
திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு
சென்னை: அடுத்த தலைவராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அரியணை ஏறுவார் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சுப.வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன், திமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், இன்னும் நூறாண்டு காலத்துக்கு திராவிட இயக்கத்தின் தேவை இருக்கிறது எனக் கூறினார். மேலும் இந்த இயக்கத்தை தாங்கி வழி நடத்தும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அரியணை ஏறுவார் எனவும் துரைமுருகன் கூறினார்.

பழ.கருப்பையா பேசுகையில், திமுகவை ஸ்டாலின் காப்பாற்றுவார் எனவும் தமிழில் தேசிய கீதத்தை கொண்டு வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி எனவும் குறிப்பிட்டார்.