சென்னை அருகே கொடூரம்.. பெற்ற தாயையே அடித்து கொன்ற மகன்.. கஞ்சா வாங்க பணம் தராததால் ஆத்திரம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பெற்ற தாயையே கட்டையால் அடித்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு அருகே குதிரைக்காரர் வீதி பகுதியில் வசித்து வந்த பெண் பத்மினி.
பத்மினி அதே பகுதியில் சங்கு, மணி, துப்பட்டா, துணிப்பை போன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கும் பொருள்களை சாலையோரம் வைத்து விற்பனை செய்து வந்தார்.

கஞ்சா போதையில்
இதில் வரும் வருமானத்தை வைத்தே இவர் பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது இளையமகன் முரளி. கஞ்சா மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான முரளி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி கஞ்சா புகைத்து போதையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் தாய் பத்மினியிடமே செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார்.

பணம் கொடுக்க மறுத்ததால்..
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றும் அவர் கஞ்சா புகைத்துள்ளார். இதனால் போதை தலைக்கேறிய நிலையில், தாய் பத்மினியிடம் கஞ்சா வாங்க பணம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. ஏற்கனவே மகன் முழு போதையில் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முரளி பெற்ற தாய் என்றும் பாராமல் போதையில் கண்மூடித்தனமாக தாக்கினார். காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கினார்.

அடிக்காதே அப்பா.. வலிக்கிறது
இதனால் வழி தாங்க முடியாமல் பத்மினி கீழே விழுந்தார். அப்பவும் விடாமல் பணம் தருமாறு காலால் வயிற்றில் எட்டி உத்தைத்துள்ளார். அப்போது பத்மினி 'அடிக்காதே அப்பா.. வயிறு வலிக்கிறது..' என கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார். ஆனால் கஞ்சா போதையில் திளைத்த இளைஞர் முரளி பெற்ற தாய் என்றும் பாராமல் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த பத்மினி
இதில் துடிதுடித்து போன பத்மினி படுகாயத்துடன் அப்படியே மரணஓலமிட்டபடி கதறினார். சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கதினர் உடனடியாக பத்மினியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொலை வழக்கு
எனினும் சிகிச்சை பலனின்றி பத்மினி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாமல்லபுரம் போலீசார் முரளியை அப்பகுதியில் தேடினர். அப்போது அங்கு போதையில் சுற்றிக்கொண்டிருந்த முரளியை போலீசார் பிடித்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணம் கொடுக்க மறுத்ததால் பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications