For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமியில் பலியான குழந்தைகளை கடவுள்களாக்கி... வீட்டிலேயே கோயில் கட்டி வழிபடும் அப்பா!

Google Oneindia Tamil News

நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணத்தில் சுனாமி பேரலையில் தனது இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்த தந்தை ஒருவர், தனது வீட்டிற்குள்ளேயே அவர்களுக்காக கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்

கடந்த 2004ம் ஆண்டு சுனாமியில் தனது இரண்டு குழந்தைகளைப் பறி கொடுத்தவர் மாசிலாமணி. இவர் நாகப்பட்டிணத்தில் கலங்கரை விளக்கம் அருகே மரவாடித் தெருவில் குடிசை வீட்டில் தனது மனைவி புனிதா மற்றும் வளர்ப்பு மகள் சிவரஞ்சனியுடன் வசித்து வருகிறார்.

Nagapattinam: Person constucts temple for Tsunami victims

சுனாமிக்குப் பிறகு அரசு காடம்பாடி, அந்தணப்பேட்டை, மகாலட்சுமி நகர், செல்லூர், புதிய நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுத்தது. மற்றவர்கள் அனைவரும் அங்கு சென்று விட மாசிலாமணி குடும்பம் மட்டும் தொடர்ந்து அதே பழைய வீட்டில் வாழ்ந்து வருகிறது.

மேலும், தனது வீட்டிலேயே சுனாமியில் பலியான தனது இரண்டு குழந்தைகள் நினைவாக கோயில் ஒன்றையும் கட்டி வழிபட்டு வருகிறார் மாசிலாமணி. இது தொடர்பாக மாசிலாமணி கூறியதாவது :-

கடலில் தான் என் பிழைப்பு. அதனால், கடற்கரை பகுதியில் தான் எங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதி போகும். அன்றைக்கும் அப்படி தான், நான் கடற்கரை பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது, கடலிலிருந்து திடீரென ஒரு அலை வாரிச் சுருட்டியபடி உயரமாக கிளம்பி வந்தது. அதைப் பார்த்ததும் எல்லோரும் ஓட்டம் எடுத்தோம்.

ஆனால், எங்களை விட வேகமாக வந்த அலை எங்களை சுருட்டி தண்ணீரில் அழுத்தியது. அலையுடன் அடித்துச் செல்லப்பட்ட நான், கலங்கரை விளக்கத் தடுப்புச் சுவரில் மோதி விழுந்தேன். சில நிமிஷங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. பின்னர், தண்ணீர் வடிந்த பின் தான், நான் உயிரோடு இருப்பதையே என்னால் உணர முடிந்தது. அய்யோ, வீட்டிலிருந்தவங்க என்ன ஆனாங்களோ என வீட்டை நோக்கி ஓடினேன். ஆனால், நான் வாழ்ந்து பழகிய தெரு அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்திருந்தது. என் வீடு எனக்குத் தெரியல. எல்லாம் உடைஞ்சி கிடந்தது.

கடவுளே என் குழந்தைகள் எங்கேன்னு நினைச்சிக்கிட்டு தெருவை சுற்றிலும் பார்த்தேன். அப்போ என் மனைவி புனிதா எங்கிருந்தோ அழுது புலம்பிக் கொண்டு, தலையில் அடித்துக் கொண்டே ஓடிவந்தாள். சுனாமியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு ஒரு கழிப்பறையில் சிக்கியிருந்து மீண்ட என் மனைவியின் கையிலிருந்த 3 வயது மகள் சிவரஞ்சனியையும், வீட்டிலிருந்த 5 வயது மகன் சஞ்சய்யையும் காணோம் எனக் கூறி அவள் கதறியபோதே நான் பாதி செத்துட்டேன்.

இருந்தாலும், வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கிட்டு அங்கேயும், இங்கேயும் தேடினோம். ஆனால், என் பிள்ளைங்களோட பிணம் தாங்க கிடைச்சுது...

என் பிள்ளைங்களோட என் தம்பி பிள்ளைங்க, அக்கா குழந்தைகள்ன்னு 9 குழந்தைகளோட சடலங்கள், அங்கங்க கிடந்ததைப் பார்த்தப்போ, வாழ்க்கையே வெறுத்துடுச்சுங்க. பின்னர், எங்களின் திருப்திக்காக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். என்னோட மகளின் நினைவாக, நாங்கள் தத்தெடுத்த குழந்தைக்கும் சிவரஞ்சனி என்றே பெயர் வைத்துள்ளோம். 10 வயதாகும் அவருக்கு காது கேட்கவில்லை. திக்கி திக்கி பேசுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூட வசதியில்லை.

அரசு எங்களுக்கு சுனாமி வீடுகளை கட்டித் தந்தது. ஆனால் அந்த வீட்டுக்கு செல்வதற்கு எங்களுக்கு மனமில்லை. இந்த வீட்டில் இருக்கும்போது ஒரு நிம்மதி. சுனாமியில போன என் மகளும், மகனும் இங்க எங்கக் கூடவே இருப்பது போன்ற உணர்வு. இது போதும். வாழ்க்கையில் வேறெதுவும் வேண்டாம்' என கண்ணீருடன் கூறுகிறார் மாசிலாமணி.

English summary
In Nagapattinam, a person has constructed a temple for his children who died in 2004 Tsunami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X