற்பட்டு, அவையை ஜனநாயக நெறிமுறைகளின்படி, பிரதான எதிர்கட்சிக்கு அவையில் பேச்சுச் சுதந்திரத்தை அங்கீகரித்திடும் வகையில் நடத்துவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்; அதுவும் நடக்கவில்லை, ஏமாற்றமே மிஞ்சியது.

பொத்தாம் பொதுவாக

பொத்தாம் பொதுவாக

அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டங்களில் வலுவான எதிர்கட்சியாக உள்ள தி.மு.க.வின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் விதத்திலேயே அலட்சியமாக சர்வாதிகார ரீதியில் நடந்து கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக 13 பேர் உயிரைப் பறித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை "துப்பாக்கிச் சூடு "பற்றியே அவையில் பதிவு செய்யாமல், ஒரு முதலமைச்சர் குறிப்பாக விபரங்களைச்சொல்லிப் பதிலளிக்காமல், பொத்தாம் பொதுவாகப் பேசி அவையின் உரிமையை மீறினார்.

விபரீத நிலை

13 பேர் இறந்ததை "படுகொலை " என்று கூட பதிவு செய்திட முதலமைச்சருக்கும் மனமில்லை; அனுமதிக்க பேரவைத் தலைவருக்கும் விருப்பம் இல்லை என்ற வினோதமான விபரீத நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடவடிக்கைகள் மக்கள் நலனை மறந்து, ஏதோ பெயருக்காக நடைபெறுகின்றன.

மறுத்துவிட்டார்கள்

மறுத்துவிட்டார்கள்

இதைத் தடுத்து நிறுத்திட ,அவை நடவடிக்கைகளை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்கள் அறிந்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தாலும், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்திற்காக, அதையும் மறுத்துவிட்டார்கள்.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

வீண்விழா கொண்டாட்டங்களிலும் வெற்று விளம்பரங்களிலும் கோடி கோடியாக அரசுப் பணத்தைக் கொட்டிச் செலவழிக்கும் இந்த அரசு, அவையின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பணமில்லை என்று பச்சைப் பொய்யைக் கூறியது. ஆக்கபூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையோடும் முறையான விவாதங்களுடன் நடைபெறவேண்டிய சட்டமன்றத்தில், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி வாதிடவும் தொகுதிமக்களின் கோரிக்கைகளை எடுத்துவைக்கவும் அனைத்துக் கதவுகளும் அறவே மூடப்பட்டு விட்டன.

முறைபடியான நடவடிக்கை

முறைபடியான நடவடிக்கை

துப்பாக்கிச்சூட்டையே மறைத்திடும் முதலமைச்சரின் முயற்சியினாலும் , ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முறைப்படியான நடவடிக்கை எடுக்காததாலும், இனியும் சட்டமன்றத்தில் அமர்ந்து பொய்புரட்டுகளையும் வறட்டு விளக்கங்களையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டு அமைதிகாப்பது, வாக்களித்த மக்களை வஞ்சிப்பதாக அமையும் என்றே சட்டமன்ற நடவடிக்கைகளை இந்தத் தொடர் முழுவதும் புறக்கணிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகக் கொறடா அறிவித்தார்.

அக்கறையோடு ஆலோசனை

அக்கறையோடு ஆலோசனை

கடந்த 1.6.2018 அன்று திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கலைஞரின் 95வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மரியாதைக்குரிய தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் "திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற நடவடிக்கைகளில் மீண்டும் பங்கேற்க வேண்டும்" என்று மிகுந்த அக்கறையோடு ஆலோசனை வழங்கினார்கள்.

ஜனநாயக விரோத எண்ணங்கள்

ஜனநாயக விரோத எண்ணங்கள்

அதிமுக அரசின் அடாவடிகளாலும் அடக்குமுறைகளாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் பல்வேறு தரப்பு மக்களும் "நீங்கள் சட்டமன்றத்திற்குச் செல்லுங்கள்;. எங்களுடைய குரலை பிரதிநிதித்துவப் படுத்துங்கள்; அப்போதுதான் எங்களுக்குச் சரியான பாதுகாப்பு" என்று வலியுறுத்தினார்கள். குறிப்பாக, பலர் என் செல்பேசியிலேயே அழைத்து, "நீங்கள் வெளியில் இருந்தால் அதிமுக அரசு மக்கள் விரோதத் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி விடுவார்கள்; ஜனநாயக விரோத எண்ணங்களைப் பதிவு செய்து விடுவார்கள்" என்று கூறி "சட்டமன்றம் செல்ல வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நேற்று (2.6.2018) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதித்து, சட்டமன்றத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுத்து உருவாக்கிட ,மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம். பேரவைத் தலைவரை, பதவியில் அமர்த்திய போது இருந்த அந்த நம்பிக்கை இடையில் தளர்ந்து விட்டாலும், என்றைக்கும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயலாக்கத்தில் ஈடுபாடு காட்டும் மாபெரும் இயக்கம் திமுகழகம் என்ற அடிப்படையிலும், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சட்டமன்றத்திற்குச் செல்கிறோம்.

ஆக்கபூர்வமான விவாதங்கள்

ஆக்கபூர்வமான விவாதங்கள்

எவ்வளவு குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அதிமுக அரசின் ஜனநாயக விரோத-சட்டவிரோத நடவடிக்கைகளை எப்போதும்போல உறுதியாக எதிர்கொண்டு, தமிழக நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கபூர்வமான விவாதங்களில் மீண்டும் ஈடுபடுவோம்.

திமுக முடிவு

திமுக முடிவு

தமிழக மக்களின் நலனுக்காக வலிமையாக வாதாடுவதும் அறவழியில் அயராது போராடுவதும், இப்போது துப்பாக்கிச் சூட்டுக்குப்பின் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான நேரத்தின் அத்தியாவசியத் தேவை என்பதால், ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்து, இந்த முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்திருக்கிறது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகழகம் எடுக்கும் எந்த முடிவும், நாடு-இனம்-மொழி ஆகியவற்றை மையப்படுத்தியும், அவற்றின் பாதுகாப்பை முதன்மைப் படுத்தியும் அமைந்து வருவதை, தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

English summary
DMK Working President MK Stalin goes to Assembly session from tomorrow. He also explains why he goes to assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X